வெகுளாமை (குறள் 301 - 310)


குறள் 301: 
செல்லிடத்துக் காப்பான் சினங்காப்பான் அல்லிடத்துக் 
காக்கின்என் காவாக்கா.

கலைஞர் உரை: 
தன் சினம் பலிதமாகுமிடத்தில் சினம் கொள்ளாமல் இருப்பவனே சினங்காப்பவன்; பலிக்காத இடத்தில் சினத்தைக் காத்தால் என்ன? காக்காவிட்டால் என்ன?.

மு.வ உரை:
பலிக்கும் இடத்தில் சினம் வராமல் காப்பவனே சினம் காப்பவன், பலிக்காத இடத்தில் காத்தால் என்ன, காக்கா விட்டால் என்ன?.

சாலமன் பாப்பையா உரை:
எங்கே தன் கோபம் பலிக்குமோ அங்கே கோபம் கொள்ளாதவனே உண்மையாகவே கோபம் கொள்ளாதவன்; பலிக்காத இடத்தில் கோபத்தைத் தடுத்து என்ன? தடுக்காமல் விட்டுத்தான் என்ன?.

பரிமேலழகர் உரை:
[அஃதாவது, சினத்தைச் செய்தற்குக் காரணம் ஒருவன் மாட்டு உளதாய இடத்தும் அதனைச் செய்யாமை. இது பொய்ம்மைபற்றி நிகழ்வதாய வெகுளியை விலக்கலின், வாய்மையின் பின் வைக்கப்பட்டது.)

சினம் செல் இடத்துக் காப்பான் காப்பான்-தன் சினம் பலிக்குமிடத்து அதனை எழாமல் தடுப்பானே அருளால் தடுப்பானாவான், அல் இடத்துக் காக்கின் என் காவாக்கால் என் - ஏனைப் பலியாத இடத்து அதனைத் தடுத்தால் என்? தடாது ஒழிந்தால் என்? ('செல்லிடம்', 'அல்லிடம்' என்றது, தவத்தால் தன்னின் மெலியாரையும் வலியாரையும். வலியார்மேல் காவா வழியும், அதனான் அவர்க்கு வருவதோர் தீங்கு இன்மையின், காத்தவழியும் அறன் இல்லை என்பார், 'காக்கின் என் காவாக்கால் என்' என்றார். இதனான் வெகுளாமைக்கு இடம் கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
தனக்கு இயலு மிடத்தே வெகுளாதவன் வெகுளாத வனாவான்; இயலாவிடத்தில் அதனைத் தவிர்ந்ததனாலும் பயனில்லை, தவிராததனாலும் பயனில்லை; இது வெகுளாமையாவது வலியவன் வெகுளாமை யென்றது.

குறள் 302: 
செல்லா இடத்துச் சினந்தீது செல்லிடத்தும் 
இல்அதனின் தீய பிற.

கலைஞர் உரை: 
வலியோரிடம் சினம் கொண்டால், அதனால் கேடு விளையும். மெலியோரிடம் சினம் கொண்டாலும் அதைவிடக் கேடு வேறொன்றுமில்லை.

மு.வ உரை:
பலிக்காத இடத்தில் (தன்னை விட வலியவரிடத்தில்) சினம் கொள்வது தீங்கு. பலிக்கும் இடத்திலும் (மெலியவரித்திலும்) சினத்தைவிடத் தீயவை வேறு இல்லை.

சாலமன் பாப்பையா உரை:
பலிக்காத இடத்தில் கோபம் கொள்வது நமக்கே தீமை; பலிக்கும் இடத்தில் கோபம் கொண்டாலும் அதை விடத் தீமை வேறு இல்லை.

பரிமேலழகர் உரை:
சினம் செல்லா இடத்துத் தீது - ஒருவன் வெகுளி தன்னின் வலியார்மேல் எழின் 'தனக்கே தீதாம்'; செல் இடத்தும் அதனின் தீய பிற இல் - மற்றை எளியோர் மேல் எழினும் அதனின் தீயன பிற இல்லை (செல்லா 'இடத்துச் சினம் பயப்பது' 'இம்மைக்கண் அவரான் வரும் ஏதமே. ஏனையது 'இம்மைக்கண் பழியும்' மறுமைக்கண் பாவமும் பயத்தலின் அதனின் தீயன பிற இல்லை' என்றார், ஓரிடத்தும் ஆகாது என்பதாம்.).

மணக்குடவர் உரை:
இயலாவிடத்துச் சினந்தீது; இயலுமிடத்திலும் அதிற் றீதாயிருப்பன பிறவில்லை.

குறள் 303: 
மறத்தல் வெகுளியை யார்மாட்டும் தீய 
பிறத்தல் அதனான் வரும்.

கலைஞர் உரை: 
யார்மீது சினம் கொண்டாலும் அதை மறந்துவிட வேண்டும். இல்லாவிட்டால் அந்தச் சினமே தீய விளைவுகளுக்குக் காரணமாகும்.

மு.வ உரை:
யாரிடத்திலும் சினம் கொள்ளாமல் அதை மறந்து விட வேண்டும், தீமையான விளைவுகள் அச் சினத்தாலேயே ஏற்படும்.

சாலமன் பாப்பையா உரை:
தீமை வருவது எல்லாம் கோபத்தால்தான்; அதனால் எவரிடமானாலும் சரி, கோபம் கொள்வதை விட்டுவிடுக.

பரிமேலழகர் உரை:
யார் மாட்டும் வெகுளியை மறத்தல் - யாவர்மாட்டும் வெகுளியை 'ஒழிக', தீய பிறத்தல் 'அதனான் வரும்' - ஒருவற்குத் தீயன எல்லாம் உளவாதல் அதனான் வரும் ஆகலான். (வலியார், ஒப்பார், எளியார் என்னும் மூவர் மாட்டும் ஆகாமையின் 'யார்மாட்டும்' என்றும், மனத்தால் துறந்தார்க்கு ஆகாதனவாகிய தீச்சிந்தைகள் எல்லாவற்றையும் பிறப்பித்தலின் 'தீய பிறத்தல் அதனான் வரும்', என்றும் கூறினார்.).

மணக்குடவர் உரை:
வெகுளியை யார்மாட்டுஞ் செய்தலை மறக்க; தீயன பிறத்தல் அவ்வெகுளியானே வருமாதலான். இது வெகுளாமை வேண்டுமென்றது.

குறள் 304: 
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் 
பகையும் உளவோ பிற.

கலைஞர் உரை: 
சினம் கொள்கிறவர்களுக்கு முகமலர்ச்சி மாத்திரமின்றி மனமகிழ்ச்சியும் மறைந்து போய் விடும்.

மு.வ உரை:
முகமலர்ச்சியும் அகமலர்ச்சியும் கொல்லுகின்ற சினத்தை விட ஒருவனுக்கு பகையானவை வேறு உள்ளனவோ?.

சாலமன் பாப்பையா உரை:
முகத்தில் சிரிப்பையும், மனத்துள் மகிழ்ச்சியையும் கொன்றுவிடும் கோபத்தை விட வேறு பகையும் உண்டோ?.

பரிமேலழகர் உரை:
நகையும் உவகையும் கொல்லும் சினத்தின் - துறந்தார்க்கு அருளான் உளவாய முகத்தின்கண் நகையையும் மனத்தின் கண் உவகையையும் கொன்று கொண்டெழுகின்ற சினமே அல்லாது, பிற பகையும் உளவோ - அதனின் பிறவாய பகைகளும் உளவோ? இல்லை. (துறவால் புறப்பகை இலராயினும் உட்பகையாய் நின்று அருள் முதலிய நட்பினையும் பிரித்துப் பிறவித் துன்பமும் எய்துவித்தலான், அவர்க்குச் சினத்தின் மிக்க பகை இல்லை யாயிற்று. இவை மூன்று பாட்டானும் வெகுளியது தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
நகுதலையும் மகிழ்தலையுங் கெடுக்கின்ற சினத்தைப் போல, பகையா யிருப்பனவும் வேறு சிலவுளவோ? இஃது இன்பக்கேடு வருமென்றது.

குறள் 305: 
தன்னைத்தான் காக்கின் சினங்காக்க காவாக்கால் 
தன்னையே கொல்லுஞ் சினம்.

கலைஞர் உரை: 
ஒருவன் தன்னைத்தானே காத்துக் கொள்ள வேண்டுமானால், சினத்தைக் கைவிட வேண்டும். இல்லையேல் சினம், அவனை அழித்துவிடும்.

மு.வ உரை:
ஒருவன் தன்னைத்தான் காத்துக் கொள்வதானால் சினம் வராமல் காத்துக் கொள்ள வேண்டும், காக்கா விட்டால் சினம் தன்னையே அழித்து விடும்.

சாலமன் பாப்பையா உரை:
தனக்குத் துன்பம் வராமல் காக்க விரும்பினால் கோபம் கொள்ளாமல் காக்கவும், காக்க முடியாது போனால் உடையவரையே சினம் கொல்லும்.

பரிமேலழகர் உரை:
தன்னைத்தான் காக்கின் சினம் காக்க - தன்னைத்தான் துன்பம் எய்தாமல் காக்க நினைத்தானாயின் தன் மனத்துச்சினம் வராமல் காக்க, காவாக்கால் சினம் தன்னையே கொல்லும் - காவானாயின், அச்சினம் தன்னையே கெடுக்கும் கடுந்துன்பங்களை எய்துவிக்கும். ('வேண்டிய வேண்டியாங்கு எய்தல்' (குறள் 265) பயத்ததாய தவத்தைப் பிறர்மேல் சாபம் விடுவதற்காக இழந்து, அத் தவத்துன்பத்தோடு பழைய பிறவித்துன்பமும் ஒருங்கே எய்துதலின் 'தன்னையே கொல்லும்' என்றார். 'கொல்லச் சுரப்பதாங் கீழ்' (நாலடி 279) என்புழிப்போலக் கொலைச்சொல் ஈண்டுத் துன்பமிகுதி உணர்த்தி நின்றது.).

மணக்குடவர் உரை:
ஒருவன் தன்னைத் தான் காக்கவேண்டுவனாயின், சினந்தோன்றாமற் காக்க; காவானாயின் சினம் தன்னையே கொல்லும், இஃது உயிர்க்கேடு வருமென்றது.

குறள் 306: 
சினமென்னும் சேர்ந்தாரைக் கொல்லி இனமென்னும் 
ஏமப் புணையைச் சுடும்.

கலைஞர் உரை: 
சினங்கொண்டவரை அழிக்கக் கூடியதாகச் சினமென்னும் தீயே இருப்பதால், அது அவரை மட்டுமின்றி, அவரைப் பாதுகாக்கும் தோணி போன்ற சுற்றத்தையும் அழித்துவிடும்.

மு.வ உரை:
சினம் என்னும் சேர்ந்தவரை அழிக்கும் நெருப்பு ஒருவனுக்கு இனம் இன்பத் தெப்பத்தையும் சுட்டழிக்கும்.

சாலமன் பாப்பையா உரை:
சேர்ந்தவரைக் கொல்லி எனப்படும் கோபம், சேர்ந்தவரை மட்டும் அன்று; சேர்ந்தவர்க்குத் துணையாக இருப்பவரையும் எரித்துவிடும்.

பரிமேலழகர் உரை:
சினம் என்னும் சேர்ந்தாரைக் கொல்லி - சினம் என்னும் நெருப்பு; இனம் என்னும் ஏமப் புணையைச் சுடும் - தனக்கு இடமானவரையே யன்றி அவர்க்கு இனமாகிய ஏமப்புணையையும் சுடும். ('சேர்ந்தாரைக் கொல்லி' என்பது ஏதுப் பெயர்: 'தான்சேர்ந்த இடத்தைக் கொல்லும் தொழிலது' என்றவாறு. 'சேர்ந்தாரை' என உயர்திணைப் பன்மைமேல் வைத்து, ஏனை நான்கு பாலும் தம் கருத்தோடு கூடிய பொருளாற்றலால் கொண்டார். ஈண்டு உருவகம் செய்கின்றது துறந்தார் சினத்தையே ஆகலின், 'சினமென்னும் நெருப்பு' என்ற விதப்பு, உலகத்து நெருப்புச் சுடுவது தான் சேர்ந்த இடத்தையே , இந்நெருப்புச் சேராத இடத்தையும் சுடும் என்னும் வேற்றுமை தோன்ற நின்றது. ஈண்டு 'இனம்' என்றது, முற்றத் துறந்து தவஞானங்களால் பெரியராய்க் கேட்டார்க்கு உறுதி பயக்கும் மொழிகளை இனியவாகச் சொல்லுவாரை .உருவகம் நோக்கிச் 'சுடும்' என்னும் தொழில் கொடுத்தாராயினும், 'அகற்றும்' என்பது பொருளாகக் கொள்க. ஏமப்புணை - ஏமத்தை உபதேசிக்கும் புணை. 'இனம்' என்னும் ஏமப்புணை என்ற ஏகதேச உருவகத்தால், 'பிறவிக் கடலுள் அழுந்தாமல் வீடு என்னும் கரையேற்றுகின்ற' என வருவித்து உரைக்க. எச்ச உம்மை விகாரத்தால் தொக்கது. தன்னையும் வீழ்த்து, எடுப்பாரையும் அகற்றும் என்பதாம்.).

மணக்குடவர் உரை:
சினமென்று சொல்லப் படுகின்ற நெருப்பு தான் துன்பக்கடலிலழுந்தாமல் தன்னைக் கரையேற விடுகின்ற நட்டோராகிய புணையைச் சுடும். 

சேர்ந்தாரைக் கொல்லி- நெருப்பு: இது காரணக்குறி. இது சினம் தன்னை யடுத்தாரைக் கொல்லு மென்றது.

குறள் 307: 
சினத்தைப் பொருளென்று கொண்டவன் கேடு 
நிலத்தறைந்தான் கைபிழையா தற்று.

கலைஞர் உரை: 
நிலத்தைக் கையால் அறைந்தவனுக்கு அவன் கைதான் வலிக்கும். அது போலத்தான் சினத்தைப் பண்பாகக் கொண்டவன் நிலையும் ஆகும்.

மு.வ உரை:
(தன் வல்லமை புலப்படுத்தச்) சினத்தை பொருளென்று கொண்டவன் அழிதல், நிலத்தை அறைந்தவனுடைய கை தப்பாதது போல் ஆகும்.

சாலமன் பாப்பையா உரை:
நிலத்தில் அடித்தவன் கை, வேதனையில் இருந்து தப்ப முடியாதது போலக், கோபத்தைக் குணமாகக் கொண்டவனும் வேதனை அனுபவத்திலிருந்து தப்ப முடியாது.

பரிமேலழகர் உரை:
சினத்தைப் பொருள் என்று கொண்டவன் கேடு - சினத்தைத் தன் ஆற்றல் உணர்த்துவதோர் குணம் என்று தன்கண் கொண்டவன் அவ்வாற்றல் இழத்தல்; நிலத்து அறைந்தான் கை பிழையா தற்று - நிலத்தின்கண் அறைந்த அவன் கை அந்நிலத்தையுறுத்தல் தப்பாதவாறு போலத் தப்பாது. (வைசேடிகர் பொருள், பண்பு, தொழில், சாதி, விசேடம், இயைபு என்பவற்றை 'அறுவகைப் பொருள்' என்றாற்போல, ஈண்டுக்குணம் 'பொருள்' எனப்பட்டது. 'பிழையாததற்று' என்பது குறைந்து நின்றது. இவை மூன்று பாட்டானும் வெகுண்டார்க்கு வரும் தீங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

குறள் 308: 
இணர்எரி தோய்வன்ன இன்னா செயினும் 
புணரின் வெகுளாமை நன்று.

கலைஞர் உரை: 
தீயினால் சுட்டெரிப்பது போன்ற துன்பங்களை ஒருவன் தொடர்ந்து செய்தாலும் அதற்காக வருந்தி அவன் உறவு கொள்ள வரும் போது சினங்கொள்ளாமல் இருப்பதே நல்லது.

மு.வ உரை:
பலச் சுடர்களை உடைய பெரு நெருப்பில் தோய்வது போன்ற துன்பத்தை ஒருவன் செய்த போதிலும் கூடுமானால் அவன் மேல் சினங் கொள்ளாதிருத்தல் நல்லது.

சாலமன் பாப்பையா உரை:
பல சுடரை உடைய பெருநெருப்பு நம் மீது பட்டது போன்ற தீமையை ஒருவன் நமக்குச் செய்தாலும், நம்மால் கோபம் கொள்ளாதிருக்க முடியுமானால் அது நம் உடலுக்கும் நல்லது.

பரிமேலழகர் உரை:
இணர் எரி தோய்வு அன்ன இன்னா செயினும் - பல சுடரை உடைத்தாய பேரெரி வந்து தோய்ந்தாலொத்த இன்னாதவற்றை ஒருவன் செய்தானாயினும்; வெகுளாமை புணரின் நன்று - அவனை வெகுளாமை ஒருவற்குக் கூடுமாயின் அது நன்று. (இன்னாமையின் மிகுதி தோன்ற 'இணர் எரி' என்றும், அதனை மேன்மேலும் செய்தல் தோன்ற 'இன்னா' என்றும், அச்செயல் முனிவரையும் வெகுள்விக்கும் என்பது தோன்றப் 'புணரின்' என்றும் கூறினார். இதனான் வெகுளாமையது நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
சினத்தைப் பொருளாகக் கொண்டவன் கெடுதல், நிலத்தெறிந்தவன்கை தப்பாமற் பட்டதுபோலும், இது பொருட்கேடு வருமென்றது.

குறள் 309: 
உள்ளிய தெல்லாம் உடனெய்தும் உள்ளத்தால் 
உள்ளான் வெகுளி எனின்.

கலைஞர் உரை: 
உள்ளத்தால் சினங்கொள்ளாதவனாக இருந்தால் எண்ணியவற்றையெல்லாம் உடனடியாகப் பெற முடியும்.

மு.வ உரை:
ஒருவன் தன் மனதால் சினத்தை எண்ணாதிருப்பானானால் நினைத்த நன்மைகளை எல்லாம் அவன் ஒருங்கே பெறுவான்.

சாலமன் பாப்பையா உரை:
உள்ளத்துள் கோபம் கொள்ள ஒருபோதும் எண்ணாதவன், தான் நினைத்ததை எல்லாம் உடனே அடைவான்.

பரிமேலழகர் உரை:
உள்ளத்தால் வெகுளி உள்ளான் எனின் - தவஞ்செய்யும் அவன், தன் மனத்தால் வெகுளியை ஒருகாலும் நினையானாயின், உள்ளிய எல்லாம் உடன் எய்தும் - தான் கருதிய பேறு எல்லாம் ஒருங்கே பெறும். ( 'உள்ளத்தால்' என வேண்டாது கூறிய அதனான், 'அருளுடை உள்ளம்' என்பது முடிந்தது. உள்ளாமையாவது அவ்வருளாகிய பகையை வளர்த்து, அதனான் முற்றக் கடிதல். இம்மை மறுமை வீடு என்பன வேறுவேறு திறத்தனவாயினும், அவை எல்லாம் இவ்வொன்றானே எய்தும் என்பார், 'உள்ளிய எல்லாம் உடன் எய்தும்' என்றார். இதனான் வெகுளாதார்க்கு வரும் நன்மை கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
தன்னெஞ்சினால் வெகுளியை நினையானாகில் தானினைத்தனவெல்லாம் ஒருகாலத்தே கூடப்பெறுவன்.

குறள் 310: 
இறந்தார் இறந்தார் அனையர் சினத்தைத் 
துறந்தார் துறந்தார் துணை.

கலைஞர் உரை: 
எல்லையற்ற சினம் கொள்வார் இறந்தவர்க்கு ஒப்பாவார். சினத்தை அறவே துறந்தவர் துறவிக்கு ஒப்பாவார்.

மு.வ உரை:
சினத்தில் அளவு கடந்து சென்றவர் இறந்தவரைப் போன்றவர், சினத்தை அடியோடு துறந்தவர் துறந்தவர்க்கு ஒப்பாவர்.

சாலமன் பாப்பையா உரை:
பெருங்கோபம் கொண்டவர் இருந்தாலும் இறந்தவரைப் போன்றவரே; கோபத்தை விட்டுவிட்டவர். இறக்க வேண்டியவரே என்றாலும் சாவைத் தவிர்த்தவர் போன்றவரே.

பரிமேலழகர் உரை:
இறந்தார் இறந்தார் அனையர் - சினத்தின் கண்ணே மிக்கார் உயிருடையராயினும் செத்தாரோடு ஒப்பர், சினத்தைத் துறந்தார் துறந்தார் துணை - சினத்தைத் துறந்தார் சாதல் தன்மையராயினும், அதனை ஒழிந்தார் அளவினர். (மிக்க சினத்தை உடையார்க்கு ஞானம் எய்துதற்கு உரிய உயிர் நின்றதாயினும் , கலக்கத்தான் அஃது எய்தாமை ஒருதலையாகலின் அவரை வீடு பெற்றாரோடு ஒப்பர் என்றும் கூறினார். இதனான் அவ்விருவர் பயனும் ஒருங்கு கூறப்பட்டது.).

மணக்குடவர் உரை:
சினத்தை மிகுந்தார் செத்தாரோடு ஒப்பர், அதனை யொழிந்தார் எல்லாப் பொருளையுந் துறந்தாரோடு ஒப்பர், இது வெகுளாதார் பெரியரென்றது.

0 comments:

Post a Comment