தகை மதி எழிலை வாட்டும் தாமரைப் பூவின் அங்கண்
புகை நுதி அழல வாள் கண் பொன் அனாள் புல்ல நீண்ட
வகை மலி வரை செய் மார்பின் வள்ளலைக் கண்டு வண் தார்த்
தொகை மலி தொறுவை ஆளும் தோன்றல் மற்று இன்ன கூறும்.
கேட்டு இது மறக்க நம்பி கேள் முதல் கேடு சூழ்ந்த
நாட்டு இறை விசையை என்னும் நாறு பூம் கொம்பு அனாளை
வேட்டு இறைப் பாரம் எல்லாம் கட்டியங் காரன் தன்னைப்
பூட்டி மற்று அவன் தனாலே பொறி முதல் அடர்க்கப் பட்டான்.
கோல் இழுக்கு உற்ற ஞான்றே கொடு முடி வரை ஒன்று ஏறிக்
கால் இழுக்கு உற்று வீழ்ந்தே கருந் தலை களையல் உற்றேன்
மால் வழி உளது அன்று ஆயின் வாழ்வினை முடிப்பல் என்றே
ஆலம் வித்து அனையது எண்ணி அழிவினுள் அகன்று நின்றேன்.
குலத் தொடு முடிந்த கோன்தன் குடி வழி வாரா நின்றேன்
நலத் தகு தொறுவின் உள்ளேன் நாமம் கோவிந்தன் என்பேன்
இலக்கணம் அமைந்த கோதாவரி என இசையில் போந்த
நலத்தகு மனைவி பெற்ற நங்கை கோவிந்தை என்பாள்.
வம்பு உடை முலையினாள் என் மட மகள் மதர்வை நோக்கம்
அம்பு அடி இருத்தி நெஞ்சத்து அழுத்தி இட்டு அனையது ஒப்பக்
கொம்படு நுசுப்பினாளைக் குறை இரந்து உழந்து நின்ற
நம்படை தம்முள் எல்லாம் நகை முகம் அழிந்து நின்றேன்.
பாடகம் சுமந்த செம் பொன் சீறடிப் பரவை அல்குல்
சூடகம் அணிந்த முன் கைச் சுடர் மணிப் பூணினாளை
ஆடகச் செம் பொன் பாவை ஏழுடன் தருவல் ஐய
வாடலில் வதுவை கூடி மணமகன் ஆக என்றான்.
வெண்ணெய் போன்று ஊறு இனியள் மேம் பால் போல் தீம் சொல்லள்
உண்ண உருக்கிய வான் நெய் போல் மேனியள்
வண்ண வனமுலை மாதர் மட நோக்கி
கண்ணும் கருவிளம் போது இரண்டே கண்டாய்.
சேதா நறு நெய்யும் தீம்பால் சுமைத் தயிரும்
பாதாலம் எல்லா நிறைத்திடுவல் பைந்தாரோய்
போது ஆர் புனை கோதை சூட்டு உன் அடித்தியை
யாது ஆவது எல்லாம் அறிந்து அருளி என்றான்.
குலம் நினையல் நம்பி கொழும் கயல் கண் வள்ளி
நலன் நுகர்ந்தான் அன்றே நறும் தார் முருகன்
நில மகட்குக் கேள்வனும் நீள் நிரை நப்பின்னை
இலவு அலர் வாய் இன் அமிர்தம் எய்தினான் அன்றே.
0 comments:
Post a Comment