கடல் ஆடு காதை


வெள்ளி மால்வரை வியன்பெருஞ் சேடிக்
கள்அவிழ் பூம்பொழில் காமக் கடவுட்குக்
கருங்கயல் நெடுங்கண் காதலி தன்னொடு
விருந்தாட்டு அயரும்ஓர் விஞ்சை வீரன்
தென்திசை மருங்கின்ஓர் செழும்பதி தன்னுள்
இந்திர விழவுகொண்டு எடுக்கும்நாள் இதுஎனக்
கடுவிசை அவுணர் கணம்கொண்டு ஈண்டிக்
கொடுவரி ஊக்கத்துக் கோநகர் காத்த
தொடுகழல் மன்னற்குத் தொலைந்தனர் ஆகி
நெஞ்சுஇருள் கூர நிகர்த்துமேல் விட்ட
வஞ்சம் பெயர்த்த மாபெரும் பூதம்
திருந்துவேல் அண்ணற்குத் தேவர்கோன் ஏவ
இருந்துபலி உண்ணும் இடனும் காண்குதும்,
அமரா பதிகாத்து அமரனிற் பெற்றுத்
தமரில் தந்து தகைசால் சிறப்பின்
பொய்வகை இன்றிப் பூமியில் புணர்த்த
ஐவகை மன்றத்து அமைதியும் காண்குதும்,
நாரதன் வீணை நயம்தெரி பாடலும்
தோரிய மடந்தை வாரம் பாடலும்
ஆயிரம் கண்ணோன் செவியகம் நிறைய
நாடகம் உருப்பசி நல்காள் ஆகி
மங்கலம் இழப்ப வீணை மண்மிசைத்
தங்குக இவள்எனச் சாபம் பெற்ற
மங்கை மாதவி வழிமுதல் தோன்றிய
அங்குஅரவு அல்குல் ஆடலும் காண்குதும்,
துவர்இதழ்ச் செவ்வாய்த் துடிஇடை யோயே.
அமரர் தலைவனை வணங்குதும் யாம்எனச்
சிமையத்து இமையமும் செழுநீர்க் கங்கையும்
உஞ்சையம் பதியும் விஞ்சத்து அடவியும்
வேங்கட மலையும் தாங்கா விளையுள்
காவிரி நாடும் காட்டிப் பின்னர்ப்
பூவிரி படப்பைப் புகார்மருங்கு எய்திச்
சொல்லிய முறைமையில் தொழுதனன் காட்டி
மல்லல் மூதூர் மகிழ்விழாக் காண்போன்
மாயோன் பாணியும் வருணப் பூதர்
நால்வகைப் பாணியும் நலம்பெறு கொள்கை
வான்ஊர் மதியமும் பாடிப் பின்னர்ச்
சீர்இயல் பொலிய நீர்அல நீங்கப்
பாரதி ஆடிய பாரதி அரங்கத்துத்
திரிபுரம் எரியத் தேவர் வேண்ட
எரிமுகப் பேர்அம்பு ஏவல் கேட்ப
உமையவள் ஒருதிறன் ஆக ஓங்கிய
இமையவன் ஆடிய கொடுகொட்டி ஆடலும்,
தேர்முன் நின்ற திசைமுகன் காணப்
பாரதி ஆடிய வியன்பாண்ட ரங்கமும்,
கஞ்சன் வஞ்சம் கடத்தற் காக
அஞ்சன வண்ணன் ஆடிய ஆடலுள்
அல்லியத் தொகுதியும், அவுணன் கடந்த
மல்லின் ஆடலும், மாக்கடல் நடுவண்
நீர்த்திரை அரங்கத்து நிகர்த்துமுன் நின்ற
சூர்த்திறம் கடந்தோன் ஆடிய துடியும்,
படைவீழ்த்து அவுணர் பையுள் எய்தக்
குடைவீழ்த்து அவர்முன் ஆடிய குடையும்,
வாணன் பேரூர் மறுகிடை நடந்து
நீள்நிலம் அளந்தோன் ஆடிய குடமும்,
ஆண்மை திரிந்த பெண்மைக் கோலத்துக்
காமன் ஆடிய பேடி ஆடலும்,
காய்சின அவுணர் கடுந்தொழில் பொறாஅள்
மாயவள் ஆடிய மரக்கால் ஆடலும்,
செருவெம் கோலம் அவுணர் நீங்கத்
திருவின் செய்யோள் ஆடிய பாவையும்,
வயல்உழை நின்று வடக்கு வாயிலுள்
அயிராணி மடந்தை ஆடிய கடையமும்,
அவரவர் அணியுடன் அவரவர் கொள்கையின்
நிலையும் படிதமும் நீங்கா மரபின்
பதினோர் ஆடலும் பாட்டின் பகுதியும்
விதிமாண் கொள்கையின் விளங்கக் காணாய்.
தாதுஅவிழ் பூம்பொழில் இருந்துயான் கூறிய
மாதவி மரபின் மாதவி இவள்எனக்
காதலிக்கு உரைத்துக் கண்டுமகிழ்வு எய்திய
மேதகு சிறப்பின் விஞ்சையன் அன்றியும்,
அந்தரத்து உள்ளோர் அறியா மரபின்
வந்துகாண் குறு¡உம் வானவன் விழவும்
ஆடலும் கோலமும் அணியும் கடைக்கொள
ஊடல் கோலமோடு இருந்தோன் உவப்பப்
பத்துத் துவரினும் ஐந்து விரையினும்
முப்பத்து இருவகை ஓமா லிகையினும்
ஊறின நல்நீர் உரைத்தநெய் வாசம்
நாறுஇருங் கூந்தல் நலம்பெற ஆட்டி,
புகையில் புலர்த்திய பூமென் கூந்தலை
வகைதொறும் மான்மதக் கொழுஞ்சேறு ஊட்டி,
அலத்தகம் ஊட்டிய அம்செஞ் சீறடி
நலத்தகு மெல்விரல் நல்அணி செறீஇப்,
பரியகம் நூபுரம் பாடகம் சதங்கை
அரியகம் காலுக்கு அமைவுற அணிந்து,
குறங்கு செறிதிரள் குறங்கினில் செறித்து,
பிறங்கிய முத்தரை முப்பத்து இருகாழ்
நிறம்கிளர் பூந்துகில் நீர்மையின் உடீஇ,
காமர் கண்டிகை தன்னொடு பின்னிய
தூமணித் தோள்வளை தோளுக்கு அணிந்து,
மத்தக மணியொடு வயிரம் கட்டிய
சித்திரச் சூடகம் செம்பொன் கைவளை
பரியகம் வால்வளை பவழப் பல்வளை
அரிமயிர் முன்கைக்கு அமைவுற அணிந்து,
வாளைப் பகுவாய் வணக்குஉறு மோதிரம்
கேழ்கிளர் செங்கேழ் கிளர்மணி மோதிரம்
வாங்குவில் வயிரத்து மரகதத் தாள்செறி
காந்தள் மெல்விரல் கரப்ப அணிந்து,
சங்கிலி நுண்தொடர் பூண்ஞான் புனைவினை
அம்கழுத்து அகவயின் ஆரமோடு அணிந்து,
கயிற்கடை ஒழுகிய காமர் தூமணி
செயத்தகு கோவையின் சிறுபுறம் மறைத்துஆங்கு
இந்திர நீலத்து இடைஇடை திரண்ட
சந்திர பாணி தகைபெறு கடிப்பிணை
அங்காது அகவயின் அழகுற அணிந்து,
தெய்வ உத்தியொடு செழுநீர் வலம்புரி
தொய்யகம் புல்லகம் தொடர்ந்த தலைக்குஅணி
மைஈர் ஓதிக்கு மாண்புற அணிந்து,
கூடலும் ஊடலும் கோவலற்கு அளித்துப்
பாடுஅமை சேக்கைப் பள்ளியுள் இருந்தோள்,
உருகெழு மூது¡ர் உவவுத்தலை வந்தெனப்
பெருநீர் போகும் இரியல் மாக்களொடு
மடல்அவிழ் கானல் கடல்விளை யாட்டுக்
காண்டல் விருப்பொடு வேண்டினள் ஆகி,
பொய்கைத் தாமரைப் புள்வாய் புலம்ப
வைகறை யாமம் வாரணம் காட்ட
வெள்ளி விளக்கம் நள்இருள் கடியத்
தார்அணி மார்பனொடு பேர்அணி அணிந்து
வான வண்கையன் அத்திரி ஏற
மான்அமர் நோக்கியும் வையம் ஏறிக்
கோடிபல அடுக்கிய கொழுநிதிக் குப்பை
மாடமலி மறுகின் பீடிகைத் தெருவின்
மலர்அணி விளக்கத்து மணிவிளக்கு எடுத்துஆங்கு
அலர்க்கொடி அறுகும் நெல்லும் வீசி
மங்கலத் தாசியர் தம்கலன் ஒலிப்ப
இருபுடை மருங்கினும் திரிவனர் பெயரும்
திருமகள் இருக்கை செவ்வனம் கழிந்து
மகர வாரி வளம்தந்து ஓங்கிய
நகர வீதி நடுவண் போகிக்
கலம்தரு திருவின் புலம்பெயர் மாக்கள்
வேலை வாலுகத்து விரிதிரைப் பரப்பில்
கூல மறுகில் கொடிஎடுத்து நுவலும்
மாலைச் சேரி மருங்குசென்று எய்தி,
வண்ணமும் சாந்தும் மலரும் சுண்ணமும்
பண்ணியப் பகுதியும் பகர்வோர் விளக்கமும்,
செய்வினைக் கம்மியர் கைவினை விளக்கமும்,
காழியர் மோதகத்து ஊழ்உறு விளக்கமும்,
கூவியர் கார்அகல் குடக்கால் விளக்கமும்,
நொடைநவில் மகடூஉக் கடைகெழு விளக்கமும்,
இடைஇடை மீன்விலை பகர்வோர் விளக்கமும்,
இலங்குநீர் வரைப்பின் கலங்கரை விளக்கமும்,
விலங்குவலைப் பரதவர் மீன்திமில் விளக்கமும்,
பொழிபெயர் தேஎத்தர் ஒழியா விளக்கமும்,
கழிபெரும் பண்டம் காவலர் விளக்கமும்
எண்ணுவரம்பு அறியா இயைந்துஒருங்கு ஈண்டி
இடிக்கலப்பு அன்ன ஈர்அயில் மருங்கில்
கடிப்பகை காணும் காட்சியது ஆகிய
விரைமலர்த் தாமரை வீங்குநீர்ப் பரப்பின்
மருத வேலியின் மாண்புறத் தோன்றும்
கைதை வேலி நெய்தல்அம் கானல்
பொய்தல் ஆயமொடு பூங்கொடி பொருந்தி
நிரைநிரை எடுத்த புரைதீர் காட்சிய
மலைப்பல் தாரமும் கடல்பல் தாரமும்
வளம்தலை மயங்கிய துளங்குகல இருக்கை
அரசுஇளங் குமரரும் உரிமைச் சுற்றமும்
பரத குமரரும் பல்வேறு ஆயமும்
ஆடுகள மகளிரும் பாடுகள மகளிரும்
தோடுகொள் மருங்கின் சூழ்தரல் எழினியும்
விண்பொரு பெரும்புகழ்க் கரிகால் வளவன்
தண்பதம் கொள்ளும் தலைநாள் போல
வேறுவேறு கோலத்து வேறுவேறு கம்பலை
சாறுஅயர் களத்து வீறுபெறத் தோன்றிக்
கடற்கரை மெலிக்கும் காவிரிப் பேரியாற்று
இடம்கெட ஈண்டிய நால்வகை வருணத்து
அடங்காக் கம்பலை உடங்குஇயைந்து ஒலிப்ப,
கடல்புலவு கடிந்த மடல்பூந் தாழைச்
சிறைசெய் வேலி அகவயின் ஆங்குஓர்
புன்னை நீழல் புதுமணல் பரப்பில்
ஓவிய எழினி சூழஉடன் போக்கி
விதானித்துப் படுத்த வெண்கால் அமளிமிசை
வருந்துபு நின்ற வசந்த மாலைகைத்
திருந்துகோல் நல்லியாழ் செவ்வனம் வாங்கிக்
கோவலன் தன்னொடும் கொள்கையின் இருந்தனள்
மாமலர் நெடுங்கண் மாதவி தான்என.

(வெண்பா)

வேலை மடல்தாழை உட்பொதிந்த வெண்தோட்டு
மாலைத் துயின்ற மணிவண்டு - காலைக்
களிநறவம் தாதுஊதத் தோன்றிற்றே காமர்
தெளிநிற வெங்கதிரோன் தேர்.

விஞ்சையர் வேரன் ஒருவன், தன் காதலியுடன் புகாருக்கு இந்திர விழாக் காணவந்தான். மாதவியின் பதினொரு வகை ஆடல்களையும் தன் காதலிக்குக் காட்டி மகிழ்ந்தான். விழா முடிந்ததும் கோவலன் மாதவியோடு ஊடினான். மாதவி அவன் ஊடல் தீர்த்துக் கூடினாள். பின்னர்க் கடலாட விரும்பினாள். இருவரும் கடற்கரை சென்றனர். களித்திருக்கும் பிற மக்களோடு தாமும் கலந்தவராக அவர்கள் மகிழ்ந்திருந்தனர் என்பதை எடுத்துரைக்கும் பகுதி இது.

0 comments:

Post a Comment