அகழியின் தோற்றம்


தங்கு ஒளி நித்திலத் தாமம் சூடிய
வெம் களி இள முலை வேல் கண் மாதரார்
பைங்கிளி முன்கை மேல் கொண்டு பார்ப்பு எனும்
கொங்கு அலர் தாமரைக் கிடங்கு கூறுவாம். 

கோள் சுறா இனத்தொடு முதலைக் குப்பைகள்
ஆள் பெறா திரிதர அஞ்சிப் பாய்வன
மோட்டு இறா பனிக் கிடங்கு உழக்க மொய்த்து எழுந்து
ஈட்டறாப் புள் இனம் இரற்றும் என்பவே.

சிறை அனப் பெடையினோடு ஊடிச் சேவல் போய்
அறு பத வண்டு இனம் ஆர்ப்பத் தாமரை
உறைவது குழுவின் நீங்கி யோகொடு
கறை அற முயல்வது ஓர் கடவுள் ஒத்ததே.

அரும் பொனும் வெள்ளியும் மணியும் அல்லது
கருங் கலம் தோய்விலாக் காமர் பூந் துறை
குரும்பை மென் முலையின் மேல் குலாய குங்குமம்
விருந்து செய்திட வெறி மேனி சேந்ததே.

பட்டவர்த் தப்பலின் பரவை ஏந்து அல்குல்
அட்டு ஒளி அரத்தம்வாய்க் கணிகை அல்லது
மட்டு உடை மண மகள் மலர்ந்த போதினால்
கட்டு உடைக் காவலின் காமர் கன்னியே.

நிரை கதிர் நித்திலம் கோத்து வைத்த போல்
விரை கமழ் கமுகின் மேல் விரிந்த பாளையும்
குரை மதுக் குவளைகள் கிடங்கில் பூத்தவும்
உரையின் ஓர் ஓசனை உலாவி நாறுமே.

0 comments:

Post a Comment