யாங்கு உளர்?' என்றே இளங்கொடி வினாஅய்
நரை முதிர் யாக்கை நடுங்கா நாவின்
உரை மூதாளன் உறைவிடம் குறுகி
மைம் மலர்க் குழலி மாதவன் திருந்து அடி
மும் முறை வணங்கி முறையுளி ஏத்தி
புது மலர்ச் சோலை பொருந்திய வண்ணமும்
உதயகுமரன் ஆங்கு உற்று உரைசெய்ததும்
மணிமேகலா தெய்வம் மணிபல்லவத்திடை
அணி இழை தன்னை அகற்றிய வண்ணமும்
ஆங்கு அத் தீவகத்து அறவோன் ஆசனம்
நீங்கிய பிறப்பு நேர் இழைக்கு அளித்ததும்
அளித்த பிறப்பின் ஆகிய கணவனை
களிக் கயல் நெடுங் கண் கடவுளின் பெற்றதும்
'தவ்வையர் ஆகிய தாரையும் வீரையும்
வெவ் வினை உருப்ப விளிந்து கேடு எய்தி
மாதவி ஆகியும் சுதமதி ஆகியும்
கோதை அம் சாயல் நின்னொடும் கூடினர்
ஆங்கு அவர் தம் திறம் அறவணன் தன்பால்
பூங் கொடி நல்லாய்! கேள்' என்று உரைத்ததும்
உரைத்த பூங்கொடி ஒரு மூன்று மந்திரம்
தனக்கு உரைசெய்து தான் ஏகிய வண்ணமும்
தெய்வம் போய பின் தீவதிலகையும்
ஐயெனத் தோன்றி அருளொடும் அடைந்ததும்
அடைந்த தெய்வம் ஆபுத்திரன் கை
வணங்குறு பாத்திரம் வாய்மையின் அளித்ததும்
'ஆபுத்திரன் திறம் அறவணன் தன்பால்
கேள்' என்று உரைத்து கிளர் ஒளி மா தெய்வம்
'போக' என மடந்தை போந்த வண்ணமும்
மாதவன் தன்னை வணங்கினள் உரைத்தலும்
மணிமேகலை உரை மாதவன் கேட்டு
தணியா இன்பம் தலைத்தலை மேல் வர
'பொன் தொடி மாதர்! நல் திறம் சிறக்க
உற்று உணர்வாய் நீ இவர் திறம் உரைக்கேன்
நின் நெடுந் தெய்வம் நினக்கு எடுத்து உரைத்த
அந் நாள் அன்றியும் அரு வினை கழூஉம்
ஆதி முதல்வன் அடி இணை ஆகிய
பாதபங்கய மலை பரவிச் செல்வேன்
கச்சயம் ஆளும் கழல் கால் வேந்தன்
துச்சயன் தன்னை ஓர் சூழ் பொழில் கண்டேன்
"மா பெருந் தானை மன்ன! நின்னொடும்
தேவியர் தமக்கும் தீது இன்றோ?" என
அழிதகவு உள்ளமொடு அரற்றினன் ஆகி
ஒளி இழை மாதர்க்கு உற்றதை உரைப்போன்
புதுக் கோள் யானைமுன் போற்றாது சென்று
மதுக் களி மயக்கத்து வீரை மாய்ந்ததூஉம்
ஆங்கு அது கேட்டு ஓர் அரமியம் ஏறி
தாங்காது வீழ்ந்து தாரை சாவுற்றதூஉம்
கழி பெருந் துன்பம் காவலன் உரைப்ப
"பழ வினைப் பயன் நீ பரியல்" என்று எழுந்தேன்
ஆடும் கூத்தியர் அணியே போல
வேற்று ஓர் அணியொடு வந்தீரோ?' என
மணிமேகலைமுன் மடக்கொடியார் திறம்
துணி பொருள் மாதவன் சொல்லியும் அமையான்
'பிறவியும் அறவியும் பெற்றியின் உணர்ந்த
நறு மலர்க் கோதாய்! நல்கினை கேளாய்
தரும தலைவன் தலைமையின் உரைத்த
பெருமைசால் நல் அறம் பெருகாதாகி
இறுதி இல் நல் கதி செல்லும் பெரு வழி
அறுகையும் நெருஞ்சியும் அடர்ந்து கண் அடைத்தாங்கு
செயிர் வழங்கு தீக் கதி திறந்து கல்லென்று
உயிர் வழங்கு பெரு நெறி ஒரு திறம் பட்டது
தண் பனி விழுங்கிய செங்கதிர் மண்டிலம்
உண்டு என உணர்தல் அல்லது யாவதும்
கண்டு இனிது விளங்காக் காட்சி போன்றது
சலாகை நுழைந்த மணித் துளை அகவையின்
உலா நீர்ப் பெருங் கடல் ஓடாது ஆயினும்
ஆங்கு அத் துளை வழி உகு நீர் போல
ஈங்கு நல் அறம் எய்தலும் உண்டு எனச்
சொல்லலும் உண்டு யான் சொல்லுதல் தேற்றார்
மல்லல் மா ஞாலத்து மக்களே ஆதலின்
சக்கரவாளத்துத் தேவர் எல்லாம்
தொக்கு ஒருங்கு ஈண்டி துடித லோகத்து
மிக்கோன் பாதம் விழுந்தனர் இரப்ப
இருள் பரந்து கிடந்த மலர் தலை உலகத்து
விரி கதிர்ச் செல்வன் தோன்றினன் என்ன
ஈர் எண்ணூற்றோடு ஈர் எட்டு ஆண்டில்
பேர் அறிவாளன் தோன்றும் அதன் பிற்பாடு
பெருங் குள மருங்கில் சுருங்கைச் சிறு வழி
இரும் பெரு நீத்தம் புகுவது போல
அளவாச் சிறு செவி அளப்பு அரு நல் அறம்
உளம் மலி உவகையோடு உயிர் கொளப் புகூஉம்
கதிரோன் தோன்றும் காலை ஆங்கு அவன்
அவிர் ஒளி காட்டும் மணியே போன்று
மைத்து இருள் கூர்ந்த மன மாசு தீரப்
புத்த ஞாயிறு தோன்றும்காலை
திங்களும் ஞாயிறும் தீங்கு உறா விளங்க
தங்கா நாள் மீன் தகைமையின் நடக்கும்
வானம் பொய்யாது மா நிலம் வளம்படும்
ஊன் உடை உயிர்கள் உறு துயர் காணா
வளி வலம் கொட்கும் மாதிரம் வளம்படும்
நளி இரு முந்நீர் நலம் பல தரூஉம்
கறவை கன்று ஆர்த்தி கலம் நிறை பொழியும்
பறவை பயன் துய்த்து உறைபதி நீங்கா
விலங்கும் மக்களும் வெரூஉம் பகை நீங்கும்
கலங்கு அஞர் நரகரும் பேயும் கைவிடும்
கூனும் குறளும் ஊமும் செவிடும்
மாவும் மருளும் மன் உயிர் பெறாஅ
அந் நாள் பிறந்து அவன் அருளறம் கேட்டோர்
இன்னாப் பிறவி இகந்தோர் ஆதலின்
போதி மூலம் பொருந்திய சிறப்பின்
நாதன் பாதம் நவை கெட ஏத்துதல்
பிறவி தோறும் மறவேன் மடக்கொடி!
மாதர் நின்னால் வருவன இவ் ஊர்
ஏது நிகழ்ச்சி யாவும் பல உள
ஆங்கு அவை நிகழ்ந்த பின்னர் அல்லது
பூங் கொடி மாதர் பொருளுரை பொருந்தாய்!
ஆதி முதல்வன் அருந் துயர் கெடுக்கும்
பாதபங்கய மலை பரசினர் ஆதலின்
ஈங்கு இவர் இருவரும் இளங்கொடி! நின்னோடு
ஓங்கு உயர் போதி உரவோன் திருந்து அடி
தொழுது வலம் கொண்டு தொடர் வினை நீங்கிப்
பழுது இல் நல் நெறிப் படர்குவர் காணாய்
ஆர் உயிர் மருந்து ஆம் அமுதசுரபி எனும்
மா பெரும் பாத்திரம் மடக்கொடி! பெற்றனை
மக்கள் தேவர் என இரு சார்க்கும்
ஒத்த முடிவின் ஓர் அறம் உரைக்கேன்
பசிப் பிணி தீர்த்தல்' என்றே அவரும்
தவப் பெரு நல் அறம் சாற்றினர் ஆதலின்
மடுத்த தீக் கொளிய மன் உயிர்ப் பசி கெட
எடுத்தனள் பாத்திரம் இளங்கொடி தான் என்
0 comments:
Post a Comment