பெண்ணணி கோலம் பெயர்ந்தபிற் பாடு
புண்ணிய முதல்வி திருந்தடி பொருந்திக்
கடுங்கதிர் வேனிலிக் காரிகை பொறாஅள்
படிந்தில சீறடி பரல்வெங் கானத்துக்
கோள்வல் உளியமுங் கொடும்புற் றகழா
வாள்வரி வேங்கையும் மான்கணம் மறலா
அரவுஞ் சூரும் இரைதேர் முதலையும்
உருமுஞ் சார்ந்தவர்க் குறுகண் செய்யா
செங்கோல் தென்னவர் காக்கும் நாடென
எங்கணும் போகிய இசையோ பெரிதே
பகலொளி தன்னினும் பல்லுயி ரோம்பும்
நிலவொளி விளக்கின் நீளிடை மருங்கின்
இரவிடைக் கழிதற் கேத மில்லெனக்
குரவரும் நேர்ந்த கொள்கையி னமர்ந்து
கொடுங்கோல் வேந்தன் குடிகள் போலப்
படுங்கதி ரமையம் பார்த்திருந் தோர்க்குப்
பன்மீன் தானையொடு பாற்கதிர் பரப்பித்
தென்னவன் குலமுதற் செல்வன் தோன்றித்
தாரகைக் கோவையும் சந்தின் குழம்பும்
சீரிள வனமுலை சேரா தொழியவும்
தாதுசேர் கழுநீர்த் தண்பூம் பிணையல்
போதுசேர் பூங்குழற் பொருந்தா தொழியவும்
பைந்தளிர் ஆரமொடு பல்பூங் குறுமுறி
செந்தளிர் மேனி சேரா தொழியவும்
மலயத் தோங்கி மதுரையின் வளர்ந்து
புலவர் நாவிற் பொருந்திய தென்றலொடு
பானிலா வெண்கதிர் பாவைமேற் சொரிய
வேனில் திங்களும் வேண்டுதி யென்றே
பார்மகள் அயாவுயிர்த் தடங்கிய பின்னர்
ஆரிடை உழந்த மாதரை நோக்கிக்
கொடுவரி மறுகும் குடிஞை கூப்பிடும்
இடிதரும் உளியமும் இனையா தேகெனத்
தொடிவளைச் செங்கை தோளிற் காட்டி
மறவுரை நீத்த மாசறு கேள்வி
அறவுரை கேட்டாங் காரிடைகழிந்து
வேனல் வீற்றிருந்த வேய்கரி கானத்துக்
கான வாரணங் கதிர்வர வியம்ப
வரிநவில் கொள்கை மறைநூல் வழுக்கத்துப்
புரிநூல் மார்பர் உறைபதிச் சேர்ந்து
மாதவத் தாட்டியொடு காதலி தன்னையோர்
தீதுதீர் சிறப்பின் சிறையகத் திருத்தி
இடுமுள் வேலி நீங்கி ஆங்கோர்
நெடுநெறி மருங்கின் நீர்தலைப் படுவோன்
காதலி தன்னொடு கானகம் போந்ததற்
கூதுலைக் குருகின் உயிர்த்தனன் கலங்கி
உட்புலம் புறுதலின் உருவந் திரியக்
கட்புல மயக்கத்துக் கௌசிகன் தெரியான்
கோவலன் பிரியக் கொடுந்துய ரெய்திய
மாமலர் நெடுங்கண் மாதவி போன்றிவ்
அருந்திறல் வேனிற் கலர்களைந் துடனே
வருந்தினை போலுநீ மாதவி யென்றோர்
பாசிலைக் குருகின் பந்தரிற் பொருந்தி
கோசிக மாணி கூறக் கேட்டே
யாதுநீ கூறிய உரையீ திங்கெனத்
தீதிலன் கண்டேன் எனச்சென் றெய்திக்
கோசிக மாணி கொள்கையின் உரைப்போன்
இருநிதிக் கிழவனும் பெருமனைக் கிழத்தியும்
அருமணி இழந்த நாகம் போன்றதும்
இன்னுயிர் இழந்த யாக்கை யென்னத்
துன்னிய சுற்றம் துயர்க்கடல் வீழ்ந்ததும்
ஏவ லாளர் யாங்கணுஞ் சென்று
கோவலன் தேடிக் கொணர்கெனப் பெயர்ந்ததும்
பெருமகன் ஏவ லல்ல தியாங்கணும்
அரசே தஞ்சமென் றருங்கான் அடைந்த
அருந்திறல் பிரிந்த அயோத்தி போலப்
பெரும்பெயர் மூதூர் பெரும்பே துற்றதும்
வசந்த மாலைவாய் மாதவி கேட்டுப்
பசந்த மேனியள் படர்நோ யுற்று
நெடுநிலை மாடத் திடைநிலத் தாங்கோர்
படையமை சேக்கைப் பள்ளியுள் வீழ்ந்ததும்
வீழ்துய ருற்றோள் விழுமங் கேட்டுத்
தாழ்துயர் எய்தித் தான்சென் றிருந்ததும்
இருந்துயர் உற்றோள் இணையடி தொழுதேன்
வருந்துயர் நீக்கென மலர்க்கையின் எழுதிக்
கண்மணி யனையாற்குக் காட்டுக வென்றே
மண்ணுடை முடங்கல் மாதவி யீத்ததும்
ஈத்த வோலைகொண் டிடைநெறித் திரிந்து
தீத்திறம் புரிந்தோன் சென்ற தேயமும்
வழிமருங் கிருந்து மாசற உரைத்தாங்கு
அழிவுடை உள்ளத் தாரஞ ராட்டி
போதவிழ் புரிகுழற் பூங்கொடி நங்கை
மாதவி யோலை மலர்க்கையின் நீட்ட
உடனுறை காலத் துரைத்தநெய் வாசம்
குறுநெறிக் கூந்தல் மண்பொறி உணர்த்திக்
காட்டிய தாதலிற் கைவிட லீயான்
ஏட்டகம் விரித் தாங் கெய்திய துணர்வோன்
அடிகள் முன்னர் யானடி வீழ்ந்தேன்
வடியாக் கிளவி மனக்கொளல் வேண்டும்
குரவர்பணி அன்றியுங் குலப்பிறப் பாட்டியோ
டிரவிடைக் கழிதற் கென்பிழைப் பறியாது
கையறு நெஞ்சம் கடியல் வேண்டும்
பொய்தீர் காட்சிப் புரையோய் போற்றி
என்றவள் எழுதிய இசைமொழி யுணர்ந்து
தன்றீ திலளெனத் தளர்ச்சி நீங்கி
என்தீ தென்றே எய்திய துணர்ந்தாங்
கெற்பயந் தோற்கிம் மண்ணுடை முடங்கல்
பொற்புடைத் தாகப் பொருளுரை பொருந்தியது
மாசில் குரவர் மலரடி தொழுதேன்
கோசிக மாணி காட்டெனக் கொடுத்து
நடுக்கங் களைந்தவர் நல்லகம் பொருந்திய
இடுக்கண் களைதற் கீண்டெனப் போக்கி
மாசில் கற்பின் மனைவியோ டிருந்த
ஆசில் கொள்கை அறவிபால் அணைந்தாங்கு
ஆடியல் கொள்கை அந்தரி கோலம்
பாடும் பாணரிற் பாங்குறச் சேர்ந்து
செந்திறம் புரிந்த செங்கோட் டியாழில்
தந்திரி கரத்தொடு திவவுறுத் தியாஅத்து
ஒற்றுறுப் புடைமையிற் பற்றுவழிச் சேர்த்தி
உழைமுதல் கைக்கிளை யிறுவாய்க் கட்டி
வரன்முறை வந்த மூவகைத் தானத்து
பாய்கலைப் பாவை பாடற் பாணி
ஆசான் திறத்தின் அமைவரக் கேட்டுப்
பாடற் பாணி அளைஇ அவரொடு
கூடற் காவதம் கூறுமின் நீரெனக்
காழகிற் சாந்தம் கமழ்பூங் குங்குமம்
நாவிக் குழம்பு நலங்கொள் தேய்வை
மான்மதச் சாந்தம் மணங்கமழ் தெய்வத்
தேமென் கொழுஞ்சே றாடி யாங்குத்
தாதுசேர் கழுநீர் சண்பகக் கோதையொடு
மாதவி மல்லிகை மனைவளர் முல்லைப்
போதுவிரி தொடையல் பூவணை பொருந்தி
அட்டிற் புகையும் அகலங் காடி
முட்டாக் கூவியர் மோதகப் புகையும்
மைந்தரும் மகளிரும் மாடத் தெடுத்த
அந்தீம் புகையும் ஆகுதிப் புகையும்
பல்வேறு பூம்புகை அளைஇ வெல்போர்
விளங்குபூண் மார்பிற் பாண்டியன் கோயிலின்
அளந்துணர் வறியா ஆருயிர் பிணிக்கும்
கலவைக் கூட்டம் காண்வரத் தோன்றிப்
புலவர் செந்நாப் பொருந்திய நிவப்பின்
பொதியில் தென்றல் போலா தீங்கு
மதுரைத் தென்றல் வந்தது காணீர்
நனிசேய்த் தன்றவன் திருமலி மூதூர்
தனிநீர் கழியினுந் தகைக்குநர் இல்லென
முன்னாள் முறைமையின் இருந்தவ முதல்வியொடு
பின்னையும் அல்லிடைப் பெயர்ந்தனர் பெயர்ந்தாங்கு
அருந்தெறற் கடவுள் அகன்பெருங் கோயிலும்
பெரும்பெயர் மன்னவன் பேரிசைக் கோயிலும்
பால்கெழு சிறப்பிற் பல்லியஞ் சிறந்த
காலை முரசக் கனைகுரல் ஓதையும்
நான்மறை அந்தணர் நவின்ற ஓதையும்
மாதவ ரோதி மலிந்த ஓதையும்
மீளா வென்றி வேந்தன் சிறப்பொடு
வாளோர் எடுத்த நாளணி முழவமும்
போரிற் கொண்ட பொருகரி முழக்கமும்
வாரிக் கொண்ட வயக்கரி முழக்கமும்
பணைநிலைப் புரவி ஆலும் ஓதையும்
கிணைநிலைப் பொருநர் வைகறைப் பாணியும்
கார்க்கடல் ஒலியிற் கலிகெழு கூடல்
ஆர்ப்பொலி எதிர்கொள ஆரஞர் நீங்கிக்
குரவமும் வகுளமும் கோங்கமும் வேங்கையும்
மரவமும் நாகமும் திலகமும் மருதமும்
சேடலும் செருந்தியும் செண்பக ஓங்கலும்
பாடலம் தன்னொடு பன்மலர் விரிந்து
குருகும் தளவமும் கொழுங்கொடி முசுண்டையும்
விரிமலர் அதிரலும் வெண்கூ தாளமும்
குடசமும் வெதிரமும் கொழுங்கொடிப் பகன்றையும்
பிடவமும் மயிலையும் பிணங்கரில் மணந்த
கொடுங்கரை மேகலைக் கோவை யாங்கணும்
மிடைந்துசூழ் போகிய அகன்றேந் தல்குல்
வாலுகங் குவைஇய மலர்ப்பூந் துருத்தி
பால்புடைக் கொண்டு பன்மல ரோங்கி
எதிரெதிர் விளங்கிய கதிரிள வனமுலை
கரைநின் றுதிர்த்த கவிரிதழ்ச் செவ்வாய்
அருவி முல்லை அணிநகை யாட்டி
விலங்குநிமிர்ந் தொழுகிய கருங்கயல் நெடுங்கண்
விரைமலர் நீங்கா அவிரறற் கூந்தல்
உலகுபுரந் தூட்டும் உயர்பே ரொழுக்கத்துப்
புலவர் நாவிற் பொருந்திய பூங்கொடி
வையை என்ற பொய்யாக் குலக்கொடி
தையற் குறுவது தானறிந் தனள்போல்
புண்ணிய நறுமல ராடை போர்த்துக்
கண்ணிறை நெடுநீர் கரந்தனள் அடக்கிப்
புனல்யா றன்றிது பூம்புனல் யாறென
அனநடை மாதரும் ஐயனுந் தொழுது
பரிமுக அம்பியும் கரிமுக அம்பியும்
அரிமுக அம்பியும் அருந்துறை யியக்கும்
பெருந்துறை மருங்கிற் பெயரா தாங்கண்
மாதவத் தாட்டியொடு மரப்புணை போகித்
தேமலர் நறும்பொழில் தென்கரை யெய்தி
வானவர் உறையும் மதுரை வலங்கொளத்
தான்நனி பெரிதுந் தகவுடைத் தென்றாங்கு
அருமிளை யுடுத்த அகழிசூழ் போகிக்
கருநெடுங் குவளையும் ஆம்பலும் கமலமும்
தையலும் கணவனும் தனித்துறு துயரம்
ஐய மின்றி அறிந்தன போலப்
பண்ணீர் வண்டு பரிந் தினைந் தேங்கிக்
கண்ணீர் கொண்டு காலுற நடுங்கப்
போருழந் தெடுத்த ஆரெயில் நெடுங்கொடி
வாரலென் பனபோல் மறித்துக்கை காட்டப்
புள்ளணி கழனியும் பொழிலும் பொருந்தி
வெள்ளநீர்ப் பண்ணையும் விரிநீர் ஏரியும்
காய்க்குலைத் தெங்கும் வாழையும் கமுகும்
வேய்த்திரள் பந்தரும் விளங்கிய இருக்கை
அறம்புரி மாந்தர் அன்றிச் சேராப்
புறஞ்சிறை மூதூர் புக்கனர் புரிந்தென்.
பகல் நேர வெய்யிலோ கடுமையாயிருந்தது. அதனால் பகலிற் செல்லாது,இரவில் நிலவு வெளிச்சத்திலேயே அவர்கள் வழிநடந்தனர். இடையே, ஓரிடத்திலே, கௌசிகன் மாதவியின் ஒலையுடன் வருகின்றான். தன் பெற்றோர் அருமணி இழந்த நாகம் போலும் இன்னுயிர் இழந்த யாக்கை போன்றும் துயருற்ற சம்பவத்தையும், உற்றோரும் துயர்க் கடல் வீழ்ந்ததையும், மாதவியின் துயரத்தையும் கௌசிகன் கொண்டுவந்த,மாதவியின் கடிதத்தின் மூலம் அறிந்தான்.மாதவியும் குற்றமற்றவளே என்பதை உணர்ந்து,அக்கடிதத்தையே தன் பெற்றோரிடம் கொண்டுபோய் கொடுக்கும்படியாக கோவலன், கௌசிகனை வேண்டினான். கௌசிகனை மீண்டும் புகாருக்கு அனுப்பிவிட்டுக் கோவலன், அவ்வழியிடையே வந்து தங்கிய பாணருடன் கூடி யாழிசைக்கின்றான். அவர்பால் மதுரையின் தூரத்தினைக் கேட்டறிந்து, வையையாற்றை மரத்தெப்பத்தாற் கடந்து செல்லும் போது வையையாறு கண்ணகிக்கு ஏற்படப்போகும் துன்பத்தைத் தான் முன்னரே அறிந்தவளைப்போலப், புண்ணிய நறுமலர் ஆடைகளால் தன் மேனி முழுவதும் போர்த்துத், தன்கண்நிறைந்த மிகுந்த கண்ணீர் வெள்ளத்தையும் உள்ளடக்கிக்கொண்டு, அவள் அமைதியாகவும் விளங்கினாள். பின்னர் இனிய மலர்செறிந்த நறும்பொழிலின் தென்கரையினைச்சென்று அவர்கள் சேர்ந்தனர். பகைவரைப் போரிலே வென்று வெற்றிக் கொடியானது, 'நீவிர், இவ்வூருக்குள்ளே வாராதீர்' என்பது போல, மறித்துக் கைகாட்டியபடியே பறந்து கொண்டிருந்தது. அறம்புரியும் மாந்தர் அன்றிப் பிறர் யாரும் சென்று தங்காத,புறஞ்சிறை மூதூரினை நோக்கி அவர்கள் மூவரும் விரும்பிச் சென்றனர்.
0 comments:
Post a Comment