பத்தினிப் பெண்டிர் பாத்தூண் ஏற்ற
பிச்சைப் பாத்திரப் பெருஞ் சோற்று அமலை
அறத்தின் ஈட்டிய ஒண் பொருள் அறவோன்
திறத்து வழிப்படூஉம் செய்கை போல
வாங்கு கை வருந்த மன் உயிர்க்கு அளித்துத்
தான் தொலைவு இல்லாத் தகைமை நோக்கி
யானைத்தீ நோய் அகவயிற்று அடக்கிய
காயசண்டிகை எனும் காரிகை வணங்கி
'நெடியோன் மயங்கி நிலமிசைத் தோன்றி
அடல் அரு முந்நீர் அடைத்த ஞான்று
குரங்கு கொணர்ந்து எறிந்த நெடு மலை எல்லாம்
அணங்கு உடை அளக்கர் வயிறு புக்காங்கு
இட்டது ஆற்றாக் கட்டு அழல் கடும் பசிப்
பட்டேன் என் தன் பழ வினைப் பயத்தால்
அன்னை கேள் நீ ஆர் உயிர் மருத்துவி
துன்னிய என் நோய் துடைப்பாய்!' என்றலும்
எடுத்த பாத்திரத்து ஏந்திய அமுதம்
பிடித்து அவள் கையில் பேணினள் பெய்தலும்
வயிறு காய் பெரும் பசி நீங்கி மற்று அவள்
துயரம் நீங்கித் தொழுதனள் உரைக்கும்
'மாசு இல்வாள் ஒளி வட திசைச் சேடிக்
காசு இல் காஞ்சனபுரக் கடி நகர் உள்ளேன்
விஞ்சையன் தன்னொடு என் வெவ் வினை உருப்பத்
தென் திசைப் பொதியில் காணிய வந்தேன்
கடுவரல் அருவிக் கடும் புனல் கொழித்த
இடு மணல் கான் யாற்று இயைந்து ஒருங்கு இருந்தேன்
புரி நூல் மார்பின் திரி புரி வார் சடை
மரவுரி உடையன் விருச்சிகன் என்போன்
பெருங் குலைப் பெண்ணைக் கருங் கனி அனையது ஓர்
இருங் கனி நாவல் பழம் ஒன்று ஏந்தி
தேக்கு இலை வைத்துச் சேண் நாறு பரப்பின்
பூக் கமழ் பொய்கை ஆடச் சென்றோன்
தீவினை உருத்தலின் செருக்கொடு சென்றேன்
காலால் அந்தக் கருங் கனி சிதைத்தேன்
உண்டல் வேட்கையின் வரூஉம் விருச்சிகன்
கண்டனன் என்னைக் கருங் கனிச் சிதைவுடன்
"சீர் திகழ் நாவலில் திப்பியம் ஆனது
ஈர் ஆறு ஆண்டில் ஒரு கனி தருவது
அக் கனி உண்டோர் ஆறு ஈர் ஆண்டு
மக்கள் யாக்கையின் வரும் பசி நீங்குவர்
பன்னீராண்டில் ஒரு நாள் அல்லது
உண்ணா நோன்பினேன் உண் கனி சிதைத்தாய்!
அந்தரம் செல்லும் மந்திரம் இழந்து
தந்தித் தீயால் தனித் துயர் உழந்து
முந்நால் ஆண்டில் முதிர் கனி நான் ஈங்கு
உண்ணும் நாள் உன் உறு பசி களைக!" என
அந் நாள் ஆங்கு அவன் இட்ட சாபம்
இந் நாள் போலும் இளங்கொடி! கெடுத்தனை!
வாடு பசி உழந்து மா முனி போய பின்
பாடு இமிழ் அருவிப் பய மலை ஒழிந்து என்
அலவலைச் செய்திக்கு அஞ்சினன் அகன்ற
இலகு ஒளி விஞ்சையன் விழுமமோடு எய்தி
"ஆர் அணங்கு ஆகிய அருந் தவன் தன்னால்
காரணம் இன்றியும் கடு நோய் உழந்தனை!
வானூடு எழுக" என மந்திரம் மறந்தேன்!
ஊன் உயிர் நீங்கும் உருப்பொடு தோன்றி
வயிறு காய் பெரும் பசி வருத்தும் என்றேற்கு
தீம் கனி கிழங்கு செழுங் காய் நல்லன
ஆங்கு அவன் கொணரவும் ஆற்றேன்ஆக
நீங்கல் ஆற்றான் நெடுந் துயர் எய்தி
ஆங்கு அவன் ஆங்கு எனக்கு அருளொடும் உரைப்போன்
"சம்புத் தீவினுள் தமிழக மருங்கில்
கம்பம் இல்லாக் கழி பெருஞ் செல்வர்
ஆற்றா மாக்கட்கு ஆற்றும் துணை ஆகி
நோற்றோர் உறைவது ஓர் நோன் நகர் உண்டால்
பல நாள் ஆயினும் நிலனொடு போகி
அப் பதிப் புகுக" என்று அவன் அருள்செய்ய
இப் பதிப் புகுந்து ஈங்கு யான் உறைகின்றேன்
இந்திர கோடணை விழவு அணி வரு நாள்
வந்து தோன்றி இம் மா நகர் மருங்கே
என் உறு பெரும் பசி கண்டனன் இரங்கி
பின் வரும் யாண்டு அவன் எண்ணினன் கழியும்
தணிவு இல் வெம் பசி தவிர்த்தனை வணங்கினேன்
மணிமேகலை! என் வான் பதிப் படர்கேன்
துக்கம் துடைக்கும் துகள் அறு மாதவர்
சக்கரவாளக் கோட்டம் உண்டு ஆங்கு அதில்
பலர் புகத் திறந்த பகு வாய் வாயில்
உலக அறவி ஒன்று உண்டு அதனிடை
ஊர்ஊர் ஆங்கண் உறு பசி உழந்தோர்
ஆரும் இன்மையின் அரும் பிணி உற்றோர்
இடுவோர்த் தேர்ந்து ஆங்கு இருப்போர் பலரால்
வடு வாழ் கூந்தல்! அதன்பால் போக' என்று
ஆங்கு அவள் போகிய பின்னர் ஆய் இழை
ஓங்கிய வீதியின் ஒரு புடை ஒதுங்கி
வல முறை மும் முறை வந்தனை செய்து அவ்
உலக அறவியின் ஒரு தனி ஏறி
பதியோர் தம்மொடு பலர் தொழுது ஏத்தும்
முதியோள் கோட்டம் மும்மையின் வணங்கிக்
கந்து உடை நெடு நிலைக் காரணம் காட்டிய
தம் துணைப் பாவையைத் தான் தொழுது ஏத்தி
வெயில் சுட வெம்பிய வேய் கரி கானத்துக்
கருவி மா மழை தோன்றியதென்ன
பசி தின வருந்திய பைதல் மாக்கட்கு
அமுதசுரபியோடு ஆய் இழை தோன்றி
'ஆபுத்திரன் கை அமுதசுரபி இஃது
யாவரும் வருக ஏற்போர் தாம்!' என
ஊண் ஒலி அரவத்து ஒலி எழுந்தன்றே
யாணர்ப் பேர் ஊர் அம்பல மருங்கு என்
0 comments:
Post a Comment