ஞாயிற்றுக் கிழமை

திருச்சிற்றம்பலம்
தேவாரம்

குனித்த புருவமும் கொவ்வைச் செவ்வாயிற் குமிண் சிரிப்பும்
பணித்த சடையும் பவளம் போல் மேனியிற் பால்வெண்ணீறும்
இனித்த முடைய எடுத்த பொற்பாதமுங் காணப்பெற்றால்
மனித்தப் பிறவியும் வேண்டுவதே இந்த மாநிலத்தே

திருவாசகம்

அம்பையே அப்பா ஒப்பிலா மணியே
அன்பினில் விளைந்த ஆரமுதே
பொய்மையே பெருக்கிப் பொழுதினைச்சுருக்கும்
புழுத்தலை புலையனேன் தனக்குச்
செம்மையே யாய சிவபதம் அளித்த
செல்வமே சிவபெருமானே
இம்மையே உன்னைச் சிக்கெனப்
பிடித்தேன் எங்கெழுந்தருளுவதினியே

திருவிசைப்பா

ஒளிவளர் விளக்கே உலப்பிலா ஒன்றே
உணர்வுசூழ் கடந்ததோர் உணர்வே
தெளிவளர் பளிங்கின் திரண்மணிக் குன்றே
சித்தத்துள் தித்துக்கும் தேனே
அளிவளர் உள்ளத்து ஆனந்தக் கனியே
அம்பலம் ஆடரங்காக
வெளிவளர் தெய்வக் கூத்துகந் தாயைத்
தொண்டனேன் விளம்புமா விளம்பே.

திருப்பல்லாண்டு

பாலுக்குப் பாலகன் வேண்டி அழுதிடப்
பாற்கடல் ஈந்த பிரான்
மாலுக்குச் சக்கரம் அன்றருள் செய்தவன்
மன்னிய தில்லை தன்னுள்
ஆலிக்கும் அந்தணர் வாழுகின்ற தில்லைச்
சிற்றம்பலமே இடமாகப்
பாலித்து நட்டம் பயில வல்லானுக்குகே
பல்லாண்டு கூறுதுமே.

திருப்புராணம்

உலகெலாமுணர்ந் தோதற் கரியவன்
நிலவுலாவிய நீர்மலி வேணியன்
அலகில் சோதியன் அம்பலத்தாடுவான்
மலர் சிலம்படி வாழ்த்தி வணங்கிவாம்.

திருப்புகழ்

ஏறுமயில் ஏறிவிளையாடு முகம் ஒன்றே
ஈசருடன் ஞானமொழி பேசுமுகம் ஒன்றே
கூறு மடியார்கள் வினை தீர்த்த முகம் ஒன்றே
குன்றுருவ வேல் வாங்கி நின்ற முகம் ஒன்றே
மாறுபடு சூரனை வதைத்த முகம் ஒன்றே
வள்ளியை மணம் புணர வந்த முகம் ஒன்றே
ஆறுமுகமான பொருள் நீ அருளல்வேண்டும்
ஆதி அருணாசலம் அமர்ந்த பெருமானே.

திருச்சிற்றம்பலம்

0 comments:

Post a Comment