வேனிற்காதை


நெடியோன் குன்றமும் தொடியோள் பெளவமும்
தமிழ்வரம்பு அறுத்த தண்புனல் நல்நாட்டு
மாட மதுரையும் பீடுஆர் உறந்தையும்
கலிகெழு வஞ்சியும் ஒலிபுனல் புகாரும்
அரைசுவீற் றிருந்த உரைசால் சிறப்பின்
மன்னன் மாரன் மகிழ்துணை ஆகிய
இன்இள வேனில் வந்தனன் இவண்என
வளம்கெழு பொதியில் மாமுனி பயந்த
இளங்கால் து¡தன் இசைத்தனன் ஆதலின்
மகர வெல்கொடி மைந்தன் சேனை
புகர்அறு கோலம் கொள்ளும்என் பதுபோல்
கொடிமிடை சோலைக் குயிலோன் என்னும்
படையுள் படுவோன் பணிமொழி கூற,
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டினுள்
கோவலன் ஊடக் கூடாது ஏகிய
மாமலர் நெடுங்கண் மாதவி விரும்பி
வான்உற நிவந்த மேல்நிலை மருங்கின்
வேனில் பள்ளி ஏறி மாண்இழை
தென்கடல் முத்தும் தென்மலைச் சாந்தும்
தன்கடன் இறுக்கும் தன்மைய ஆதலின்
கொங்கை முன்றில் குங்கும வளாகத்து
மைஅறு சிறப்பின் கையுறை ஏந்தி
அதிரா மரபின் யாழ்கை வாங்கி
மதுர கீதம் பாடினள் மயங்கி,
ஒன்பான் விருத்தியுள் தலைக்கண் விருத்தி
நன்பால் அமைந்த இருக்கையள் ஆகி,
வலக்கைப் பதாகை கோட்டொடு சேர்த்தி
இடக்கை நால்விரல் மாடகம் தழீஇச்
செம்பகை ஆர்ப்பே கூடம் அதிர்வே
வெம்பகை நீக்கும் விரகுளி அறிந்து,
பிழையா மரபின் ஈர்ஏழ் கோவையை
உழைமுதல் கைக்கிளை இறுவாய் கட்டி,
இணைகிளை பகைநட்பு என்றுஇந் நான்கின்
இசைபுணர் குறிநிலை எய்த நோக்கிக்
குரல்வாய் இளிவாய்க் கேட்டனள் அன்றியும்
வரன்முறை மருங்கின் ஐந்தினும் ஏழினும்
உழைமுதல் ஆகவும் உழைஈறு ஆகவும்
குரல்முதல் ஆகவும் குரல்ஈறு ஆகவும்
அகநிலை மருதமும் புறநிலை மருதமும்
அருகியல் மருதமும் பெருகியல் மருதமும்
நால்வகைச் சாதியும் நலம்பெற நோக்கி,
மூவகை இயக்கமும் முறையுளிக் கழிப்பித்
திறத்து வழிப்படூஉம் தெள்ளிசைக் கரணத்துப்
புறத்துஒரு பாணியில் பூங்கொடி மயங்கி,
சண்பகம் மாதவி தமாலம் கருமுகை
வெண்பூ மல்லிகை வேரொடு மிடைந்த
அம்செங் கழுநீர் ஆய்இதழ்க் கத்திகை
எதிர்ப்பூஞ் செவ்வி இடைநிலத்து யாத்த
முதிர்பூந் தாழை முடங்கல்வெண் தோட்டு
விரைமலர் வாளியின் வியன்நிலம் ஆண்ட
ஒருதனிச் செங்கோல் ஒருமகன் ஆணையின்
ஒருமுகம் அன்றி உலகுதொழுது இறைஞ்சும்
திருமுகம் போக்கும் செவ்வியள் ஆகி,
அலத்தகக் கொழுஞ்சேறு அளைஇ அயலது
பித்திகைக் கொழுமுகை ஆணி கைக்கொண்டு,
மன்உயிர் எல்லாம் மகிழ்துணை புணர்க்கும்
இன்இள வேனில் இளவர சாளன்
அந்திப் போதகத்து அரும்பிடர்த் தோன்றிய
திங்கள் செல்வனும் செவ்வியன் அல்லன்
புணர்ந்த மாக்கள் பொழுதுஇடைப் படுப்பினும்
தணந்த மாக்கள் தம்துணை மறப்பினும்
நறும்பூ வாளியின் நல்உயிர் கோடல்
இறும்பூது அன்றுஅ·து அறிந்தீ மின்என
எண்எண் கலையும் இசைந்துஉடன் போக
பண்ணும் திறனும் புறங்கூறு நாவின்
தளைவாய் அவிழ்ந்த தனிப்படு காமத்து
விளையா மழலையின் விரித்துஉரை எழுதி,
பசந்த மேனியள் படர்உறு மாலையின்
வசந்த மாலையை வருகெனக் கூஉய்த்
தூமலர் மாலையின் துணிபொருள் எல்லாம்
கோவலற்கு அளித்துக் கொணர்க ஈங்குஎன
மாலை வாங்கிய வேல்அரி நெடுங்கண்
கூல மறுகிற் கோவலற்கு அளிப்ப,
திலகமும் அளகமும் சிறுகருஞ் சிலையும்
குவளையும் குமிழும் கொவ்வையும் கொண்ட
மாதர் வாள்முகத்து மதைஇய நோக்கமொடு
காதலின் தோன்றிய கண்கூடு வரியும்,
புயல்சுமந்து வருந்திப் பொழிகதிர் மதியத்துக்
கயல்உலாய்த் திரிதரும் காமர் செவ்வியின்
பாகுபொதி பவளம் திறந்துநிலா உதவிய
நாகுஇள முத்தின் நகைநிலம் காட்டி
வருகென வந்து போகெனப் போகிய
கருநெடுங் கண்ணி காண்வரிக் கோலமும்,
அந்தி மாலை வந்ததற்கு இரங்கிச்
சிந்தை நோய் கூரும்என் சிறுமை நோக்கிக்
கிளிபுரை கிளவியும் மடஅன நடையும்
களிமயில் சாயலும் கரந்தனள் ஆகிச்
செருவேல் நெடுங்கண் சிலதியர் கோலத்து
ஒருதனி வந்த உள்வரி ஆடலும்,
சிலம்புவாய் புலம்பவும் மேகலை ஆர்ப்பவும்
கலம்பெறா நுசுப்பினள் காதல் நோக்கமொடு
திறத்துவேறு ஆயஎன் சிறுமை நோக்கியும்
புறத்துநின்று ஆடிய புன்புற வரியும்,
கோதையும் குழலும் தாதுசேர் அளகமும்
ஒருகாழ் முத்தமும் திருமுலைத் தடமும்
மின்இடை வருத்த நன்னுதல் தோன்றிச்
சிறுகுறுந் தொழிலியர் மறுமொழி உய்ப்பப்
புணர்ச்சிஉட் பொதிந்த கலாம்தரு கிளவியின்
இருபுற மொழிப்பொருள் கேட்டனள் ஆகித்
தளர்ந்த சாயல் தகைமென் கூந்தல்
கிளர்ந்துவேறு ஆகிய கிளர்வரிக் கோலமும்,
பிரிந்துஉறை காலத்துப் பரிந்தனள் ஆகி
என்உறு கிளைகட்குத் தன்உறு துயரம்
தேர்ந்துதேர்ந்து உரைத்த தேர்ச்சிவரி அன்றியும்,
வண்டுஅலர் கோதை மாலையுள் மயங்கிக்
கண்டவர்க்கு உரைத்த காட்சி வரியும்,
அடுத்துஅடுத்து அவர்முன் மயங்கிய மயக்கமும்
எடுத்துஅவர் தீர்த்த எடுத்துக்கோள் வரியும்,
ஆடல் மகளே ஆதலின் ஆயிழை.
பாடுபெற் றனஅப் பைந்தொடி தனக்குஎன,
அணித்தோட்டுத் திருமுகத்து ஆயிழை எழுதிய,
மணித்தோட்டுத் திருமுகம் மறுத்ததற்கு இரங்கி
வாடிய உள்ளத்து வசந்த மாலை
தோடுஅலர் கோதைக்குத் துனைந்துசென்று உரைப்ப
மாலை வாரார் ஆயினும் மாண்இழை.
காலைகாண் குவம்எனக் கையறு நெஞ்சமொடு
பூமலர் அமளிமிசைப் பொருந்தாது வதிந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என்.

(வெண்பா) 

செந்தா மரைவிரியத் தேமாங் கொழுந்துஒழுக
மைந்தார் அசோகம் மடல்அவிழக் - கொந்தார்
இளவேனில் வந்ததால் என்ஆம்கொல் இன்று
வளவேல்நற் கண்ணி மனம்.

ஊடினீர் எல்லாம் உருஇலான் தன்ஆணை
கூடுமின் என்று குயில்சாற்ற - நீடிய
வேனற்பா ணிக்கலந்தாள் மென்பூந் திருமுகத்தைக்
கானற்பா ணிக்குஅலந்தாய் காண்.

இளவேனிற் பருவமும் வந்தது. கோவலின் பிரிவாலே துயரடைந்த மாதவி, தன் தோழி வசந்தமாலையைத் தூது அனுப்பினாள். தன்பால் வந்த தூதினைக் கோவலன் மறுத்தான். வசந்தமாலையிடம், ஆயிழையே! அவளோர் ஆடல் மகள்! ஆதலினாலே, என்பாற் காதல் மிகுந்தவளேபோலே நடித்த நாடகமெல்லாம், அவளுடைய அந்தத் தகுதிக்கு மிகவும் பொருத்தம் உடையனவே!தன்மேல் அவளுக்கு உண்மையான காதல் எதுவும் இல்லை எனக் கூறி மாதவியை நாடி வர மறுத்தான். அதனால் மாதவி மனம் துடித்தாள். இளவேனிற்கு முந்திய பருவத்தே பிரிந்தவன், இள்வேனிற் காலத்திலாவது வருவானென மயங்கியிருந்த அவள் மனம், இளவேனிற்காலம் வரவும் அவன் வாராமை கண்டு, நிலை கொள்ளாது தவிக்கின்றது என்பதையும் காணலாம். இளவேனில் பற்றிய ஏக்கமே,கோவலனிடம் கண்ணகி நினைவையும் தூண்டிற்று என்பதும் இப்பகுதியில் கூறப்பட்டுள்ளது

0 comments:

Post a Comment