ஆங்கு தாயரோடு அறவணர்த் தேர்ந்து
வாங்கு வில் தானை வானவன் வஞ்சியின்
வேற்று மன்னரும் உழிஞை வெம் படையும்
போல் புறம் சுற்றிய புறக்குடி கடந்து
சுருங்கைத் தூம்பின் மனை வளர் தோகையர்
கருங் குழல் கழீஇய கலவை நீரும்
எந்திர வாவியில் இளைஞரும் மகளிரும்
தம் தமில் ஆடிய சாந்து கழி நீரும்
புவி காவலன் தன் புண்ணிய நல் நாள்
சிவிறியும் கொம்பும் சிதறு விரை நீரும்
மேலை மாதவர் பாதம் விளக்கும்
சீல உபாசகர் செங் கை நறு நீரும்
அறம் செய் மாக்கள் அகில் முதல் புகைத்து
நிறைந்த பந்தல் தசும்பு வார் நீரும்
உறுப்பு முரண் உறாமல் கந்த உத்தியினால்
செறித்து அரைப்போர் தம் செழு மனை நீரும்
என்று இந் நீரே எங்கும் பாய்தலின்
கன்றிய கராமும் இடங்கரும் மீன்களும்
ஒன்றிய புலவு ஒழி உடம்பின ஆகி
தாமரை குவளை கழுநீர் ஆம்பல்
பூமிசைப் பரந்து பொறி வண்டு ஆர்ப்ப
இந்திர தனு என இலங்கு அகழ் உடுத்து
வந்து எறி பொறிகள் வகை மாண்பு உடைய
கடி மதில் ஓங்கிய இடைநிலை வரைப்பில்
பசு மிளை பரந்து பல் தொழில் நிறைந்த
வெள்ளிக் குன்றம் உள் கிழிந்து அன்ன
நெடு நிலைதோறும் நிலாச் சுதை மலரும்
கொடி மிடை வாயில் குறுகினள் புக்கு
கடை காப்பு அமைந்த காவலாளர்
மிடைகொண்டு இயங்கும் வியன் மலி மறுகும்
பல் மீன் விலைஞர் வெள் உப்புப் பகருநர்
கள் நொடையாட்டியர் காழியர் கூவியர்
மைந் நிண விலைஞர் பாசவர் வாசவர்
என்னுநர் மறுகும் இருங் கோவேட்களும்
செம்பு செய்ஞ்ஞ்அரும் கஞ்சகாரரும்
பைம்பொன் செய்ஞ்ஞ்அரும் பொன் செய் கொல்லரும்
மரம் கொல் தச்சரும் மண்ணீட்டாளரும்
வரம் தர எழுதிய ஓவிய மாக்களும்
தோலின் துன்னரும் துன்ன வினைஞரும்
மாலைக்காரரும் காலக் கணிதரும்
நலம் தரு பண்ணும் திறனும் வாய்ப்ப
நிலம் கலம் கண்டம் நிகழக் காட்டும்
பாணர் என்று இவர் பல் வகை மறுகும்
விலங்கரம் பொரூஉம் வெள் வளை போழ்நரோடு
இலங்கு மணி வினைஞ்அர் இரீஇய மறுகும்
வேத்தியல் பொது இயல் என்று இவ் இரண்டின்
கூத்து இயல்பு அறிந்த கூத்தியர் மறுகும்
பால் வேறு ஆக எண் வகைப் பட்ட
கூலம் குவைஇய கூல மறுகும்
மாகதர் சூதர் வேதாளிகர் மறுகும்
போகம் புரக்கும் பொதுவர் பொலி மறுகும்
கண் நுழைகல்லா நுண் நூல் கைவினை
வண்ண அறுவையர் வளம் திகழ் மறுகும்
பொன் உரை காண்போர் நல் மனை மறுகும்
பல் மணி பகர்வோர் மன்னிய மறுகும்
மறையோர் அருந் தொழில் குறையா மறுகும்
அரைசு இயல் மறுகும் அமைச்சு இயல் மறுகும்
எனைப் பெருந் தொழில் செய் ஏனோர் மறுகும்
மன்றமும் பொதியிலும் சந்தியும் சதுக்கமும்
புதுக் கோள் யானையும் பொன் தார்ப் புரவியும்
கதிக்கு உற வடிப்போர் கவின் பெறு வீதியும்
சேண் ஓங்கு அருவி தாழ்ந்த செய்குன்றமும்
வேணவா மிகுக்கும் விரை மரக் காவும்
விண்ணவர் தங்கள் விசும்பு இடம் மறந்து
நண்ணுதற்கு ஒத்த நல் நீர் இடங்களும்
சாலையும் கூடமும் தமனியப் பொதியிலும்
கோலம் குயின்ற கொள்கை இடங்களும்
கண்டு மகிழ்வுற்று கொண்ட வேடமோடு
அந்தர சாரிகள் அமர்ந்து இனிது உறையும்
இந்திர விகாரம் என எழில் பெற்று
நவை அறு நாதன் நல் அறம் பகர்வோர்
உறையும் பள்ளி புக்கு இறை வளை நல்லாள்
கோவலன் தாதை மா தவம் புரிந்தோன்
பாதம் பணிந்து தன் பாத்திர தானமும்
தானப் பயத்தால் சாவக மன்னவன்
ஊனம் ஒன்று இன்றி உலகு ஆள் செல்வமும்
செல்வற் கொணர்ந்து அத் தீவகப் பீடிகை
ஒல்காது காட்ட பிறப்பினை உணர்ந்ததும்
உணர்ந்தோன் முன்னர் உயர் தெய்வம் தோன்றி
மனம் கவல் கெடுத்ததும் மா நகர் கடல் கொள
அறவண அடிகளும் தாயரும் ஆங்கு விட்டு
இறவாது இப் பதிப் புகுந்தது கேட்டதும்
சாவக மன்னன் தன் நாடு எய்த
தீவகம் விட்டு இத் திரு நகர் புகுந்ததும்
புக்க பின் அந்தப் பொய் உருவுடனே
தக்க சமயிகள் தம் திறம் கேட்டதும்
அவ்வவர் சமயத்து அறி பொருள் எல்லாம்
செவ்விது அன்மையின் சிந்தை வையாததும்
நாதன் நல் அறம் கேட்டலை விரும்பி
மாதவன் தேர்ந்து வந்த வண்ணமும்
சொல்லினள் ஆதலின் 'தூயோய்! நின்னை என்
நல்வினைப் பயன்கொல் நான் கண்டது?' எனத்
'தையல்' கேள் நின் தாதையும் தாயும்
செய்த தீவினையின் செழு நகர் கேடுற
துன்புற விளிந்தமை கேட்டுச் சுகதன்
அன்பு கொள் அறத்திற்கு அருகனேன் ஆதலின்
மனைத்திறவாழ்க்கையை மாயம் என்று உணர்ந்து
தினைத்தனை ஆயினும் செல்வமும் யாக்கையும்
நிலையா என்றே நிலைபெற உணர்ந்தே
மலையா அறத்தின் மா தவம் புரிந்தேன்
புரிந்த யான் இப் பூங் கொடிப் பெயர்ப் படூஉம்
திருந்திய நல் நகர் சேர்ந்தது கேளாய்
குடக் கோச் சேரலன் குட்டுவர் பெருந்தகை
விடர்ச் சிலை பொறித்த வேந்தன் முன் நாள்
துப்பு அடு செவ் வாய்த் துடி இடையாரொடும்
இப் பொழில் புகுந்து ஆங்கு இருந்த எல்லையுள்
இலங்கா தீவத்துச் சமனொளி என்னும்
சிலம்பினை எய்தி வலம் கொண்டு மீளும்
தரும சாரணர் தங்கிய குணத்தோர்
கரு முகில் படலத்துக் ககனத்து இயங்குவோர்
அரைசற்கு ஏது அவ் வழி நிகழ்தலின்
புரையோர் தாமும் இப் பூம்பொழில் இழிந்து
கல் தலத்து இருந்துழி காவலன்விரும்பி
முன் தவம் உடைமையின் முனிகளை ஏத்திப்
பங்கயச் சேவடி விளக்கி பான்மையின்
அங்கு அவர்க்கு அறு சுவை நால் வகை அமிழ்தம்
பாத்திரத்து அளித்துப் பலபல சிறப்பொடு
வேத்தவையாரொடும் ஏத்தினன் இறைஞ்சலின்
பிறப்பின் துன்பமும் பிறவா இன்பமும்
அறத்தகை முதல்வன் அருளிய வாய்மை
இன்ப ஆர் அமுது இறைவன் செவிமுதல்
துன்பம் நீங்கச் சொரியும் அந் நாள்
நின் பெருந் தாதைக்கு ஒன்பது வழி முறை
முன்னோன் கோவலன் மன்னவன் தனக்கு
நீங்காக் காதல் பாங்கன் ஆதலின்
தாங்க நல் அறம் தானும் கேட்டு
முன்னோர் முறைமையின் படைத்ததை அன்றி
தன்னான் இயன்ற தனம் பல கோடி
எழு நாள் எல்லையுள் இரவலர்க்கு ஈத்து
தொழு தவம் புரிந்தோன் சுகதற்கு இயற்றிய
வான் ஓங்கு சிமையத்து வால் ஒளிச் சயித்தம்
ஈனோர்க்கு எல்லாம் இடர் கெட இயன்றது
கண்டு தொழுது ஏத்தும் காதலின் வந்து இத்
தண்டாக் காட்சித் தவத்தோர் அருளிக்
"காவிரிப் பட்டினம் கடல் கொளும்" என்ற அத்
தூ உரை கேட்டுத் துணிந்து இவண் இருந்தது
இன்னும் கேளாய் நல் நெறி மாதே!
"தீவினை உருப்பச் சென்ற நின் தாதையும்
தேவரில் தோற்றி முன்செய் தவப் பயத்தால்
ஆங்கு அத் தீவினை இன்னும் துய்த்துப்
பூங்கொடி! முன்னவன் போதியில் நல் அறம்
தாங்கிய தவத்தால் தான் தவம் தாங்கிக்
காதலி தன்னொடு கபிலை அம் பதியில்
நாதன் நல் அறம் கேட்டு வீடு எய்தும்" என்று
அற்புதக் கிளவி அறிந்தோர் கூறச்
சொல் பயன் உணர்ந்தேன் தோகை! யானும்
அந் நாள் ஆங்கு அவன் அற நெறி கேட்குவன்
நின்னது தன்மை அந் நெடு நிலைக் கந்தில் துன்னிய
துவதிகன் உரையின் துணிந்தனை அன்றோ?
தவ நெறி அறவணன் சாற்றக் கேட்டனன்
ஆங்கு அவன் தானும் நின் அறத்திற்கு ஏது
பூங்கொடி! கச்சி மா நகர் ஆதலின்
மற்று அம் மா நகர் மாதவன் பெயர் நாள்
பொன் தொடி தாயரும் அப் பதிப் படர்ந்தனர்
அன்னதை அன்றியும் அணி இழை! கேளாய்
பொன் எயில் காஞ்சி நாடு கவின் அழிந்து
மன் உயிர் மடிய மழை வளம் கரத்தலின்
அந் நகர் மாதவர்க்கு ஐயம் இடுவோர்
இன்மையின் இந் நகர் எய்தினர் காணாய்
ஆர் உயிர் மருந்தே! அந் நாட்டு அகவயின்
கார் எனத் தோன்றிக் காத்தல் நின் கடன்' என
அருந் தவன் அருள ஆய் இழை வணங்கித்
திருந்திய பாத்திரம் செங் கையின் ஏந்திக்
கொடி மதில் மூதூர்க் குடக்கண் நின்று ஓங்கி
வட திசை மருங்கின் வானத்து இயங்கித்
தேவர் கோமான் காவல் மாநகர்
மண் மிசைக் கிடந்தென வளம் தலைமயங்கிய
பொன் நகர் வறிதாப் புல்லென்று ஆயது
கண்டு உளம் கசிந்த ஒண் தொடி நங்கை
பொன் கொடி மூதூர்ப் புரிசை வலம் கொண்டு
நடு நகர் எல்லை நண்ணினள் இழிந்து
தொடு கழல் கிள்ளி துணை இளங் கிள்ளி
செம் பொன் மாச் சினைத் திருமணிப் பாசடைப்
பைம் பூம் போதிப் பகவற்கு இயற்றிய
சேதியம் தொழுது தென்மேற்கு ஆக
தாது அணி பூம்பொழில் தான் சென்று எய்தலும்
வையம் காவலன் தன் பால் சென்று
கைதொழுது இறைஞ்சி கஞ்சுகன் உரைப்போன்
'கோவலன் மடந்தை குணவதம் புரிந்தோள்
நாவல் அம் தீவில் தான் நனி மிக்கோள்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியொடு
தங்காது இப் பதித் தருமதவனத்தே
வந்து தோன்றினள் மா மழை போல்' என
மந்திரச் சுற்றமொடு மன்னனும் விரும்பி
'கந்திற்பாவை கட்டுரை எல்லாம்
வாய் ஆகின்று' என வந்தித்து ஏத்தி
ஆய் வளை நல்லாள் தன்னுழைச் சென்று
'செங்கோல் கோடியோ செய் தவம் பிழைத்தோ
கொங்கு அவிழ் குழலார் கற்புக் குறைபட்டோ
நலத்தகை நல்லாய்! நல் நாடு எல்லாம்
அலத்தல்காலை ஆகியது அறியேன்
மயங்குவேன் முன்னர் ஓர் மா தெய்வம் தோன்றி
"உயங்காதொழி நின் உயர் தவத்தால் ஓர்
காரிகை தோன்றும் அவள் பெருங் கடிஞையின்
ஆருயிர் மருந்தால் அகல் நிலம் உய்யும்
ஆங்கு அவள் அருளால் அமரர் கோன் ஏவலின்
தாங்கா மாரியும் தான் நனி பொழியும்
அன்னாள் இந்த அகல் நகர் புகுந்த
பின் நாள் நிகழும் பேர் அறம் பலவால்
கார் வறம் கூரினும் நீர் வறம் கூராது
பார் அகம் விதியின் பண்டையோர் இழைத்த
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சியொடு
மா மணிபல்லவம் வந்தது ஈங்கு என
பொய்கையும் பொழிலும் புனைமின்" என்று அறைந்து அத்
தெய்வதம் போய பின் செய்து யாம் அமைத்தது
இவ் இடம்" என்றே அவ் இடம் காட்ட அத்
தீவகம் போன்ற காஅகம் பொருந்திக்
கண்டு உளம் சிறந்த காரிகை நல்லாள்
'பண்டை எம் பிறப்பினைப் பான்மையின் காட்டிய
அங்கு அப் பீடிகை இது என' அறவோன்
பங்கயப் பீடிகை பான்மையின் வகுத்து
தீவதிலகையும் திரு மணிமேகலா
மா பெருந் தெய்வமும் வந்தித்து ஏத்துதற்கு
ஒத்த கோயிலுள் அத்தகப் புனைந்து
விழவும் சிறப்பும் வேந்தன் இயற்ற
தொழுதகை மாதர் தொழுதனள் ஏத்திப்
பங்கயப் பீடிகை பசிப் பிணி மருந்து எனும்
அங்கையின் ஏந்திய அமுதசுரபியை
வைத்து நின்று 'எல்லா உயிரும் வருக' என
பைத்து அரவு அல்குல் பாவை தன் கிளவியின்
மொய்த்த மூ அறு பாடை மாக்களில்
காணார் கேளார் கால் முடம் ஆனோர்
பேணா மாக்கள் பேசார் பிணித்தோர்
படிவ நோன்பியர் பசி நோய் உற்றோர்
மடி நல்கூர்ந்த மாக்கள் யாவரும்
பல் நூறாயிரம் விலங்கின் தொகுதியும்
மன் உயிர் அடங்கலும் வந்து ஒருங்கு ஈண்டி
அருந்தியோர்க்கு எல்லாம் ஆர் உயிர் மருந்து ஆய்
பெருந் தவர் கைப் பெய் பிச்சையின் பயனும்
நீரும் நிலமும் காலமும் கருவியும்
சீர் பெற வித்திய வித்தின் விளைவும்
பெருகியதென்ன பெரு வளம் சுரப்ப
வசித் தொழில் உதவி வளம் தந்தது என
பசிப் பிணி தீர்த்த பாவையை ஏத்திச்
செல்லும்காலை தாயர் தம்முடன்
அல்லவை கடிந்த அறவண அடிகளும்
மல்லல் மூதூர் மன் உயிர் முதல்வி
நல் அறச்சாலை நண்ணினர் சேறலும்
சென்று அவர் தம்மைத் திருவடி வணங்கி
'நன்று' என விரும்பி நல் அடி கழுவி
ஆசனத்து ஏற்றி அறு சுவை நால் வகைப்
போனகம் ஏந்தி பொழுதினில் கொண்டபின்
பாசிலைத் திரையலும் பளிதமும் படைத்து
'வாய்வது ஆக என் மனப்பாட்டு அறம்' என
மாயை விட்டு இறைஞ்சினள் மணிமேகலை என்
0 comments:
Post a Comment