விசயை துன்புறுதல்


நங்கை நீ நடக்கல் வேண்டும் நன் பொருட்கு இரங்கல் வேண்டா
கங்குல் நீ அன்று கண்ட கனவு எல்லாம் விளைந்த என்னக்
கொங்கு அலர் கோதை மாழ்கிக் குழை முகம் புடைத்து வீழ்ந்து
செங் கயல் கண்ணி வெய்ய திருமகற்கு அவலம் செய்தாள்.

மல் அலைத்து எழுந்து வீங்கி மலை திரண்டு அனைய தோளான்
அல்லல் உற்று அழுங்கி வீழ்ந்த அமிர்தம் அன்னாளை எய்திப்
புல்லிக் கொண்டு அவலம் நீக்கிப் பொம்மல் வெம் முலையினாட்குச்
சொல்லுவான் இவைகள் சொன்னான் சூழ் கழல் காலினானே.

சாதலும் பிறத்தல் தானும் தம் வினைப் பயத்தின் ஆகும்
ஆதலும் அழிவும் எல்லாம் அவை பொருட்கு இயல்பு கண்டாய்
நோதலும் பரிவும் எல்லாம் நுண் உணர்வு இன்மை அன்றே
பேதை நீ பெரிதும் பொல்லாய் பெய் வளைத் தோளி என்றான்.

தொல்லை நம் பிறவி எண்ணில் தொடு கடல் மணலும் ஆற்றா
எல்லைய அவற்றுள் எல்லாம் ஏதிலம் பிறந்து நீங்கிச்
செல்லும் அக் கதிகள் தம்முள் சேரலம் சேர்ந்து நின்ற
இல்லினுள் இரண்டு நாளைச் சுற்றமே இரங்கல் வேண்டா.

வண்டு மொய்த்து அரற்றும் பிண்டி வாமனால் வடித்த நுண் நூல்
உண்டு வைத்து அனைய நீயும் உணர்வு இலா நீரை ஆகி
விண்டு கண் அருவி சோர விம் உயிர்த்து இனையை ஆதல்
ஒண் தொடி தகுவது அன்றால் ஒழிக நின் கவலை என்றான்.

உரிமை முன் போக்கி அல்லால் ஒளி உடை மன்னர் போகார்
கருமம் ஈது எனக்கும் ஊர்தி சமைந்தது கவல வேண்டாம்
புரி நரம்பு இரங்கும் சொல்லாய் போவதே பொருள் மற்று என்றான்
எரி முயங்கு இலங்கு வாள் கை ஏற்று இளஞ் சிங்கம் அன்னான்.

0 comments:

Post a Comment