விழாவறை காதை


உலகம் திரியா ஓங்கு உயர் விழுச் சீர்ப்
பலர் புகழ் மூதூர்ப் பண்பு மேம்படீஇய
ஓங்கு உயர் மலயத்து அருந் தவன் உரைப்ப
தூங்கு எயில் எறிந்த தொடித் தோள் செம்பியன்
விண்ணவர் தலைவனை வணங்கி முன் நின்று
'மண்ணகத்து என்தன் வான் பதி தன்னுள்
மேலோர் விழைய விழாக் கோள் எடுத்த
நால் ஏழ் நாளினும் நன்கு இனிது உறைக' என
அமரர் தலைவன் ஆங்கு அது நேர்ந்தது
கவராக் கேள்வியோர் கடவார் ஆகலின்

மெய்த் திறம் வழக்கு நன்பொருள் வீடு எனும்
இத் திறம் தம் தம் இயல்பினின் காட்டும்
சமயக் கணக்கரும் தம் துறை போகிய
அமயக் கணக்கரும் அகலார் ஆகி
கரந்து உரு எய்திய கடவுளாளரும்
பரந்து ஒருங்கு ஈண்டிய பாடை மாக்களும்
ஐம் பெருங்குழுவும் எண் பேர் ஆயமும்
வந்து ஒருங்கு குழீஇ 'வான்பதி தன்னுள்
கொடித் தேர்த் தானைக் கொற்றவன் துயரம்
விடுத்த பூதம் விழாக்கோள் மறப்பின்

மடித்த செவ் வாய் வல் எயிறு இலங்க
இடிக் குரல் முழக்கத்து இடும்பை செய்திடும்
தொடுத்த பாசத்து தொல் பதி நரகரைப்
புடைத்து உணும் பூதமும் பொருந்தாதாயிடும்
மா இரு ஞாலத்து அரசு தலையீண்டும்
ஆயிரம்கண்ணோன் விழாக் கால்கொள்க' என
வச்சிரக் கோட்டத்து மணம் கெழு முரசம்
கச்சை யானைப் பிடர்த்தலை ஏற்றி
ஏற்று உரி போர்த்த இடி உறு முழக்கின்
கூற்றுக்கண் விளிக்கும் குருதி வேட்கை

முரசு கடிப்பு இகூஉம் முதுகுடிப் பிறந்தோன்
'திரு விழை மூதூர் வாழ்க!' என்று ஏத்தி
'வானம் மும் மாரி பொழிக! மன்னவன்
கோள் நிலை திரியாக் கோலோன் ஆகுக!
தீவகச் சாந்தி செய்தரு நல் நாள்
ஆயிரம்கண்ணோன் தன்னோடு ஆங்கு உள
நால் வேறு தேவரும் நலத்தகு சிறப்பில்
பால் வேறு தேவரும் இப் பதிப் படர்ந்து
மன்னன் கரிகால்வளவன் நீங்கிய நாள்
இந் நகர் போல்வதோர் இயல்பினது ஆகிப்

பொன்நகர் வறிதாப் போதுவர் என்பது
தொல் நிலை உணர்ந்தோர் துணிபொருள் ஆதலின்
தோரண வீதியும் தோம் அறு கோட்டியும்
பூரண கும்பமும் பொலம் பாலிகைகளும்
பாவை விளக்கும் பல உடன் பரப்புமின்
காய்க் குலைக் கமுகும் வாழையும் வஞ்சியும்
பூக் கொடி வல்லியும் கரும்பும் நடுமின்
பத்தி வேதிகைப் பசும் பொன் தூணத்து
முத்துத் தாமம் முறையொடு நாற்றுமின்
விழவு மலி மூதூர் வீதியும் மன்றமும்

பழ மணல் மாற்றுமின் புது மணல் பரப்புமின்
கதலிகைக் கொடியும் காழ் ஊன்று விலோதமும்
மதலை மாடமும் வாயிலும் சேர்த்துமின்
நுதல் விழி நாட்டத்து இறையோன் முதலா
பதி வாழ் சதுக்கத்துத் தெய்வம் ஈறு ஆக
வேறுவேறு சிறப்பின் வேறுவேறு செய்வினை
ஆறு அறி மரபின் அறிந்தோர் செய்யுமின்
தண் மணல் பந்தரும் தாழ்தரு பொதியிலும்
புண்ணிய நல்லுரை அறிவீர்! பொருந்துமின்
ஒட்டிய சமயத்து உறு பொருள் வாதிகள்

பட்டி மண்டபத்து பாங்கு அறிந்து ஏறுமின்
பற்றாமாக்கள் தம்முடன் ஆயினும்
செற்றமும் கலாமும் செய்யாது அகலுமின்
வெண் மணல் குன்றமும் விரி பூஞ் சோலையும்
தண் மணல் துருத்தியும் தாழ் பூந் துறைகளும்
தேவரும் மக்களும் ஒத்து உடன் திரிதரும்
நால் ஏழ் நாளினும் நன்கு அறிந்தீர் என
ஒளிறு வாள் மறவரும் தேரும் மாவும்
களிறும் சூழ்தர கண் முரசு இயம்பி
'பசியும் பிணியும் பகையும் நீங்கி
வசியும் வளனும் சுரக்க!' என வாழ்த்தி
அணி விழா அறைந்தனன் அகநகர் மருங்கு என்

0 comments:

Post a Comment