சச்சந்தன் போரிட்டு வீரமரணம் அடைதல்


முழை முகத்து இடி அரி வளைத்த அன்ன மள்ளரில்
குழை முகப் புரிசையுள் குருசில் தான் அகப்பட
இழை முகத்து எறி படை இலங்கு வாள் கடல் இடை
மழை முகத்த குஞ்சரம் வாரிஉள் வளைத்தவே.

அயிலினில் புனைந்த வாள் அழன்று உருத்து உரீஇ உடன்
பயில் கதிர்ப் பருமணிப் பன் மயிர்ச் செய் கேடகம்
வெயில் எனத் திரித்து விண் வழுக்கி வந்து வீழ்ந்தது ஓர்
கயில் அணிக் கதிர் நகைக் கடவுள் ஒத்து உலம்பினான்.

மாரியின் கடுங் கணை சொரிந்து மள்ளர் ஆர்த்த பின்
வீரியக் குரிசிலும் விலக்கி வெம் கணை மழை
வாரியில் கடிந்து உடன் அகற்ற மற்ற வன்படைப்
பேர் இயல் பெருங் களிறு பின்னி வந்து அடைந்தவே.

சீற்றம் மிக்க மன்னவன் சேர்ந்த குஞ்சரம் நுதல்
கூற்றரும் குருதிவாள் கோடு உற அழுத்தலின்
ஊற்று உடை நெடு வரை உரும் உடன்று இடித்து என
மாற்று அரும் மதக் களிறு மத்தகம் பிளந்தவே.

வேல் மிடைந்த வேலியும் பிளந்து வெம் கண் வீரரை
வான் மயிர்ச் செய் கேடகத்து இடித்து வாள் வலை அரிந்து
ஊன் உடைக் குருதியுள் உழக்குபு திரி தரத்
தேன் மிடைந்த தாரினான் செங்களம் சிறந்ததே.

உப்பு உடைய முந் நீர் உடன்று கரை கொல்வது
ஒப்பு உடைய தானையுள் ஒரு தனியன் ஆகி
இப்படி இறை மகன் இரும் களிறு நூற
அப் படையுள் அண்ணலும் அழன்று களிறு உந்தி.

நீடகம் இருந்த நிழல் நேமி வலன் ஏந்திக்
கேடகம் அறுப்ப நடு அற்று அரவு சேர்ந்து ஆங்கு
ஓடு கதிர் வட்டம் என ஒய் என உலம்பிக்
காடு கவர் தீயின் மிகை சீறுபு வெகுண்டான்.

நெய்ம் முகம் அணிந்து நிழல் தங்கி அழல் பொங்கி
வைம் முகம் அணிந்த நுதி வாள் அழல வீசி
மைம் முகம் அணிந்த மதயானை தவ நூறிக்
கைம் முதல் துணிந்து களிறு ஆழ அது நோனான்.

மாலை நுதி கொண்டு மழை மின் என இமைக்கும்
வேலை வலன் ஏந்தி விரி தாமம் அழகு அழியச்
சோலை மயிலார்கள் துணை வெம்முலைகள் துஞ்சும்
கோல வரை மார்பின் உறு கூற்று என எறிந்தான்.

புண் இடம் கொண்ட எஃகம் பறித்தலின் பொன் அனார் தம்
கண் இடம் கொண்ட மார்பில் தடாயின காது வெள்வேல்
மண் இடம் கொண்ட யானை மருப்பு இடை இட்டு அம்ம
விண் இடம் மள்ளர் கொள்ள மிறைக்கொளி திருத்தினானே.

ஏந்தல் வேல் திருத்த யானை இரிந்தன எரி பொன் கண்ணி
நாந்தக உழவர் நண்ணார் கூற்று என நடுங்கி மள்ளர்
சாய்ந்த பின் தறுகண் ஆண்மைக் கட்டியங் காரன் வேழம்
காய்ந்தனன் கடுக உந்திக் கப்பணம் சிதறினானே.

குன்றம் மார்பு அரிந்து வெள் வேல் குடுமி மா மஞ்ஞை ஊர்ந்து
நின்ற மால் புருவம் போல நெரி முறி புருவம் ஆக்கிக்
கொன்று அவன் வேழம் வீழ்ப்ப மற்ற போர் களிற்றில் பாய்ந்து
நின்ற மா மள்ளர்க்கு எல்லாம் நீள் முடி இலக்கம் ஆனான்.

நஞ்சு பதி கொண்ட வள நாக அணையினான் தன்
நெஞ்சு பதி கொண்டு படை மூழ்க நிலம் வீசும்
மஞ்சு தவழ் குன்று அனைய தோள் ஒசித்து மாத்தாள்
குஞ்சரங்கள் நூறிக் கொலை வாள் ஒடித்து நின்றான்.

ஆர் அமருள் ஆண் தகையும் அன்ன வகை வீழும்
வீரர் எறி வெம் படைகள் வீழ இமையான் ஆய்ப்
பேர் அமருள் அன்று பெருந் தாதையொடும் பேராப்
போர் அமருள் நின்ற இளையோனின் பொலிவு உற்றான்.

0 comments:

Post a Comment