சீவக நம்பியும் அச்சணந்தி அடிகளும்


அரும் பொனும் மணியும் முத்தும் காணமும் குறுணி ஆகப் 
பரந்து எலாப் பிரப்பும் வைத்துப் பைம் பொன் செய் தவிசின் உச்சி 
இருந்து பொன் ஓலை செம் பொன் ஊசியால் எழுதி ஏற்பத் 
திருந்து பொன் கண்ணியாற்குச் செல்வியைச் சேர்த்தினாரே.

நாமகள் நலத்தை எல்லாம் நயந்து உடன் பருகி நல் நூல் 
ஏ முதல் ஆய எல்லாப் படைக் கலத் தொழிலும் முற்றிக் 
காமனும் கனிய வைத்த புலம் கரை கண்டு கண் ஆர் 
பூ மகள் பொலிந்த மார்பன் புவிமிசைத் திலம் ஒத்தான்.

மின் தெளித்து எழுதி அன்ன விளங்கும் நுண் நுசுப்பின் நல்லார் 
பொன் தெளித்து எழுதி அன்ன பூம் புறப் பசலை மூழ்கிக் 
குன்று ஒளித்து ஒழிய நின்ற குங்குமத் தோளினாற்குக் 
கன்று ஒளித்து அகல வைத்த கறவையில் கனிந்து நின்றார்.

விலை பகர்ந்து அல்குல் விற்கும் வேலினும் வெய்ய கண்ணார் 
முலை முகந்து இளையர் மார்பம் முரிவிலர் எழுதி வாழும் 
கலை இகந்து இனிய சொல்லார் கங்குலும் பகலும் எல்லாம் 
சிலை இகந்து உயர்ந்த திண் தோள் சீவகற்கு அரற்றி ஆற்றார்.

0 comments:

Post a Comment