சீவகன் போருக்கு எழுதல்


வெதிர்ங் குதைச் சாபம் கான்ற வெம் நுனைப் பகழி மூழ்க
உதிர்ந்தது சேனை ஈட்டம் கூற்றொடு பொருது கொள்ளும்
கருந் தடங் கண்ணி அன்றிக் காயம் ஆறு ஆக ஏகும்
அரும் பெறல் அவளும் ஆகென்று ஆடவர் தொழுது விட்டார்.

கார் விரி மின் அனார் மேல் காமுகர் நெஞ்சி னோடும்
தேர் பரி கடாவித் தேம் தார்ச் சீவகன் அருளில் போகித்
தார் பொலி புரவி வட்டம் தான் புகக் காட்டு கின்றாற்கு
ஊர் பரிவுற்றது எல்லாம் ஒரு மகன் உணர்த்தினானே.

தன் பால் மனையாள் அயலான் தலைக் கண்டு பின்னும்
இன் பால் அடிசில் இவர்கின்ற கைப் பேடி போலாம்
நன்பால் பசுவே துறந்தார் பெண்டிர் பாலர் பார்ப்பார்
என்பாரை ஓம்பேன் எனின் யான் அவன் ஆக என்றான்.

போர்ப் பண் அமைத்து நுகம் பூட்டிப் புரவி பண்ணித்
தேர்ப் பண் அமைத்துச் சிலை கோலிப் பகழி ஆய்ந்து
கார்க் கொண்மூ மின்னி நிமிர்ந்தான் கலிமான் குளம்பில்
பார்க் கண் எழுந்த துகளால் பகல் மாய்ந்தது அன்றே.

0 comments:

Post a Comment