ஆங்கு அது கேட்டு ஆங்கு அரும் புண் அகவயின்
தீத் துறு செங் கோல் சென்று சுட்டாங்குக்
கொதித்த உள்ளமொடு குரம்பு கொண்டு ஏறி
விதுப்புறு நெஞ்சினள் வெய்து உயிர்த்துக் கலங்கித்
'தீர்ப்பல் இவ் அறம்!' என சித்திராபதி தான்
கூத்து இயல் மடந்தையர்க்கு எல்லாம் கூறும்
'கோவலன் இறந்த பின் கொடுந் துயர் எய்தி
மாதவி மாதவர் பள்ளியுள் அடைந்தது
நகுதக்கன்றே! நல் நெடும் பேர் ஊர்
இது தக்கு என்போர்க்கு எள் உரை ஆயது!
காதலன் வீய கடுந் துயர் எய்திப்
போதல்செய்யா உயிரொடு புலந்து
நளி இரும் பொய்கை ஆடுநர் போல
முளி எரிப் புகூஉம் முது குடிப் பிறந்த
பத்தினிப் பெண்டிர் அல்லேம் பலர் தம்
கைத்தூண் வாழ்க்கைக் கடவியம் அன்றே
பாண் மகன் பட்டுழிப் படூஉம் பான்மை இல்
யாழ் இனம் போலும் இயல்பினம் அன்றியும்
நறுந் தாது உண்டு நயன் இல் காலை
வறும் பூத் துறக்கும் வண்டு போல்குவம்
வினை ஒழிகாலைத் திருவின் செல்வி
அனையேம் ஆகி ஆடவர்த் துறப்பேம்
தாபதக் கோலம் தாங்கினம் என்பது
யாவரும் நகூஉம் இயல்பினது அன்றே?
மாதவி ஈன்ற மணிமேகலை வல்லி
போது அவிழ் செவ்வி பொருந்துதல் விரும்பிய
உதயகுமரன் ஆம் உலகு ஆள் வண்டின்
சிதையா உள்ளம் செவ்விதின் அருந்தக்
கைக்கொண்டு ஆங்கு அவள் ஏந்திய கடிஞையைப்
பிச்சை மாக்கள் பிறர் கைக் காட்டி
மற்று அவன் தன்னால் மணிமேகலை தனைப்
பொன் தேர்க் கொண்டு போதேன் ஆகின்
சுடுமண் ஏற்றி அரங்கு சூழ் போகி
வடுவொடு வாழும் மடந்தையர் தம்மோர்
அனையேன் ஆகி அரங்கக் கூத்தியர்
மனைஅகம் புகாஅ மரபினன்' என்றே
வஞ்சினம் சாற்றி நெஞ்சு புகையுயிர்த்து
வஞ்சக் கிளவி மாண்பொடு தேர்ந்து
செறி வளை நல்லார் சிலர் புறம் சூழக்
குறு வியர் பொடித்த கோல வாள் முகத்தள்
கடுந் தேர் வீதி காலில் போகி
இளங்கோ வேந்தன் இருப்பிடம் குறுகி
அரவ வண்டொடு தேன் இனம் ஆர்க்கும்
தரு மணல் ஞெமிரிய திரு நாறு ஒரு சிறைப்
பவழத் தூணத்து பசும் பொன் செஞ் சுவர்த்
திகழ் ஒளி நித்திலச் சித்திர விதானத்து
விளங்கு ஒளி பரந்த பளிங்கு செய் மண்டபத்து
துளங்கும் மான் ஊர்தித் தூ மலர்ப் பள்ளி
வெண் திரை விரிந்த வெண் நிறச் சாமரை
கொண்டு இரு மருங்கும் கோதையர் வீச
இருந்தோன் திருந்து அடி பொருந்தி நின்று ஏத்தித்
திருந்து எயிறு இலங்கச் செவ்வியின் நக்கு அவன்
'மாதவி மணிமேகலையுடன் எய்திய
தாபதக் கோலம் தவறு இன்றோ?' என
'அரிது பெறு சிறப்பின் குருகு கருவுயிர்ப்ப
ஒரு தனி ஓங்கிய திரு மணிக் காஞ்சி
பாடல்சால் சிறப்பின் பரதத்து ஓங்கிய
நாடகம் விரும்ப நல் நலம் கவினிக்
காமர் செவ்விக் கடி மலர் அவிழ்ந்தது
உதயகுமரன் எனும் ஒரு வண்டு உணீஇய
விரைவொடு வந்தேன் வியன் பெரு மூதூர்ப்
பாழ்ம்ம் பறந்தலை அம்பலத்து ஆயது
வாழ்க நின் கண்ணி! வாய் வாள் வேந்து!' என
ஓங்கிய பௌவத்து உடைகலப் பட்டோன்
வான் புணை பெற்றென மற்று அவட்கு உரைப்போன்
"மேவிய பளிங்கின் விருந்தின் பாவை இஃது
ஓவியச் செய்தி" என்று ஒழிவேன் முன்னர்
காந்தள் அம் செங் கை தளை பிணி விடாஅ
ஏந்து இள வன முலை இறை நெரித்ததூஉம்
ஒத்து ஒளிர் பவளத்துள் ஒளி சிறந்த
முத்துக் கூர்த்தன்ன முள் எயிற்று அமுதம்
அருந்த ஏமாந்த ஆர் உயிர் தளிர்ப்ப
விருந்தின் மூரல் அரும்பியதூஉம்
மா இதழ்க் குவளை மலர் புறத்து ஓட்டிக்
காய் வேல் வென்ற கருங் கயல் நெடுங் கண்
"அறிவு பிறிதாகியது ஆய் இழை தனக்கு" என
செவிஅகம் புகூஉச் சென்ற செவ்வியும்
பளிங்கு புறத்து எறிந்த பவளப் பாவை "என்
உளம் கொண்டு ஒளித்தாள் உயிர்க் காப்பிட்டு" என்று
இடை இருள் யாமத்து இருந்தேன் முன்னர்ப்
பொன் திகழ் மேனி ஒருத்தி தோன்றிச்
செங்கோல் காட்டிச் "செய் தவம் புரிந்த
அங்கு அவள் தன் திறம் அயர்ப்பாய்" என்றனள்
தெய்வம்கொல்லோ? திப்பியம்கொல்லோ?
எய்யா மையலேன் யான்! என்று அவன் சொலச்
சித்திராபதி தான் சிறு நகை எய்தி
'அத் திறம் விடுவாய் அரசு இளங் குருசில்!
காமக் கள்ளாட்டிடை மயக்குற்றன
தேவர்க்கு ஆயினும் சிலவோ செப்பின்?
மாதவன் மடந்தைக்கு வருந்து துயர் எய்தி
ஆயிரம் செங் கண் அமரர் கோன் பெற்றதும்
மேருக் குன்றத்து ஊரும் நீர்ச் சரவணத்து
அருந் திறல் முனிவர்க்கு ஆர் அணங்கு ஆகிய
பெரும் பெயர்ப் பெண்டிர்பின்பு உளம் போக்கிய
அங்கி மனையாள் அவரவர் வடிவு ஆய்த்
தங்கா வேட்கை தனை அவண் தணித்ததூஉம்
கேட்டும் அறிதியோ வாள் திறல் குருசில்?
கன்னிக் காவலும் கடியின் காவலும்
தன் உறு கணவன் சாவுறின் காவலும்
நிறையின் காத்துப் பிறர் பிறர்க் காணாது
கொண்டோன் அல்லது தெய்வமும் பேணாப்
பெண்டிர் தம் குடியில் பிறந்தாள் அல்லள்
நாடவர் காண நல் அரங்கு ஏறி
ஆடலும் பாடலும் அழகும் காட்டி
சுருப்பு நாண் கருப்பு வில் அருப்புக் கணை தூவச்
செருக் கயல் நெடுங் கண் சுருக்கு வலைப் படுத்துக்
கண்டோர் நெஞ்சம் கொண்டு அகம் புக்குப்
பண் தேர் மொழியின் பயன் பல வாங்கி
வண்டின் துறக்கும் கொண்டி மகளிரைப்
பான்மையின் பிணித்துப் படிற்று உரை அடக்குதல்
கோன்முறை அன்றோ குமரற்கு?' என்றலும்
உதயகுமரன் உள்ளம் பிறழ்ந்து
விரை பரி நெடுந் தேர்மேல் சென்று ஏறி
ஆய் இழை இருந்த அம்பலம் எய்தி
காடு அமர் செல்வி கடிப் பசி களைய
ஓடு கைக்கொண்டு நின்று ஊட்டுநள் போலத்
தீப் பசி மாக்கட்குச் செழுஞ் சோறு ஈத்துப்
பாத்திரம் ஏந்திய பாவையைக் கண்டலும்
இடங்கழி காமமொடு அடங்காண் ஆகி
'உடம்போடு என் தன் உள்ளகம் புகுந்து என்
நெஞ்சம் கவர்ந்த வஞ்சக் கள்வி
நோற்றூண் வாழ்க்கையின் நொசி தவம் தாங்கி
ஏற்றூண் விரும்பிய காரணம் என்? என
தானே தமியள் நின்றோள் முன்னர்
யானே கேட்டல் இயல்பு' எனச் சென்று
'நல்லாய்! என்கொல் நல் தவம் புரிந்தது?
சொல்லாய்' என்று துணிந்துடன் கேட்ப
'என் அமர் காதலன் இராகுலன் ஈங்கு இவன்
தன் அடி தொழுதலும் தகவு!' என வணங்கி
'அறைபோய் நெஞ்சம் அவன்பால் அணுகினும்
இறை வளை முன்கை ஈங்கு இவன் பற்றினும்
தொன்று காதலன் சொல் எதிர் மறுத்தல்
நன்றி அன்று!' என நடுங்கினள் மயங்கி
'கேட்டது மொழியேன் கேள்வியாளரின்
தோட்ட செவியை நீ ஆகுவை ஆம் எனின்
பிறத்தலும் மூத்தலும் பிணிப்பட்டு இரங்கலும்
இறத்தலும் உடையது இடும்பைக் கொள்கலம்
மக்கள் யாக்கை இது என உணர்ந்து
மிக்க நல் அறம் விரும்புதல் புரிந்தேன்
மண்டு அமர் முருக்கும் களிறு அனையார்க்கு
பெண்டிர் கூறும் பேர் அறிவு உண்டோ
கேட்டனை ஆயின் வேட்டது செய்க!' என
வாள் திறல் குருசிலை மடக்கொடி நீங்கி
முத்தை முதல்வி முதியாள் இருந்த
குச்சரக் குடிகை தன் அகம் புக்கு ஆங்கு
'ஆடவர் செய்தி அறிகுநர் யார்?' எனத்
தோடு அலர் கோதையைத் தொழுதனன் ஏத்தி
மாய விஞ்சை மந்திரம் ஓதிக்
காயசண்டிகை எனும் காரிகை வடிவு ஆய்
மணிமேகலை தான் வந்து தோன்ற
அணி மலர்த் தாரோன் அவள்பால் புக்குக்
குச்சரக் குடிகைக் குமரியை மரீஇப்
'பிச்சைப் பாத்திரம் பெரும் பசி உழந்த
காயசண்டிகை தன் கையில் காட்டி
மாயையின் ஒளித்த மணிமேகலை தனை
ஈங்கு இம் மண்ணீட்டு யார் என உணர்கேன்?
ஆங்கு அவள் இவள் என்று அருளாய் ஆயிடின்
பல் நாள் ஆயினும் பாடுகிடப்பேன்!
இன்னும் கேளாய் இமையோர் பாவாய்!
பவளச் செவ் வாய்த் தவள வாள் நகையும்
அஞ்சனம் சேராச் செங் கயல் நெடுங் கணும்
முரிந்து கடை நெரிய வரிந்த சிலைப் புருவமும்
குவி முள் கருவியும் கோணமும் கூர் நுனைக்
கவை முள் கருவியும் ஆகிக் கடிகொள
கல்விப் பாகரின் காப்பு வலை ஓட்டி
வல் வாய் யாழின் மெல்லிதின் விளங்க
முதுக்குறை முதுமொழி எடுத்துக் காட்டிப்
புதுக் கோள் யானை வேட்டம் வாய்ந்தென
முதியாள்! உன் தன் கோட்டம் புகுந்த
மதி வாள் முகத்து மணிமேகலை தனை
ஒழியப் போகேன் உன் அடி தொட்டேன்
இது குறை' என்றனன் இறைமகன் தான் என்
0 comments:
Post a Comment