கோள் இயங்கு உழுவை அன்ன கொடும் சிலை உழவன் கேட்டே
தாள் இயல் தவங்கள் தாயாத் தந்தை நீ ஆகி என்னை
வாள் இயங்கு உருவப் பூணோய் படைத்தனை வாழி என்ன
மீளி அம் களிறு அனாய் யான் மெய்ந்நெறி நிற்பல் என்றான்.
மறு அற மனையின் நீங்கி மா தவம் செய்வல் என்றால்
பிற அறம் அல்ல பேசார் பேர் அறிவு உடைய நீரார்
துறவறம் புணர்க என்றே தோன்றல் தாள் தொழுது நின்றான்
நறவு அற மலர்ந்த கண்ணி நல் மணி வண்ணன் அன்னான்.
கை வரை அன்றி நில்லாக் கடுஞ் சின மடங்கல் அன்னான்
தெவ்வரைச் செகுக்கும் நீதி மனத்து அகத்து எழுதிச் செம்பொன்
பை விரி அல்குலாட்கும் படுகடல் நிதியின் வைகும்
மை வரை மார்பினாற்கும் மனம் உறத் தேற்றி இட்டான்.
அழல் உறு வெண்ணெய் போல அகம் குழைந்து உருகி ஆற்றாள்
குழல் உறு கிளவி சோர்ந்து குமரனைத் தமியன் ஆக
நிழல் உறு மதியம் அன்னாய் நீத்தியோ எனவும் நில்லான்
பழவினை பரிய நோற்பான் விஞ்சையர் வேந்தன் சென்றான்.
0 comments:
Post a Comment