விசயை புலம்புதல்


கறை பன்னீர் ஆண்டு உடன் விடுமின் காமர்சாலை தளி நிறுமின்
சிறை செய் சிங்கம் போல் மடங்கிச் சேரா மன்னர் சினம் மழுங்க
உறையும் கோட்டம் உடன் சீமின் ஒண் பொன் குன்றம் தலை திறந்திட்டு
இறைவன் சிறுவன் பிறந்தான் என்று ஏற்பார்க்கு ஊர்தோறு உய்த்து ஈமின்.

மாடம் ஓங்கும் வள நகருள் வரம்பு இல் பண்டம் தலை திறந்திட்டு
ஆடை செம் பொன் அணிகலங்கள் யாவும் யாரும் கவர்ந்து எழு நாள்
வீடல் இன்றிக் கொளப் பெறுவார் விலக்கல் வேண்டா வீழ்ந்தீர்க்குக்
கோடி மூன்றோடு அரைச் செம் பொன் கோமான் நல்கும் என அறைமின்.

அரும் பொன் பூணும் ஆரமும் இமைப்பக் கணிகள் அகன் கோயில்
ஒருங்கு கூடிச் சாதகம் செய்து ஒகை அரசர்க்கு உடன் போக்கிக்
கரும் கைக் களிறும் கம்பலமும் காசும் கவிகள் கொள வீசி
விரும்பப் பிறப்பாய் வினை செய்தேன் காண இஃதோஒ பிறக்குமா.

வெவ் வாய் ஓரி முழவு ஆக விளிந்தார் ஈமம் விளக்கு ஆக
ஒவ்வாச் சுடுகாட்டு உயர் அரங்கில் நிழல் போல் நுடங்கிப் பேய் ஆட
எவ்வாய் மருங்கும் இருந்து இரங்கிக் கூகை குழறிப் பாராட்ட
இவ்வாறு ஆகிப் பிறப்பதோ இதுவோ மன்னர்க்கு இயல் வேந்தே.

பற்றா மன்னன் நகர்ப் புறமால் பாயல் பிணம் சூழ் சுடு காடால்
உற்றார் இல்லாத் தமியேனால் ஒதுங்கல் ஆகாத் தூங்கு இருளால்
மற்று இஞ் ஞாலம் உடையாய்! நீ வளரும் ஆறும் அறியேனால்
எற்றே இது கண்டு ஏகாதே இருத்தியால் என் இன் உயிரே.

பிறந்த நீயும் பூம் பிண்டிப் பெருமான் அடிகள் பேர் அறமும்
புறந்தந்து என்பால் துயர்க் கடலை நீந்தும் புணை மற்று ஆகாக்கால்
சிறந்தார் உளரேல் உரையாயால் சிந்தா மணியே! கிடத்தியால்
மறம் கூர் நும் கோன் சொல் செய்தேன் மம்மர் நோயின் வருந்துகோ.

0 comments:

Post a Comment