பாத்திரம் பெற்ற காதை


மணிமேகலா தெய்வம் நீங்கிய பின்னர் 
மணிபல்லவத்திடை மணிமேகலை தான் 
வெண் மணல் குன்றமும் விரி பூஞ்சோலையும் 
தண் மலர்ப்பொய்கையும் தாழ்ந்தனள் நோக்கிக் 
காவதம் திரிய கடவுள் கோலத்துத் 
தீவதிலகை செவ்வனம் தோன்றிக் 
'கலம் கவிழ் மகளிரின் வந்து ஈங்கு எய்திய 
இலங்கு தொடி நல்லாய்! யார் நீ?' என்றலும் 
'எப் பிறப்பு அகத்துள் "யார் நீ" என்றது 
பொன் கொடி அன்னாய்! பொருந்திக் கேளாய்!

போய பிறவியில் பூமி அம் கிழவன் 
இராகுலன் மனை யான் இலக்குமி என் பேர் 
ஆய பிறவியில் ஆடல் அம் கணிகை 
மாதவி ஈன்ற மணிமேகலை யான் 
என் பெயர்த் தெய்வம் ஈங்கு எனைக் கொணர இம் 
மன் பெரும் பீடிகை என் பிறப்பு உணர்ந்தேன் 
ஈங்கு என் வரவு இது ஈங்கு எய்திய பயன் இது 
பூங் கொடி அன்னாய் யார் நீ?' என்றலும் 
ஆய் இழை தன் பிறப்பு அறிந்தமை அறிந்த 
தீவதிலகை செவ்வனம் உரைக்கும்

'ஈங்கு இதன் அயல் அகத்து இரத்தினத் தீவத்து 
ஓங்கு உயர் சமந்தத்து உச்சி மீமிசை 
அறவியங் கிழவோன் அடி இணை ஆகிய 
பிறவி என்னும் பெருங் கடல் விடூஉம் 
அறவி நாவாய் ஆங்கு உளது ஆதலின் 
தொழுது வலம் கொண்டு வந்தேன் ஈங்கு 
பழுது இல் காட்சி இந் நல் மணிப் பீடிகை 
தேவர் கோன் ஏவலின் காவல் பூண்டேன் 
தீவதிலகை என் பெயர் இது கேள் 
தரும தலைவன் தலைமையின் உரைத்த

பெருமைசால் நல் அறம் பிறழா நோன்பினர் 
கண்டு கைதொழுவோர் கண்டதன் பின்னர் 
பண்டைப் பிறவியர் ஆகுவர் பைந்தொடி 
அரியர் உலகத்து ஆங்கு அவர்க்கு அறமொழி 
உரியது உலகத்து ஒருதலையாக 
ஆங்கனம் ஆகிய அணி இழை! இது கேள் 
ஈங்கு இப் பெரும் பெயர்ப் பீடிகை முன்னது 
மா மலர்க் குவளையும் நெய்தலும் மயங்கிய 
கோமுகி என்னும் கொழு நீர் இலஞ்சி 
இருது இளவேனிலில் எரி கதிர் இடபத்து

ஒருபதின் மேலும் ஒருமூன்று சென்ற பின் 
மீனத்து இடைநிலை மீனத்து அகவையின் 
போதித் தலைவனொடு பொருந்தித் தோன்றும் 
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் 
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! கேளாய் 
அந் நாள் இந் நாள் அப் பொழுது இப் பொழுது 
நின்னாங்கு வருவது போலும் நேர் இழை! 
ஆங்கு அதில் பெய்த ஆருயிர்மருந்து 
வாங்குநர் கைஅகம் வருத்துதல் அல்லது 
தான் தொலைவு இல்லாத் தகைமையது ஆகும்

நறு மலர்க் கோதை! நின் ஊர் ஆங்கண் 
அறவணன் தன்பால் கேட்குவை இதன் திறம்' 
என்று அவள் உரைத்தலும் இளங்கொடி விரும்பி 
மன் பெரும் பீடிகை தொழுதனள் வணங்கி 
தீவதிலகை தன்னொடும் கூடி 
கோமுகி வலம் செய்து கொள்கையின் நிற்றலும் 
எழுந்து வலம் புரிந்த இளங்கொடி செங் கையில் 
தொழும்தகை மரபின் பாத்திரம் புகுதலும் 
பாத்திரம் பெற்ற பைந் தொடி மடவாள் 
மாத்திரை இன்றி மனம் மகிழ்வு எய்தி

'மாரனை வெல்லும் வீர! நின் அடி 
தீ நெறிக் கடும் பகை கடிந்தோய்! நின் அடி 
பிறர்க்கு அறம் முயலும் பெரியோய்! நின் அடி 
துறக்கம் வேண்டாத் தொல்லோய்! நின் அடி 
எண் பிறக்கு ஒழிய இறந்தோய்! நின் அடி 
கண் பிறர்க்கு அளிக்கும் கண்ணோய்! நின் அடி 
தீ மொழிக்கு அடைத்த செவியோய்! நின் அடி 
வாய்மொழி சிறந்த நாவோய்! நின் அடி 
நரகர் துயர் கெட நடப்போய்! நின் அடி 
உரகர் துயரம் ஒழிப்போய்! நின் அடி

வணங்குதல் அல்லது வாழ்த்தல் என் நாவிற்கு 
அடங்காது!" என்ற ஆய் இழை முன்னர் 
போதி நீழல் பொருந்தித் தோன்றும் 
நாதன் பாதம் நவை கெட ஏத்தித் 
தீவதிலகை சேயிழைக்கு உரைக்கும் 
'குடிப் பிறப்பு அழிக்கும் விழுப்பம் கொல்லும் 
பிடித்த கல்விப் பெரும் புணை விடூஉம் 
நாண் அணி களையும் மாண் எழில் சிதைக்கும் 
பூண் முலை மாதரொடு புறங்கடை நிறுத்தும் 
பசிப் பிணி என்னும் பாவி அது தீர்த்தோர்

இசைச் சொல் அளவைக்கு என் நா நிமிராது 
புல் மரம் புகையப் புகை அழல் பொங்கி 
மன் உயிர் மடிய மழைவளம் கரத்தலின் 
அரசு தலைநீங்கிய அரு மறை அந்தணன் 
இரு நில மருங்கின் யாங்கணும் திரிவோன் 
அரும் பசி களைய ஆற்றுவது காணான் 
திருந்தா நாய் ஊன் தின்னுதல் உறுவோன் 
இந்திர சிறப்புச் செய்வோன் முன்னர் 
வந்து தோன்றிய வானவர் பெருந்தகை 
மழை வளம் தருதலின் மன் உயிர் ஓங்கி

பிழையா விளையுளும் பெருகியது அன்றோ? 
ஆற்றுநர்க்கு அளிப்போர் அறம் விலைபகர்வோர் 
ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர் 
மேற்றே உலகின் மெய்ந்நெறி வாழ்க்கை 
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கு எல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 
உயிர்க் கொடை பூண்ட உரவோய் ஆகி 
கயக்கு அறு நல் அறம் கண்டனை என்றலும் 
விட்ட பிறப்பில் யான் விரும்பிய காதலன் 
திட்டிவிடம் உணச் செல் உயிர் போவுழி 

உயிரொடு வேவேன் உணர்வு ஒழி காலத்து 
வெயில் விளங்கு அமயத்து விளங்கித் தோன்றிய 
சாதுசக்கரன் தனை யான் ஊட்டிய 
காலம் போல்வதோர் கனா மயக்கு உற்றேன் 
ஆங்கு அதன் பயனே ஆர் உயிர் மருந்து ஆய் 
ஈங்கு இப் பாத்திரம் என் கைப் புகுந்தது 
நாவலொடு பெயரிய மா பெருந் தீவத்து 
வித்தி நல் அறம் விளைந்த அதன் பயன் 
துய்ப்போர் தம் மனை துணிச் சிதர் உடுத்து 
வயிறு காய் பெரும் பசி அலைத்தற்கு இரங்கி

வெயில் என முனியாது புயல் என மடியாது 
புறங்கடை நின்று புன்கண் கூர்ந்து முன் 
அறங்கடை நில்லாது அயர்வோர் பலரால் 
ஈன்ற குழவி முகம் கண்டு இரங்கி 
தீம் பால் சுரப்போள் தன் முலை போன்றே 
நெஞ்சு வழிப்படூஉம் விஞ்சைப் பாத்திரத்து 
அகன் சுரைப் பெய்த ஆருயிர்மருந்து அவர் 
முகம் கண்டு சுரத்தல் காண்டல் வேட்கையேன்' என 
மறந்தேன் அதன் திறம் நீ எடுத்து உரைத்தனை 
அறம் கரியாக அருள் சுரந்து ஊட்டும்

சிறந்தோர்க்கு அல்லது செவ்வனம் சுரவாது 
ஆங்கனம் ஆயினை அதன் பயன் அறிந்தனை 
ஈங்கு நின்று எழுவாய்' என்று அவள் உரைப்பத் 
தீவதிலகை தன் அடி வணங்கி 
மா பெரும் பாத்திரம் மலர்க் கையின் ஏந்திக் 
கோமகன் பீடிகை தொழுது வலம் கொண்டு 
வானூடு எழுந்து மணிமேகலை தான் 
'வழு அறு தெய்வம் வாய்மையின் உரைத்த 
எழு நாள் வந்தது என் மகள் வாராள்! 
வழுவாய் உண்டு!' என மயங்குவோள் முன்னர்

வந்து தோன்றி அவர் மயக்கம் களைந்து 
அந்தில் அவர்க்கு ஓர் அற்புதம் கூறும் 
'இரவிவன்மன் ஒரு பெரு மகளே! 
துரகத் தானைத் துச்சயன் தேவி! 
அமுதபதி வயிற்று அரிதின் தோன்றி 
தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும் 
அவ்வையர் ஆயினீர் நும் அடி தொழுதேன் 
வாய்வதாக மானிட யாக்கையில் 
தீவினை அறுக்கும் செய் தவம் நுமக்கு ஈங்கு 
அறவண அடிகள் தம்பால் பெறுமின்

செறி தொடி நல்லீர்! உம் பிறப்பு ஈங்கு இஃது 
ஆபுத்திரன் கை அமுதசுரபி எனும் 
மா பெரும் பாத்திரம் நீயிரும் தொழும்!' என 
தொழுதனர் ஏத்திய தூமொழியாரொடும் 
'பழுது அறு மாதவன் பாதம் படர்கேம் 
எழுக' என எழுந்தனள் இளங்கொடி தான் என்

0 comments:

Post a Comment