புராணம் என்றால் பழைய அல்லது பண்டைய எனப் பொருள்படும். இந்துதர்மத்தின் இரண்டாம் தரநூல் (ஸ்மிரிதி நூல்கள்) வரிசைகளில் ஒன்றுதான் புராணங்கள். புராணங்களில் பெரும்பாலானவை காலம் காலமாக நம்முடைய மரபில் இருந்து வந்த கதைகள் ஆகும். நுட்பமான நன்னெறியையும் ஆன்மிக தத்துவத்தையும் எளிதான முறையில் விளக்குவதற்காக தெய்வங்களை மையமாகக் கொண்டு கூறப்பட்ட கதைகள் தான் புராணங்கள். சாந்தோக்கிய உபநிடதம் 7.1.2-இல்,
“சில வரலாற்று நிகழ்வுகளுடன் கூடிய கற்பனை கதைகளே புராணம் ஆகும்.” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
புராணங்கள் சமஸ்கிருதம் மற்றும் தமிழ் ஆகிய இரு மொழிகளில் உள்ளன. புராணங்கள் பெரும்பாலும் சிவபெருமான், விஷ்ணுபெருமான் மற்றும் சக்திதேவி ஆகிய மூவரை மையமாகக் கொண்டு அமைந்துள்ளன. இவை சுமார் 1500-2000 ஆண்டுகளுக்கு முன் இயற்றப்பட்டவை. தெய்வங்கள், பிரபஞ்சம், அரசர்கள், வீரர்கள், முனிவர்கள், கிராமிய கதைகள், தீர்த்த தலங்கள், கோயில்கள், மருத்துவம், ஜோதிடம், காதல் கதைகள், சிரிப்பு கதைகள் என பல்வகையான அறிவு மற்றும் பொழுதுபோக்கு சார்ந்த கதைகளை உள்ளடக்கியது புராணங்கள் ஆகும்.
இந்துதர்மத்தில் வேத உபநிடதங்களுக்குத் தான் முன்னுரிமை உள்ளன. எனவே, பெரும்பாலும் புராணங்கள் அத்தாட்சி மிக்கவையாக ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது. புராணங்களில் மூன்று வகை உள்ளன. அவை:
- மகா புராணங்கள் : 18 நூல்கள்
- உப புராணங்கள் : 18 நூல்கள்
- தல புராணங்கள் : 275 நூல்கள்
மகா புராணம் என்றால் பெரிய புராணம் எனவும், உப புராணம் என்றால் துணை புராணம் எனவும், தல புராணம் என்றால் சிவதலங்களின் புராணம் எனவும் பொருள்படும். புராணங்களை இயற்றியவர் வியாசர் என்று கூறப்படுகின்றனர்.
பதினெண் மகாபுராணங்களிலும் மொத்த 4 லட்சத்துக்கும் அதிகமான சுலோகங்கள் உள்ளன. இவற்றுள் அதிக சுலோகங்களைக் கொண்டது கந்த புராணம் ஆகும். கந்த புராணம் முருக பெருமானைப் பற்றிய புராணமாகும். தீர்த்த தலங்களைப் பற்றிய விரிவான விளக்கங்களும் இந்தப் புராணத்தில் அடங்கியுள்ளன. சிவபெருமான், பார்வதிதேவி, விநாயகர், விஷ்ணுபெருமான், ஸ்ரீகிருஷ்ணர், ஸ்ரீராமர் ஆகியோரைப் பற்றிய கதைகளும் உள்ளன.
”விஷ்ணு தான் சிவன்; சிவன் தான் விஷ்ணு. ஹரியும் ஹரனும் உண்மையில் ஒன்றே”
கந்த புராணம் 1.8.20-21
(மகாபுராணங்களின் பெயர்களும் சுலோகங்களும் கீழ்க்காணும் படத்தில் உள்ளன)
உப புராணங்கள்:
சனத்குமார, நரசிம்ம, பிரிஹன்-நாரதிய, சிவரஹஸ்ய, துர்வாச, கபில, வாமண, பார்கவ, வருண, கலிக, சாம்ப, நந்தி, சூரிய, பராசர, வசிஷ்ட, தேவி பாகவத, கணேஷ, ஹம்ச ஆகியவை உப புராணங்கள் ஆகும்.
தல புராணங்கள்:
275 சிவ தலங்களைப் பற்றிய கதைகளை உள்ளடக்கிய புராணங்கள் தல புராணங்கள் ஆகும்.
விஷ்ணு புராணத்தின் ஏழாவது அத்தியாயத்தில், ”தர்மமுடையவனின் உண்மையான செல்வம் - இறைநம்பிக்கை, வளமை, துணிவு, தானம், போதனை, மனதிருப்தி, மெய்யான இன்பம், எதிலும் நிறைவு, அறிவு, கடின உழைப்பு, நேர்மை, நியாயம், கல்வி, புத்தி, புரிந்துணர்வு, நல்லொழுக்கம், உடல்வலிமை, கட்டுப்பாடு, அமைதி, மன்னிக்கும் பக்குவம், திறமை, இன்பம், தெளிவான வாக்கு ஆகியவை ஆகும். இச்செல்வம் யாவும் அவனுக்கு எக்காலத்திலும் நற்புகழை ஈட்டித் தருபவை.”
இந்துதர்மத்தின் இசை, நடனம், நாடகம், சிற்பக்கலை, கோயில்கள், திருவிழாக்கள், பண்டிகைநாட்கள் ஆகியவை புராணங்களோடு நெருங்கிய தொடர்பு உடையவை.
புராணங்களில் வரும் கதைகளை நாம் எப்போதும் தீவிரமாக எடுத்துக் கொள்ளக் கூடாது. அவை பெரும்பாலும் நுணுக்கமான ஓர் அறிவியலை எடுத்துரைப்பதற்காக வடிவமைக்கப்பட்டவை என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். ஆழ்ந்த ஆன்மிக தத்துவத்தை நாம் எளிதில் புரிந்து கொள்வதற்காக தெய்வங்களைக் கதாபாத்திரங்களாகக் கொண்டு நம் முன்னோர்கள் கூறிய கதைகள் தான் புராணங்கள்.
0 comments:
Post a Comment