பந்தம் அகற்றும் அனந்தகுணப்
பரப்பம் எவன்பால் உதிக்குமோ
எந்த உலகும் எவனிடத்தில்
ஈண்டி இருந்து கரக்குமோ
சந்தமறை ஆகமங்கலைகள்
அனைத்தும் எவன்பால் தகவருமோ
அந்த இறையாம் கணபதியை
அன்பு கூரத் தொழுகின்றோம்.
உலகம் முழுதும் நீக்கமற
ஒன்றாய் நிற்கும் பொருள்எவன் அவ்
உலகில் பிறக்கும் விகாரங்கள்
உறாத மேலாம் ஒளியாவன்
உலகம் புரியும் வினைப்பயனை
ஊட்டும் களைக்கண் எவன் அந்த
உலக முதலாம் கணபதியை
உவந்தே சரணம் அடைகின்றோம்.
இடர்கள் முழுவதும் எவன் அருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவன் அருளால்
சுடர் வாழ் பதியும் உறச் செய்யும்
கடவுள் முதலோர்க் கூறின்றிக்
கருமம் எவனால் முடிவுறும் அத்
தடவு மருப்புக் கணபதி பொன்
சரணம் சரணம் அடைகின்றோம்.
மூர்த்தி ஆகித் தலமாகி
முந்நீர் கங்கை முதலான
தீர்த்தம் ஆகி அறிந்தறியாத்
திறத்தினாலும் உயிர்க்கு நலம்
ஆர்த்தி நாளும் அறியாமை அகற்றி
அறிவிப்பான் எவன் அப்
போர்த்த கருணைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
செய்யும் வினையின் முதல் யாவன்
செய்யப்படும் அப்பொருள் யாவன்
ஜயம் இன்றி உளதாகும்
அந்தக் கருமப் பயன் யாவன்
உய்யும் வினையின் பயன் விளைவில்
ஊட்டி விடுப்பான் எவன் அந்தப்
பொய்யில் இறையைக் கணபதியைப்
புரிந்து சரணம் அடைகின்றோம்.
வேதம் அளந்தும் அறிவரிய
விகிர்தன் யாவன் விழுத்தகைய
வேத முடிவில் நடம் நவிலும்
விமலன் யாவன் விறங்குபர
நாத முடிவில் வீற்றிருக்கும்
நாதன் எவன் எண் குணன் எவன் அப்
போத முதலைக் கணபதியைப்
புகழ்ந்து சரணம் அடைகின்றோம்.
மண்ணின் ஊர் ஜங்குணமாகி
வதிவான் எவன் நீர் இடைநான்காய்
நண்ணி அமர்வான் எவன் தீயின்
மூன்றாய் நவில்வான் எவன் வளியின்
எண்ணும் இரண்டு குணமாகி
இடைவான் எவன் வான் இடை ஒன்றாய்
அண்ணல் எவன் அக்கணபதியை
அன்பால் சரணம் அடைகின்றோம்.
பாச அறிவில் பசு அறிவில்
பற்றற்கரிய பரன்யாவன்
பாசஅறிவும் பசு அறிவும்
பயிலப் பணிக்கும் அவன் யாவன்
பாச அறிவும் பசு அறிவும்
பற்றி மேலாம் அறிவான
தேசன் அவன் அக் கணபதியைத்
திகழச் சரணம் அடைகின்றோம்.
0 comments:
Post a Comment