விசயை துறவு நிலையைப் பூணுதல்


நல் உயிர் நீங்கலும் நல் மாண்பு உடையது ஓர்
புல் உயிர் தன்னொடு நின்றுழிப் புல்லுயிர்
கல் உயிர் காட்டில் கரப்பக் கலம் கவிழ்த்து
அல்லல் உற்றாள் உற்றது ஆற்ற உரைப்பாம்.

பொறி அறு பாவையின் பொம் என விம்மி
வெறி உறு கோதை வெறு நிலம் எய்த
இறு முறை எழுச்சியின் எய்துவது எல்லாம்
நெறிமையில் கூற நினைவின் அகன்றாள்.

பெரு மகற்கு ஆக்கம் பிறழ்வு இன்றிக் கேட்டே
திரு மகள் தான் இனிச் செய்வதை எல்லாம்
ஒரு மனத்து அன்னாய் உரை எனலோடும்
தெரு மரு தெய்வதம் செப்பியது அன்றே.

மணி அறைந்து அன்ன வரி அறல் ஐம்பால்
பணி வரும் கற்பின் படை மலர்க் கண்ணாய்
துணி இருள் போர்வையில் துன்னுபு போகி
அணி மணல் பேர் யாற்று அமரிகை சார்வாம்.

அமரிகைக்கு ஓசனை ஐம்பது சென்றால்
குமரிக் கொடி மதில் கோபுர மூதூர்
தமர் இயல் ஓம்பும் தரணி திலகம்
நமர் அது மற்றது நண்ணலம் ஆகி.

வண்டார் குவளைய வாவியும் பொய்கையும்
கண்டார் மனம் கவர் காவும் கஞலிய
தண்டாரணியத்துத் தாபதப் பள்ளி ஒன்று
உண்டு ஆங்கு அதனுள் உறைகுவம் என்றாள்.

பொருள் உடை வாய் மொழி போற்றினள் கூற
மருள் உடை மாதர் மதித்தனள் ஆகி
அருள் உடை மாதவர் அத்திசை முன்னி
இருள் இடை மின்னின் இலங்கு இழை சென்றாள்.

உருவ மா மதி வாள் முகத்து ஓடிய
இருவிலும் எறி மா மகரக் குழைத்
திருவிலும் இவை தேமொழி மாதரைப்
பொரு இல் நீள் அதர் போக்குவ போன்றவே.

சிலம்பு இரங்கிப் போற்று இசைப்பத் திருவில் கை போய் மெய் காப்ப
இலங்கு பொன் கிண்கிணியும் கலையும் ஓங்க எறிவேல் கண்
மலங்க மணி மலர்ந்த பவளக் கொம்பு முழு மெய்யும்
சிலம்பி வலந்தது போல் போர்வை போர்த்துச் செல்லுற்றாள்.

பஞ்சி அடர் அனிச்சம் நெருஞ்சி ஈன்ற பழமால் என்று
அஞ்சும் மலர் அடிகள் அரம் கண்ட அன்ன அரும் காட்டுள்
குஞ்சித்து அசைந்து அசைந்து குருதி கான்று வெய்து உயிரா
வஞ்சி இடை நுடங்க மயில் கை வீசி நடந்ததே.

தடங் கொள் தாமரைத் தாது உறை தேவியும்
குடங்கை போல் உண் கண் கூனியும் கூர்ம் பரல்
கடங்களும் மலையும் கடந்து ஆர் புனல்
இடம் கொள் ஆற்றகம் எய்தினர் என்பவே.

எல்லை எய்திய ஆயிரச் செங்கதிர்
மல்லல் மாக் கடல் தோன்றலும் வைகிருள்
தொல்லை நல்வினை முற்படத் தோன்றிய
அல்லல் வெவ்வினை போல அகன்றதே.

நுணங்கு நுண்கொடி மின் ஓர் மழை மிசை
மணம் கொள் வார் பொழில் வந்து கிடந்தது ஒத்து
அணங்கு நுண் துகில் மேல் அசைந்தாள் அரோ
நிணம் கொள் வைந்நுதி வேல் நெடும் கண்ணினாள்.

வைகிற்று எம் அனை வாழிய போழ்து எனக்
கையினால் அடி தைவரக் கண் மலர்ந்து
ஐயவோ என்று எழுந்தனள் ஆய் மதி
மொய் கொள் பூமி முளைப்பது போலவே.

தூவி அம்சிறை அன்னமும் தோகையும்
மேவி மென் புனம் மான் இனம் ஆதியா
நாவி நாறு எழில் மேனியைக் கண்டு கண்டு
ஆவித்து ஆற்று கிலாது அழுதிட்டவே.

கொம்மை வெம்முலைப் போதின் கொடி அனாள்
உம்மை நின்றது ஓர் ஊழ்வினை உண்மையால்
இம்மை இவ் இடர் உற்றனள் எய்தினாள்
செம்மை மாதவர் செய் தவப் பள்ளியே. 

வாள் உறை நெடுங் கணாளை மாதவ மகளிர் எல்லாம்
தோள் உறப் புல்லுவார் போல் தொக்கு எதிர் கொண்டு புக்குத்
தாள் உறு வருத்தம் ஓம்பித் தவ நெறிப் படுக்கல் உற்று
நாள் உறத் திங்கள் ஊர நல் அணி நீக்குகின்றார்.

திருந்து தகரச் செந் நெருப்பில் தேன் தோய்த்து அமிர்தம் கொள உயிர்க்கும்
கருங் காழ் அகிலின் நறும் புகையில் கழுமிக் கோதை கண் படுக்கும்
திருந்து நானக் குழல் புலம்பத் தேனும் வண்டும் இசைப் புலம்ப
அரும் பொன் மாலை அலங்கலோடு ஆரம் புலம்ப அகற்றினாள்.

திங்கள் உகிரில் சொலிப்பது போல் திலகம் விரலில் தான் நீக்கிப்
பைம்பொன் மகர குண்டலமும் பாவை கழுத்தின் அணிகலமும்
வெம் கண் வேந்தற்கு அமிர்து ஆகி வேல் கண் பாவை பகை ஆய
அம் கண் முலையின் அணி முத்தும் அரும்பொன் பூணும் அகற்றினாள்.

பஞ்சி அனைய வேய் மென் தோள் பகுவாய் மகரம் கான்றிட்ட
துஞ்சாக் கதிர் கொள் துணை முத்தம் தொழுதேன் உம்மை எனத் துறந்து
அஞ்சி வருத்து நுசுப்பினாள் வளை கை உடைத்து மணிக் காந்தள்
அஞ்சச் சிவந்த மெல் விரல் சூழ் அரும் பொன் ஆழி அகற்றினாள்.

பூப் பெய் செம் பொன் கோடிகமும் பொன் ஆர் ஆல வட்டமும்
ஆக்கும் மணி செய் தேர்த்தட்டும் அரவின் பையும் அடும் அல்குல்
வீக்கி மின்னும் கலை எல்லாம் வேந்தன் போகி அரம்பையரை
நோக்கி நும்மை நோக்கான் நீர் நோவது ஒழிமின் எனத் துறந்தாள்.

பிடிக்கை போலும் திரள் குறங்கின் அணியும் நீக்கிப் பிணை அன்னாள்
அடிக் கிண்கிணியும் அம் சிலம்பும் விரல் மோதிரத்தோடு அகற்றிய பின்
கொடிப் பூத்து உதிர்ந்த தோற்றம் போல் கொள்ளத் தோன்றி அணங்கு அலற
உடுத்தாள் கல் தோய் நுண் கலிங்கம் உரவோன் சிறுவன் உயர்க எனவே.

பால் உடை அமிர்தம் பைம் பொன் கலத்திடைப் பாவை அன்ன
நூல் அடு நுசுப்பின் நல்லார் ஏந்தவும் நேர்ந்து நோக்காச்
சேல் அடு கண்ணி காந்தள் திருமணித் துடுப்பு முன் கை
வால் அடகு அருளிச் செய்ய வனத்து உறை தெய்வம் ஆனாள்.

0 comments:

Post a Comment