வழக்குரை காதை


ஆங்குக்
குடையொடு கோல்வீழ நின்று நடுங்கும்
கடைமணி இன்குரல் காண்பென்காண் எல்லா
திசையிரு நான்கும் அதிர்ந்திடும் அன்றிக்
கதிரை இருள்விழுங்கக் காண்பென்காண் எல்லா
விடுங்கொடி வில்லிர வெம்பகல் வீழும்
கடுங்கதிர் மீனிவை காண்பென்காண் எல்லா

கருப்பம்

செங்கோலும் வெண்குடையும்
செறிநிலத்து மறிந்துவீழ்தரும்
நங்கோன்றன் கொற்றவாயில் 
மணிநடுங்க நடுங்குமுள்ளம்
இரவுவில்லிடும் பகல்மீன்விழும் 
இருநான்கு திசையும் அதிர்ந்திடும்
வருவதோர் துன்பமுண்டு 
மன்னவற் கியாம் உரைத்துமென
ஆடியேந்தினர் கலனேந்தினர்
அவிர்ந்துவிளங்கும் அணியிழையினர்
கோடியேந்தினர் பட்டேந்தினர்
கொழுந்திரையலின் செப்பேந்தினர்
வண்ணமேந்தினர் சுண்ணமேந்தினர்
மான்மதத்தின் சாந்தேந்தினர்
கண்ணியேந்தினர் பிணையலேந்தினர்
கவரியேந்தினர் தூபமேந்தினர்
கூனுங்குறளும் ஊமுங்கூடிய 
குறுந்தொழிலிளைஞர் செறிந்துசூழ்தர
நரைவிரைஇய நறுங்கூந்தலர்
உரைவிரைஇய பலர்வாழ்த்திட
ஈண்டுநீர் வையங்காக்கும் 
பாண்டியன்பெருந் தேவிவாழ்கென
ஆயமுங் காவலுஞ்சென் றடியீடு பரசியேத்தக்
கோப்பெருந் தேவிசென்றுதன் தீக்கனாத் திறமுரைப்ப
அரிமா னேந்திய அமளிமிசை இருந்தனன்
திருவீழ் மார்பின் தென்னவர் கோவே; இப்பால்,
வாயி லோயே வாயி லோயே
அறிவறை போகிய பொறியறு நெஞ்சத்து
இறைமுறை பிழைத்தோன் வாயி லோயே
இணையரிச் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளென்று
அறிவிப் பாயே அறிவிப் பாயே; என
வாயிலோன், வாழியெங் கொற்கை வேந்தே வாழி
தென்னம் பொருப்பின் தலைவ வாழி
செழிய வாழி தென்னவ வாழி
பழியொடு படராப் பஞ்வ வாழி
அடர்த்தெழு குருதி யடங்காப் பசுந்துணிப்
பிடர்த்தலைப் பீடம் ஏறிய மடக்கொடி
வெற்றிவேற் றடக்கைக் கொற்றவை அல்லள்
அறுவர்க் கிளைய நங்கை இறைவனை
ஆடல்கண் டருளிய அணங்கு சூருடைக்
கானகம் உகந்த காளி தாருகன்
பேருரங் கிழித்த பெண்ணு மல்லள்
செற்றனள் போலும் செயிர்த்தனள் போலும்
பொற்றொழிற் சிலம்பொன் றேந்திய கையள்
கணவனை இழந்தாள் கடையகத் தாளே
கணவனை இழந்தாள் கடையகத் தாளே; என
வருக மற்றவள் தருக ஈங்கென
வாயில் வந்து கோயில் காட்டக்
கோயில் மன்னனைக் குறுகினள் சென்றுழி
நீர்வார் கண்ணை எம்முன் வந்தோய்
யாரை யோநீ மடக்கொடி யோய்எனத்
தேரா மன்னா செப்புவ துடையேன்
எள்ளறு சிறப்பின் இமையவர் வியப்பப்
புள்ளுறு புன்கண் தீர்த்தோன் அன்றியும்
வாயிற் கடைமணி நடுநா நடுங்க
ஆவின் கடைமணி உகுநீர் நெஞ்சுசுடத் தான்தன்
அரும்பெறற் புதல்வனை ஆழியின் மடித்தோன் 
பெரும்பெயர்ப் புகாரென் பதியே அவ்வூர்
ஏசாச் சிறப்பின் இசைவிளங்கு பெருங்குடி
மாசாத்து வாணிகன் மகனை யாகி
வாழ்தல் வேண்டி ஊழ்வினை துரப்பச்
சூழ்கழல் மன்னா நின்னகர்ப் புகுந்தீங்கு
என்காற் சிலம்புபகர்தல் வேண்டி நின்பாற்
கொலைக்களப் பட்ட கோவலன் மனைவி
கண்ணகி யென்பதென் பெயரேயெனப்; பெண்ணணங்கே
கள்வனைக் கோறல் கடுங்கோ லன்று
வெள்வேற் கொற்றங் காண்என ஒள்ளிழை
நற்றிறம் படராக் கொற்கை வேந்தே
என்காற் பொற்சிலம்பு மணியுடை அரியே, எனத்
தேமொழி யுரைத்தது செவ்வை நன்மொழி
யாமுடைச் சிலம்பு முத்துடை அரியே
தருகெனத் தந்து தான்முன் வைப்பக்
கண்ணகி அணிமணிக் காற்சிலம் புடைப்ப
மன்னவன் வாய்முதல் தெறித்தது மணியே, மணி கண்டு
தாழ்ந்த குடையன் தளர்ந்தசெங் கோலன்
பொன்செய் கொல்லன் தன்சொற் கேட்ட
யானோ அரசன் யானே கள்வன்
மன்பதை காக்குந் தென்புலங் காவல்
என்முதற் பிழைத்தது கெடுகவென் ஆயுளென
மன்னவன் மயங்கிவீழ்ந் தனனே தென்னவன்
கோப்பெருந் தேவி குலைந்தனள் நடுங்கிக்
கணவனை இழந்தோர்க்குக் காட்டுவ தில்லென்று
இணையடி தொழுதுவீழ்ந் தனளே மடமொழி.

வெண்பா

அல்லவை செய்தார்க் கறங்கூற்ற மாமென்னும் 
பல்லவையோர் சொல்லும் பழுதன்றே--பொல்லா
வடுவினையே செய்த வயவேந்தன் றேவி
கடுவினையேன் செய்வதூஉங் காண்.

காவி யுகுநீருங் கையில் தனிச்சிலம்பும்
ஆவி குடிபோன அவ்வடிவும்--பாவியேன்
காடெல்லாஞ் சூழ்ந்த கருங்குழலுங் கண்டஞ்சிக்
கூடலான் கூடாயி னான்.

மெய்யிற் பொடியும் விரித்த கருங்குழலும்
கையில் தனிச்சிலம்பும் கண்ணீரும்--வையைக்கோன்
கண்டளவே தோற்றான்அக் காரிகைதன் சொற்செவியில்
உண்டளவே தோற்றான் உயிர்.

கண்ணகி அவள் தன் கணவன் கள்வன் அல்லன் என்பதை மன்னனுக்கும் உலகோர்க்கும் உணர்த்த எண்ணினாள். மன்னனின் அனுமதியோடு, வாயிற்காவலன், கண்ணகியை பாண்டிய மன்னனிடம் அழைத்துச் சென்றான். மன்னன் கண்ணகியை நோக்கி " நீரொழுகும் கண்களுடன் எம்முன் வந்து நிற்கும் நீ, யார்?" என வினவினான். கண்ணகி மன்னனை நோக்கி, "ஆராய்ந்து நீதி வழங்காத மன்னனே! உன்னிடம் கூறுவது ஒன்றொண்டு என உரைக்கத் தொடங்கினாள். "புறாவின் துன்பத்தைப் போக்கிய சிபி மன்னனும் தன் அரண்மனை மணி ஒலித்ததைக் கேட்டுப் பசுவின் துயர் அறிந்து தன் ஒப்பற்ற மகனையே தேர்ச்சக்கரத்திலிட்டுக் கொன்ற மனுநீதிச் சோழனும் வாழ்ந்த, பெரும்புகழுடைய புகர் நகரமே, யான் பிறந்த ஊர். அப்புகார் நகரில் பழியில்லாத சிறப்பினையுடைய புகழ்மிக்க குடியில் தோன்றிய மாசாத்துவான் மகனை மணம் புரிந்தேன். வீரக்கழலணிந்த மன்னனே!ஊழ்வினைப் பயனால் வாழ்வதற்க்காக நின் மதுரை நகரத்திற்கு வந்து, என் காற்சிலம்பினை விற்க முயன்று, உன்னால் கொலை செய்யப்பட்ட கோவலன் மனைவி,நான். கண்ணகி என்பது என் பெயர்" என்று கூறினாள்.பாண்டிய மன்னன் கண்ணகியிடம்"கள்வனைக் கொலை செய்தல் கொடுங்கோலன்று. அதுவே அரச நீதி என்று கூறினான். அதற்குக் கண்ணகி "அறநெறியில் செல்லாத அரசனே!என் காற்சிலம்பு, மாணிக்கப் பரல்களைக் கொண்டது"என்றாள்.

அதற்கு அரசன் "நீ கூறியது, நல்லதே!எம்முடைச் சிலம்பின் பரல்கள் முத்துகளே" என்றான். கோவலனிடமிருந்து கைப்பற்றிய சிலம்பைத் தருவித்து,அவள் முன் வைத்தான். வைத்த அச்சிலம்பைனைக் கண்ணகி எடுத்து ஓங்கி உடைத்தாள். அதிலிருந்து வெளிப்பட்ட மாணிக்கப்பரல் ஒன்று பாண்டிய மன்னனின் உதட்டில்பட்டுத் தெறித்தது. அம்மாணிக்கப் பரல்களைக் கண்ட பாண்டிய மன்னன் தாழ்வுற்ற குடையனாய், சோர்வுற்ற செங்கோலனாய், "பொன் தொழில் செய்யும் கொல்லனின் பொய்யுரை கேட்டு, அறநெறி தவறிய,நானோஅரசன்! நானே கள்வன். அறந்தவறாது குடிமக்களைக் காக்கும் தொன்மையாட்சி என் முதல் தவறியது.என் வாழ்நாள் அழியட்டும்" என்றவாறே மயங்கி வீழ்ந்தான். மன்னனின் மனைவி உள்ளங்கலங்கி,உடல் நடுங்கி, கணவனை இழந்த மகளிர்க்கு, எவ்விதத்திலும் ஆறுதல் கூற இயலாது என்று கூறித் தன் கணவனின் திருவடிகளை வணங்கி நிலத்தில் வீழ்ந்து இறந்தாள்.

0 comments:

Post a Comment