அரசன் ஆணையின் ஆய் இழை அருளால்
நிரயக் கொடுஞ் சிறை நீக்கிய கோட்டம்
தீப் பிறப்பு உழந்தோர் செய் வினைப் பயத்தான்
யாப்பு உடை நல் பிறப்பு எய்தினர் போலப்
பொருள் புரி நெஞ்சின் புலவோன் கோயிலும்
அருள் புரி நெஞ்சத்து அறவோர் பள்ளியும்
அட்டில் சாலையும் அருந்துநர் சாலையும்
கட்டு உடைச் செல்வக் களிப்பு உடைத்து ஆக
ஆய் இழை சென்றதூஉம் ஆங்கு அவள் தனக்கு
வீயா விழுச் சீர் வேந்தன் பணித்ததூஉம்
சிறையோர் கோட்டம் சீத்து அருள் நெஞ்சத்து
அறவோர் கோட்டம் ஆக்கிய வண்ணமும்
கேட்டனன் ஆகி 'அத் தோட்டு ஆர் குழலியை
மதியோர் எள்ளினும் மன்னவன் காயினும்
பொதியில் நீங்கிய பொழுதில் சென்று
பற்றினன் கொண்டு என் பொன் தேர் ஏற்றி
கற்று அறி விச்சையும் கேட்டு அவள் உரைக்கும்
முதுக்குறை முதுமொழி கேட்குவன்' என்றே
மதுக் கமழ் தாரோன் மனம் கொண்டு எழுந்து
பலர் பசி களைய பாவை தான் ஒதுங்கிய
உலக அறவியின் ஊடு சென்று ஏறலும்
'மழை சூழ் குடுமிப் பொதியில் குன்றத்துக்
கழை வளர் கான் யாற்று பழப் வினைப் பயத்தான்
மாதவன் மாதர்க்கு இட்ட சாபம்
ஈர் ஆறு ஆண்டு வந்தது வாராள்
காயசண்டிகை!' எனக் கையறவு எய்தி
காஞ்சனன் என்னும் அவள் தன் கணவன்
ஓங்கிய மூதூர் உள் வந்து இழிந்து
பூத சதுக்கமும் பூ மரச் சோலையும்
மாதவர் இடங்களும் மன்றமும் பொதியிலும்
தேர்ந்தனன் திரிவோன் ஏந்து இள வன முலை
மாந்தர் பசி நோய் மாற்றக் கண்டு ஆங்கு
'இன்று நின் கையின் ஏந்திய பாத்திரம்
ஒன்றே ஆயினும் உண்போர் பலரால்
ஆனைத்தீ நோய் அரும் பசி களைய
வான வாழ்க்கையர் அருளினர்கொல்?' எனப்
பழைமைக் கட்டுரை பல பாராட்டவும்
விழையா உள்ளமொடு அவன்பால் நீங்கி
உதயகுமரன் தன்பால் சென்று
நரை மூதாட்டி ஒருத்தியைக் காட்டி
தண் அறல் வண்ணம் திரிந்து வேறாகி
வெண் மணல் ஆகிய கூந்தல் காணாய்
பிறை நுதல் வண்ணம் காணாயோ நீ
நரைமையின் திரை தோல் தகையின்று ஆயது
விறல் வில் புருவம் இவையும் காணாய்
இறவின் உணங்கல் போன்று வேறாயின
கழுநீர்க் கண் காண் வழுநீர் சுமந்தன
குமிழ் மூக்கு இவை காண் உமிழ் சீ ஒழுக்குவ
நிரை முத்து அனைய நகையும் காணாய்
சுரை வித்து ஏய்ப்பப் பிறழ்ந்து போயின
இலவு இதழ்ச் செவ் வாய் காணாயோ நீ
புலவுப் புண் போல் புலால் புறத்திடுவது
வள்ளைத் தாள் போல் வடி காது இவை காண்
உள் ஊன் வாடிய உணங்கல் போன்றன
இறும்பூது சான்ற முலையும் காணாய்
வெறும் பை போல வீழ்ந்து வேறாயின
தாழ்ந்து ஓசி தெங்கின் மடல் போல் திரங்கி
வீழ்ந்தன இள வேய்த் தோளும் காணாய்
நரம்பொடு விடு தோல் உகிர்த் தொடர் கழன்று
திரங்கிய விரல்கள் இவையும் காணாய்
வாழைத் தண்டே போன்ற குறங்கு இணை
தாழைத் தண்டின் உணங்கல் காணாய்
ஆவக் கணைக்கால் காணாயோ நீ
மேவிய நரம்போடு என்பு புறம் காட்டுவ
தளிர் அடி வண்ணம் காணாயோ நீ
முளி முதிர் தெங்கின் உதிர் காய் உணங்கல்
பூவினும் சாந்தினும் புலால் மறைத்து யாத்து
தூசினும் அணியினும் தொல்லோர் வகுத்த
வஞ்சம் தெரியாய் மன்னவன் மகன்!' என
விஞ்சை மகளாய் மெல் இயல் உரைத்தலும்
'தற்பாராட்டும் என் சொல் பயன் கொள்ளாள்
பிறன் பின் செல்லும் பிறன் போல் நோக்கும்
மதுக் கமழ் அலங்கல் மன்னவன் மகற்கு
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டி
பவளக் கடிகையில் தவள வாள் நகையும்
குவளைச் செங் கணும் குறிப்பொடு வழாஅள்
ஈங்கு இவன் காதலன் ஆதலின் ஏந்து இழை
ஈங்கு ஒழிந்தனள்' என இகல் எரி பொத்தி
மற்றவள் இருந்த மன்றப் பொதியிலுள்
புற்று அடங்கு அரவின் புக்கு ஒளித்து அடங்கினன்
காஞ்சனன் என்னும் கதிர் வாள் விஞ்சையன்
ஆங்கு அவள் உரைத்த அரசு இளங் குமரனும்
களையா வேட்கை கையுதிர்க்கொள்ளான்
'வளை சேர் செங் கை மணிமேகலையே
காயசண்டிகை ஆய் கடிஞை ஏந்தி
மாய விஞ்சையின் மனம் மயக்குறுத்தனள்
அம்பல மருங்கில் அயர்ந்து அறிவுரைத்த இவ்
வம்பலன் தன்னொடு இவ் வைகு இருள் ஒழியாள்
இங்கு இவள் செய்தி இடை இருள் யாமத்து
வந்து அறிகுவன்' என மனம் கொண்டு எழுந்து
வான்தேர்ப் பாகனைப் மீன் திகழ் கொடியனை
கருப்பு வில்லியை அருப்புக் கணை மைந்தனை
உயாவுத் துணையாக வயாவொடும் போகி
ஊர் துஞ்சு யாமத்து ஒரு தனி எழுந்து
வேழம் வேட்டு எழும் வெம் புலி போல
கோயில் கழிந்து வாயில் நீங்கி
ஆய் இழை இருந்த அம்பலம் அணைந்து
வேக வெந் தீ நாகம் கிடந்த
போகு உயர் புற்று அளை புகுவான் போல
ஆகம் தோய்ந்த சாந்து அலர் உறுத்த
ஊழ் அடியிட்டு அதன் உள்ளகம் புகுதலும்
ஆங்கு முன் இருந்த அலர் தார் விஞ்சையன்
'ஈங்கு இவன் வந்தனன் இவள்பால்' என்றே
வெஞ் சின அரவம் நஞ்சு எயிறு அரும்பத்
தன் பெரு வெகுளியின் எழுந்து பை விரித்தென
இருந்தோன் எழுந்து பெரும் பின் சென்று அவன்
சுரும்பு அறை மணித் தோள் துணிய வீசி
'காயசண்டிகையைக் கைக்கொண்டு அந்தரம்
போகுவல்' என்றே அவள்பால் புகுதலும்
நெடு நிலைக் கந்தின் இடவயின் விளங்கக்
கடவுள் எழுதிய பாவை ஆங்கு உரைக்கும்
'அணுகல் அணுகல்! விஞ்சைக் காஞ்சன!
மணிமேகலை அவள் மறைந்து உரு எய்தினள்
காயசண்டிகை தன் கடும் பசி நீங்கி
வானம் போவழி வந்தது கேளாய்
அந்தரம் செல்வோர் அந்தரி இருந்த
விந்த மால் வரை மீமிசைப் போகார்
போவார் உளர்அனின் பொங்கிய சினத்தள்
சாயையின் வாங்கித் தன் வயிற்று இடூஉம்
விந்தம் காக்கும் விந்தா கடிகை
அம் மலைமிசைப் போய் அவள் வயிற்று அடங்கினள்
கைம்மை கொள்ளேல் காஞ்சன! இது கேள்
ஊழ்வினை வந்து இங்கு உதயகுமரனை
ஆர் உயிர் உண்டதுஆயினும் அறியாய்
வெவ் வினை செய்தாய் விஞ்சைக் காஞ்சன!
அவ் வினை நின்னையும் அகலாது ஆங்கு உறும்'
என்று இவை தெய்வம் கூறலும் எழுந்து
கன்றிய நெஞ்சில் கடு வினை உருத்து எழ
விஞ்சையன் போயினன் விலங்கு விண் படர்ந்து என்
0 comments:
Post a Comment