இறைஞ்சிய இளங்கொடி தன்னை வாழ்த்தி
அறம் திகழ் நாவின் அறவணன் உரைப்போன்
'வென் வேல் கிள்ளிக்கு நாகநாடு ஆள்வோன்
தன் மகள் பீலிவளை தான் பயந்த
புனிற்று இளங் குழவியைத் தீவகம் பொருந்தி
தனிக் கலக் கம்பளச் செட்டி கைத் தரலும்
வணங்கிக் கொண்டு அவன் வங்கம் ஏற்றிக்
கொணர்ந்திடும் அந் நாள் கூர் இருள் யாமத்து
அடைகரைக்கு அணித்தா அம்பி கெடுதலும்
மரக்கலம் கெடுத்தோன் மைந்தனைக் காணாது
அரைசற்கு உணர்த்தலும் அவன் அயர்வுற்று
விரைவனன் தேடி விழாக்கோள் மறப்பத்
தன் விழாத் தவிர்தலின் வானவர் தலைவன்
நின் உயிர்த் தந்தை நெடுங் குலத்து உதித்த
மன் உயிர் முதல்வன் மகர வேலையுள்
முன்னிய வங்கம் முங்கிக் கேடுற
பொன்னின் ஊசி பசுங் கம்பளத்துத்
துன்னியதென்னத் தொடு கடல் உழந்துழி
எழு நாள் எல்லை இடுக்கண் வந்து எய்தா
வழுவாச் சீலம் வாழ்மையின் கொண்ட
பான்மையின் தனாது பாண்டு கம்பளம்
தான் நடுக்குற்ற தன்மை நோக்கி
"ஆதி முதல்வன் போதி மூலத்து
நாதன் ஆவோன் நளி நீர்ப் பரப்பின்
எவ்வம் உற்றான் தனது எவ்வம் தீர்" எனப்
பவ்வத்து எடுத்து "பாரமிதை முற்றவும்
அற அரசு ஆளவும் அற ஆழி உருட்டவும்
பிறவிதோறு உதவும் பெற்றியள்" என்றே
சாரணர் அறிந்தோர் காரணம் கூற
அந்த உதவிக்கு ஆங்கு அவள் பெயரைத்
தந்தை இட்டனன் நினை தையல் நின் துறவியும்
அன்றே கனவில் நனவென அறைந்த
மென் பூ மேனி மணிமேகலா தெய்வம்
என்பவட்கு ஒப்ப அவன் இடு சாபத்து
நகர் கடல் கொள்ள நின் தாயரும் யானும்
பகரும் நின் பொருட்டால் இப் பதிப் 'படர்ந்தனம்'
என்றலும் அறவணன் தாள் இணை இறைஞ்சி
'பொன் திகழ் புத்த பீடிகை போற்றும்
தீவதிலகையும் இத் திறம் செப்பினள்
ஆதலின் அன்ன அணி நகர் மருங்கே
வேற்றுருக் கொண்டு வெவ் வேறு உரைக்கும்
நூல் துறைச் சமய நுண் பொருள் கேட்டே
அவ் உரு என்ன ஐ வகைச் சமயமும்
செவ்விது அன்மையின் சிந்தையின் வைத்திலேன்
அடிகள்! மெய்ப்பொருள் அருளுக' என்ன
'நொடிகுவென் நங்காய்! நுண்ணிதின் கேள் நீ
ஆதி சினேந்திரன் அளவை இரண்டே
ஏதம் இல் பிரத்தியம் கருத்து அளவு என்னச்
சுட்டுணர்வைப் பிரத்தியக்கம் எனச் சொலி
விட்டனர் நாம சாதி குணம் கிரியைகள்
மற்று அவை அனுமானத்தும் அடையும் என
காரண காரிய சாமானியக் கருத்து
ஓரின் பிழைக்கையும் உண்டு பிழையாதது
கனலில் புகைபோல் காரியக் கருத்தே
ஏனை அளவைகள் எல்லாம் கருத்தினில்
ஆன முறைமையின் அனுமானம் ஆம் பிற
பக்கம் ஏது திட்டாந்தம் உபநயம்
நிகமனம் என்ன ஐந்து உள அவற்றில்
பக்கம் "இம் மலை நெருப்புடைத்து" என்றல்
"புகையுடைத்து ஆதலால்" எனல் பொருந்து ஏது
"வகை அமை அடுக்களை போல்" திட்டாந்தம்
உபநயம் "மலையும் புகையுடைத்து" என்றல்
நிகமனம் "புகையுடைத்தே நெருப்புடைத்து" என்றல்
"நெருப்புடைத்து அல்லாது யாதொன்று அது புகைப்
பொருத்தம் இன்று புனல்போல்" என்றல்
மேவிய பக்கத்து மீட்சி மொழி ஆய்
வைதன்மிய திட்டாந்தம் ஆகும்
தூய காரிய ஏதுச் சுபாவம்
ஆயின் "சத்தம் அநித்தம்" என்றல்
பக்கம் "பண்ணப்படுதலால்" எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்
"யாதொன்று யாதொன்று பண்ணப்படுவது
அநித்தம் கடம் போல்" என்றல் சபக்கத்
தொடர்ச்சி "யாதொன்று அநித்தம் அல்லாதது
பண்ணப் படாதது ஆகாசம் போல்" எனல்
விபக்கத் தொடர்ச்சி மீட்சி மொழி என்க
அநன்னுவயத்தில் பிரமாணம் ஆவது
"இவ் வெள்ளிடைக்கண் குடம் இலை" என்றல்
செவ்விய பக்கம் "தோன்றாமையில்" எனல்
பக்க தன்ம வசனம் ஆகும்
"இன்மையின் கண்டிலம் முயற்கோடு" என்றல்
அந் நெறிச் சபக்கம் "யாதொன்று உண்டு அது
தோற்றரவு அடுக்கும் கைந் நெல்லிபோல்" எனல்
ஏற்ற விபக்கத்து உரை எனல் ஆகும்
இவ்வகை ஏது பொருள் சாதிப்பன
"என்னை காரியம் புகை சாதித்தது?" என்னின்
"புகை உள இடத்து நெருப்பு உண்டு" என்னும்
அன்னுவயத்தாலும் "நெருப்பு இலா இடத்துப்
புகை இல்லை" என்னும் வெதிரேகத்தாலும்
புகஈ நெருப்பைச் சாதித்தது என்னின்
நேரிய புகையில் நிகழ்ந்து உண்டான
ஊர்த்தச் சாமம் கௌடிலச் சாமம்
வாய்த்த நெருப்பின் வரு காரியம் ஆதலின்
மேல் நோக்கிக் கறுத்திருப்ப பகைத்திருப்ப
தாமே நெருப்பைச் சாதிக்க வேண்டும்
அன்னுவயம் சாதிக்கின் "முன்னும்
கழுதையையும் கணிகையையும்
தம்மில் ஒருகாலத்து ஓர் இடத்தே
அன்னுவயம் கண்டான் பிற்காலத்து
கழுதையைக் கண்ட இடத்தே கணிகையை
அனுமிக்க வேண்டும் அது கூடா" "நெருப்பு
இலா இடத்துப் புகை இலை எனல் நேர் அத்
திருத்தகு வெதிரேகம் சாதிக்கும்" என்னின்
"நாய் வால் இல்லாக் கழுதையின் பிடரில்
நரி வாலும் இலையா காணப்பட்ட
அதனையே கொண்டு பிறிதோர் இடத்து
நரி வாலினால் நாய் வாலை அனுமித்தல்
அரிதாம்" அதனால் அதுவும் ஆகாது
ஒட்டிய உபநயம் நிகமனம் இரண்டும்
திட்டாந்தத்திலே சென்று அடங்கும்
பக்கம் ஏது திட்டாந்தங்கள்
ஒக்க நல்லவும் தீயவும் உள அதில்
வௌிப்பட்டுள்ள தன்மியினையும்
வௌிப்பட்டுள சாத்திய தன்மத்திறம்
பிறிதின் வேறு ஆம் வேறுபாட்டினையும்
தன்கண் சார்த்திய நயம் தருதல் உடையது
நன்கு என் பக்கம் என நாட்டுக அது தான்
"சத்தம் அநித்தம் நித்தம்" என்று ஒன்றைப்
பற்றி நாட்டப்படுவது தன்மி
சத்தம் சாத்திய தன்மம் ஆவது
நித்த அநித்தம் நிகழும் நல் ஏது
மூன்றாய்த் தோன்றும் மொழிந்த பக்கத்து
ஊன்றி நிற்றலும் சபக்கத்து உண்டாதலும்
விபக்கத்து இன்றியே விடுதலும் சபக்கம்
சாதிக்கின் பொருள் தன்னால் பக்கத்து
ஓதிய பொது வகை ஒன்றி இருத்தல்
சத்த அநித்தம் சாத்தியம் ஆயின்
"ஒத்த அநித்தம் கட ஆதி போல்" எனல்
விபக்கம் விளம்பில் "யாதொன்று யாதொன்று
அநித்தம் அல்லாதது பண்ணப் படாதது
ஆ அகாசம் போல்" என்று ஆகும்
பண்ணப்படுதலும் செயலிடைத் தோன்றலும்
நண்ணிய பக்கம் சபக்கத்திலும் ஆய்
விபக்கத்து இன்றி அநித்தத்தினுக்கு
மிகத் தரும் ஏதுவாய் விளங்கிற்று என்க
ஏதம் இல் திட்டாந்தம் இரு வகைய
சாதன்மியம் வைதன்மியம் என
சாதன்மியம் எனப்படுவது தானே
"அநித்தம் கட ஆதி அன்னுவயத்து" என்கை
வைதன்மிய திட்டாந்தம் "சாத்தியம்
எய்தா இடத்தில் ஏதுவும் இன்மை"
இத்திறம் நல்ல சாதனத்து ஒத்தன
தீய பக்கமும் தீய ஏதுவும்
தீய எடுத்துக்காட்டும் ஆவன
பக்கப் போலியும் ஏதுப் போலியும்
திட்டாந்தப் போலியும் ஆஅம் இவற்றுள்
பக்கப்போலி ஒன்பது வகைப்படும்
பிரத்தியக்க விருத்தம் அனுமான
விருத்தம் சுவசன விருத்தம் உலோக
விருத்தம் ஆகம விருத்தம் அப்பிர
சித்த விசேடணம் அப்பிரசித்த
விசேடியம் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் என
எண்ணிய இவற்றுள் பிரத்தியக்க விருத்தம்
கண்ணிய காட்சி மாறுகொளல் ஆகும்
"சத்தம் செவிக்குப் புலன் அன்று" என்றல்
மற்று அனுமான விருத்தம் ஆவது
கருத்து அளவையை மாறாகக் கூறல்
"அநித்தியக் கடத்தை நித்தியம்" என்றல்
சுவசன விருத்தம் தன் சொல் மாறி இயம்பல்
"என் தாய் மலடி" என்றே இயம்பல்
உலக விருத்தம் உலகின் மாறாம் உரை
"இலகு மதி சந்திரன் அல்ல" என்றல்
ஆகம விருத்தம் தன் நூல் மாறு அறைதல்
அநித்த வாதியா உள்ள வைசேடிகன்
"அநித்தியத்தை நித்தியம்" என நுவறல்
அப்பிரசித்த விசேடணம் ஆவது
தத்தம் எதிரிக்குச் சாத்தியம் தெரியாமை
பௌத்தன் மாறாய் நின்ற சாங்கியனைக்
குறித்து "சத்தம் விநாசி" என்றால்
அவன் அவிநாசவாதி ஆதலின்
சாத்திய விநாசம் அப்பிரசித்தம் ஆகும்
அப்பிரசித்த விசேடியம் ஆவது
எதிரிக்குத் தன்மி பிரசித்தம் இன்றி
இருத்தல் சாங்கியன் மாறாய் நின்ற
பௌத்தனைக் குறித்து "ஆன்மாச் சைதனியவான்"
என்றால் அவன் அநான்ம வாதி
ஆதலின் தன்மி அப்பிரசித்தம்
அப்பிரசித்த உபயம் ஆவது
மாறு ஆனோர்க்குத் தன்மி சாத்தியம்
ஏறாது அப்பிரசித்தமாய் இருத்தல்
பகர் வைசேடிகன் பௌத்தனைக் குறித்து
"சுகம் முதலிய தொகைப் பொருட்குக் காரணம்
ஆன்மா" என்றால் சுகமும் ஆன்மாவும்
தாம் இசையாமையின் அப்பிரசித்த உபயம்
அப்பிரசித்த சம்பந்தம் ஆவது
எதிரிக்கு இசைந்த பொருள் சாதித்தல்
மாறு ஆம் பௌத்தற்கு "சத்த அநித்தம்"
கூறில் அவன்ன் கொள்கை அஃது ஆகலில்
வேறு சாதிக்க வேண்டாது ஆகும்
ஏதுப் போலி ஓதின் மூன்று ஆகும்
அசித்தம் அநைகாந்திகம் விருத்தம்ம் என
உபய அசித்தம் அன்னியதர அசித்தம்
சித்த அசித்தம் ஆசிரய அசித்தம்
என நான்கு அசித்தம் உபய அசித்தம்
சாதன ஏது இருவர்க்கும் இன்றி
"சத்தம் அநித்தம் கண் புலத்து" என்றல்
அன்னியதர அசித்தம் மாறு ஆய் நின்றாற்கு
உன்னிய ஏது அன்றாய் ஒழிதல்
"சத்தம் செயலுறல் அநித்தம்" என்னின்
சித்த வௌிப்பாடு அல்லது செயலுறல்
உய்த்த சாங்கியனுக்கு அசித்தம் ஆகும்
சித்த அசித்தம் ஆவது
ஏது சங்கயமாய்ச் சாதித்தல்
ஆவி பனி என ஐயுறா நின்றே
"தூய புகை நெருப்பு உண்டு" எனத் துணிதல்
ஆசிரய அசித்தம் மாறு ஆனவனுக்கு
ஏற்ற தன்மி இன்மை காட்டுதல்
"ஆகாசம் சத்த குணத்தால் பொருளாம்" என்னின்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பாற்குத்
தன்மி அசித்தம் அநைகாந்திகமும்
சாதாரணம் அசாதாரணம் சபக்கைக
தேசவிருத்தி விபக்க வியாபி
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி உபயைகதேச விருத்தி
விருத்த வியபிசாரி என்று ஆறு
சாதாரணம் சபக்க விபக்கத்துக்கும்
ஏதுப் பொதுவாய் இருத்தல் "சத்தம்
அநித்தம் அறியப்படுதலின்" என்றால்
"அறியப்படுதல் நித்த அநித்தம் இரண்டுக்கும்
செறியும் கடம் போல் அநித்தத்து அறிவோ?
ஆகாசம் போல நித்தத்து அறிவோ?"
என்னல் அசாதாரணம் ஆவது தான்
உன்னிய பக்கத்து உண்டாம் ஏதுச்
சபக்க விபக்கம் தம்மில் இன்றாதல்
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்"
என்னின் "கேட்கப்படல்" எனும் ஏதுப்
பக்கத்து உள்ளதாயின் அல்லது
சபக்க விபக்கத்து மீட்சித்து ஆதலின்
சங்கயம் எய்தி அநேகாந்திகம் ஆம்
சபக்கைகதேச விருத்தி விபக்க
வியாபி ஆவது ஏதுச் சபக்கத்து
ஓர் இடத்து எய்தி விபக்கத்து எங்கும்
உண்டாதல் ஆகும் "சத்தம் செயலிடைத்
தோன்றாதாகும் அநித்தம் ஆகலின்"
என்றால் "அநித்தம்" என்ற ஏதுச்
செயலிடைத் தோன்றாமைக்குச் சபக்கம்
மின்னினும் ஆகாசத்தினும் மின்னின்
நிகழ்ந்து ஆகாசத்தில் காணாது ஆகலின்
அநித்தம் கட ஆதியின் ஒத்தலின் "கடம் போல்
அழிந்து செயலில் தோன்றுமோ? மின் போல்
அழிந்து செயலில் தோன்றாதோ?" எனல்
விபக்கைகதேச விருத்தி சபக்க
வியாபி ஆவது ஏது விபக்கத்து
ஓரிடத்து உற்று சபக்கத்து ஒத்து இயறல்
"சத்தம் செயலிடைத் தோன்றும் அநித்தம் ஆதலின்" எனின்
அநித்த ஏதுச் செயலிடைத் தோன்றற்கு
விபக்க ஆகாயத்தினும் மின்னினும்
மின்னின் நிகழ்ந்து ஆகாசத்துக் காணாது
சபக்கக் கட ஆதிகள் தம்மில்
எங்கும் ஆய் ஏகாந்தம் அல்ல "மின் போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றாதோ? கடம்போல்
அநித்தம் ஆய்ச் செயலிடைத் தோன்றுமோ? எனல்
உபயைகதேச விருத்தி ஏதுச்
சபக்கத்தினும் விபக்கத்தினும் ஆகி
ஓர் தேசத்து வர்த்தித்தல் "சத்தம்
நித்தம் அமூர்த்தம் ஆதலின்" என்னின்
அமூர்த்த ஏது நித்தத்தினுக்குச்
சபக்க ஆகாச பரமாணுக்களின்
ஆகாசத்து நிகழ்ந்து மூர்த்தம் ஆம்
பரமாணுவின் நிகழாமையானும்
விபக்கமான கட சுக ஆதிகளில்
சுகத்து நிகழ்ந்து கடத்து ஒழிந்தமையினும்
ஏகதேசத்து நிகழ்வது ஏகாந்தம் அன்று
"அமூர்த்தம் ஆகாசம்போல நித்தமோ?
அமூர்த்தம் சுகம் போல் அநித்தமோ?" எனல்
விருத்த வியபிசாரி திருந்தா ஏது ஆய்
விருத்த ஏதுவிற்கும் இடம் கொடுத்தல்
"சத்தம் அநித்தம் செயலிடைத் தோன்றலின்
ஒத்தது" எனின் அச் செயலிடைத் தோன்றற்குச்
சபக்கமாயுள்ள கட ஆதி நிற்க
"சத்தம் நித்தம் கேட்கப்படுதலின்
சத்தத்துவம் போல்" எனச் சாற்றிடுதல்
இரண்டினும் சங்கயம் ஆய் ஏகாந்தம் அல்ல
விருத்தம் தன்னைத் திருத்தக விளம்பின்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
தன்ம விசேட விபரீத சாதனம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மி விசேட விபரீத சாதனம்
என்ன நான்கு வகையது ஆகும் அத்
தன்மச் சொரூப விபரீத சாதனம்
சொன்ன ஏதுவின் சாத்திய தன்மத்து
உருவம் கெடுதல் "சத்தம் நித்தம்
பண்ணப்படுதலின்" என்றால் பண்ணப்
படுவது அநித்தம் ஆதலின் பண்ணப்பட்ட
ஏதுச் சாத்திய தன்ம நித்தத்தை விட்டு
அநித்தம் சாதித்தலான் விபரீதம்
தன்ம விசேட விபரீத சாதனம்
சொன்ன ஏதுச் சாத்திய தன்மம்
தன்னிடை விசேடம் கெடச் சாதித்தல்
"கண் முதல் ஓர்க்கும் இந்திரியங்கள்
எண்ணின் பரார்த்தம் தொக்கு நிற்றலினால்
சயன ஆசனங்கள் போல" என்றால்
"தொக்கு நிற்றலின்" என்கின்ற ஏதுச்
சயன ஆசனத்தின் பராத்தம்போல் கண் முதல்
இந்தியங்களியும் பரார்த்தத்தில் சாதித்துச்
சயன ஆசனவானைப் போல் ஆகிக்
கண் முதல் இந்தியத்துக்கும் பரனாய்ச்
சாதிக்கிற நிர் அவயவமாயுள்ள
ஆன்மாவைச் சாவயவமாகச்
சாதித்துச் சாத்திய தன்மத்தின்
விசேடம் கெடுத்தலின் விபரீதம்
தன்மிச் சொரூப விபரீத சாதனம்
தன்மியுடைய சொரூப மாத்திரத்தினை
ஏதுத் தானே விபரீதப்படுத்தல்
"பாவம் திரவியம் கன்மம் அன்று
குணமும் அன்று எத் திரவியம் ஆம் எக்
குண கன்மத்து உண்மையின் வேறாதலால்
சாமானிய விசேடம்போல்" என்றால்
"பொருளும் குணமும் கருமமும் ஒன்றாய்
நின்றவற்றின்னிடை உண்மை வேறு ஆதலால்" என்று
காட்டப்பட்ட ஏது மூன்றினுடை
உண்மை பேதுப்படுத்தும் பொதுவாம்
உண்மை சாத்தியத்து இல்லாமையினும்
திட்டாந்தத்தில் சாமானியம் விசேடம்
போக்கிப் பிறிதொன்று இல்லாமையானும்
பாவம் என்று பகர்ந்த தன்மியினை
அபாவம் ஆக்குதலான் விபரீதம்
தன்மி விசேட விபரீத சாதனம்
தன்மி விசேட அபாவம் சாதித்தல்
முன்னம் காட்டப்பட்ட ஏதுவே
பாவம் ஆகின்றது கருத்தாவுடைய
கிரியையும் குணமும் ஆம் அதனை விபரீதம்
ஆக்கியது ஆதலான் தன்மி விசேடம்
கெடுத்தது தீய எடுத்துக்காட்டு ஆவன
தாமே திட்டாந்த ஆபாசங்கள்
திட்டாந்தம் இரு வகைப் படும் என்று முன்
கூறப்பட்டன இங்கண் அவற்றுள்
சாதன்மிய திட்டாந்த ஆபாசம்
ஓதில் ஐந்து வகை உளதாகும்
சாதன தன்ம விகலமும் சாத்திய
தன்ம விகலமும் உபய தன்ம
விகலமும் அநன்னுவயம் விபரீதான்
னுவயம் என்ன வைதன்மிய திட்
டாந்த ஆபாசமும் ஐ வகைய
சாத்தியா வியாவிருத்தி
சாதனா வியாவிருத்தி
உபயா வியாவிருத்தி அவ்வெதிரேகம்
விபரீத வெதிரேகம் என்ன இவற்றுள்
சாதன தன்ம விகலம் ஆவது
திட்டாந்தத்தில் சாதனம் குறைவது
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
ஆதலான் காண்புற்றது பரமாணுவில்" எனின்
திட்டாந்தப் பரமாணு
நித்தத்தோடு மூர்த்தம் ஆதலான்
சாத்திய தன்ம நித்தத்துவம் நிரம்பிச்
சாதன தன்ம அமூர்த்தத்துவம் குறையும்
சாத்திய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்தில்
சாத்திய தன்மம் குறைவுபடுதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலால்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
புத்திபோல்" என்றால்
திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
புத்தி அமூர்த்தம் ஆகி நின்றே
அநித்தம் ஆதலான் சாதன அமூர்த்தத்துவம்
நிரம்பி சாத்திய நித்தத்துவம் குறையும்
உபய தன்ம விகலம் ஆவது
காட்டப்பட்ட திட்டாந்தத்திலே
சாத்திய சாதனம் இரண்டும் குறைதல்
அன்றியும் அது தான் சன்னும் அசன்னும்
என்று இரு வகையாம் இவற்றுள் சன்னா உள
உபய தன்ம விகலம் ஆவது
உள்ள பொருட்கண் சாத்திய சாதனம்
கொள்ளும் இரண்டும் குறையக் காட்டுதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று அமூர்த்தம் அது நித்தம்
கடம் போல்" எனின் திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கடம் தான் உண்டாகிச்
சாத்தியமாய் உள நித்தத்துவமும்
சாதனமாய் உள அமூர்த்தத்துவமும் குறையும்
அசன்னா உள்ள உபய தன்ம விகலம்
இல்லாப்பொருட்கண் சாத்திய சாதனம்
என்னும் இரண்டும் குறையக் காட்டுதல்
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்
யாதொன்று யாதொன்று மூர்த்தம் அது அநித்தம்
ஆகாசம் போல்" எனும் திட்டாந்தத்து
சாத்திய தன்மமாய் உள்ள அநித்தமும்
சாதன தன்மமாய் உள்ள மூர்த்தமும்
இரண்டும் "ஆகாசம் அசத்து" என்பானுக்கு
அதன்கண் இன்மையானே குறையும்
"உண்டு" என்பானுக்கு ஆகாசம் நித்தம்
அமூர்த்தம் ஆதலால் அவனுக்கும் குறையும்
அநன்னுவயம் ஆவது சாதன சாத்தியம்
தம்மில் கூட்டம் மாத்திரம் சொல்லாதே
இரண்டனுடைய உண்மையைக் காட்டுதல்
"சத்தம் அநித்தம் கிருத்தம் ஆதலின்
யாதொன்று யாதொன்று கிருத்தம் அது அநித்தம்" எனும்
அன்னுவயம் சொல்லாது "குடத்தின்கண்ணே
கிருத்த அநித்தம் காணப்பட்ட"
என்றால் அன்னுவயம் தெரியாதாகும்
விபரீதான்னுவயம் வியாபகத்துடைய
அன்னுவயத்தாலே வியாப்பியம் விதித்தல்
"சத்தம் அநித்தம் கிருத்தத்தால்" எனின்
"யாதொன்று யாதொன்று கிருத்தம் அநித்தம்" என
வியாப்பியத்தால் வியாபக்கத்தைக் கருதாது
"யாதொன்று யாதொன்று அநித்தம் அது கிருத்தம்" என
வியாபகத்தால் வியாப்பியத்தைக் கருதுதல்
அப்படிக் கருதின் வியாபகம் வியாப்பியத்தை
இன்றியும் நிகழ்தலின் விபரீதம் ஆம்
வைதன்மிய திட்டாந்தத்துச்
சாத்தியா வியாவிருத்தி ஆவது
சாதன தன்மம் மீண்டு
சாத்திய தன்மம் மீளாதுஒழிதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தமும் அன்று அது
அமூர்த்தமும் அன்று பரமாணுப் போல்" எனின்
அப்படித் திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
பரமாணு நித்தம் ஆய் மூர்த்தம் ஆதலின்
சாதன அமூர்த்தம் மீண்டு
சாத்திய நித்தம் மீளாதுஒழிதல்
சாதனா வியாவிருத்தி ஆவது
சாத்திய தன்மம் மீண்டு
சாதன தன்மம் மீளாது ஒழிதல்
"சத்தம் நித்தம் அமூர்த்தத்து" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று அஃது
அமூர்த்தமும் அன்று கன்மம்போல்" என்றால்
வைதன்மிய திட்டாந்தமாகக்
காட்டப்பட்ட கன்மம்
அமூர்த்தமாய் நின்றே அநித்தம் ஆதலின்
சாத்தியமான நித்தியம் மீண்டு
சாதனமான அமூர்த்தம் மீளாது
உபயா வியாவிருத்தி காட்டப்பட்ட
வைதன்மிய திட்டாந்தத்தினின்று
சாதன சாத்தியங்கள் மீளாமை அன்றியும்
உண்மையின் உபயா வியாவிருத்தி
இன்மையின் உபயா வியாவிருத்தி
என இருவகை உண்மையின்
உபயா வியாவிருத்தி உள்ள பொருட்கண்
சாத்திய சாதனம் மீளாதபடி
வைதன்மிய திட்டாந்தம் காட்டல்
"சத்தம் நித்தம் அமூர்த்தம் ஆதலின்"
என்றாற்கு "யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
அமூர்த்தமும் அன்று ஆகாசம்போல்" என்றால்
"வைதன்மிய திட்டாந்தமாகக் காட்டப்பட்ட
ஆகாசம் பொருள்" என்பாற்கு
ஆகாசம் நித்தமும் அமூர்த்தமும் ஆதலான்
சாத்திய நித்தமும் சாதனமா உள்ள
அமூர்த்தமும் இரண்டும் மீண்டில இன்மையின்
உபயா வியாவிருத்தி ஆவது
"சத்தம் அநித்தம் மூர்த்தம் ஆதலான்"
என்ற இடத்து "யாதொன்று யாதொன்று அநித்தம்
மூர்த்தமும் அன்ன்று ஆகாசம் போல்" என
வைதன்மிய திட்டாந்தம் காட்டில்
"ஆகாசம் பொருள் அல்ல" என்பானுக்கு
ஆகாசம் தானே உண்மை இன்மையினால்
சாத்திய அநித்தமும் சாதன மூர்த்தமும்
மீட்சியும் மீளாமையும் இலையாகும்
அவ்வெதிரேகம் ஆவது சாத்தியம்
இல்லா இடத்துச் சாதனம் இன்மை
சொல்லாதே விடுதல் ஆகும் "சத்தம்
நித்தம் பண்ணப்படாமையால்" என்றால்
"யாதொன்று யாதொன்று நித்தம் அன்று
பண்ணப்படுவது அல்லாது அதுவும்
அன்று" எனும் இவ் வெதிரேகம் தெரியச்
சொல்லாது "குடத்தின்கண்ணே பண்ணப்
படுதலும் அநித்தமும் கண்டேம் ஆதலான்"
என்னின் வெதிரேகம் தெரியாது
விபரீத வெதிரேகம் ஆவது
பிரிவைத் தலைதடுமாறாச் சொல்லுதல்
"சத்தம் நித்தம் மூர்த்தம் ஆதலின்"
என்றால் என்று நின்ற இடத்து
"யாதோர் இடத்து நித்தமும் இல்லை அவ்
இடத்து மூர்த்தமும் இல்லை" எனாதே
"யாதோர் இடத்து மூர்த்தமும் இல்லை அவ்
இடத்து நித்தமும் இல்லை" என்றால்
வெதிரேகம் மாறுகொள்ளும் எனக் கொள்க
நாட்டிய இப்படி தீய சாதனத்தால்
காட்டும் அனுமான ஆபாசத்தின்
மெய்யும் பொய்யும் இத்திற விதியால்
ஐயம் இன்றி அறிந்து கொள் ஆய்ந்து என்
0 comments:
Post a Comment