திருச்சிற்றம்பலம்
தேவாரம்
சிறையாரு மடக்கிளியே இங்கேவா தேனொடுபால்
முறையாலே உணத்தருவான் மொய்பவளத் தொடு தரளந்
துறையாருங்கடல் தோணி புரத்தீசன் துளங்கும் இளம்
பிறையாளன் திருநாமம் எனக்கொருகாற் பேசாயே
திருவாசகம்
பூசுவதும் வெண்ணீறு பூண்பதுவும் பொங்கரவம்
பேசுவதும் திருவாயால் மறைபோலும் காணேடி
பூசுவதும் பேசுவதும் பூண்பதுவும் கொண் டென்னை
ஈசனவன் எவ்வுயிர்க்கும் இயல் பானான் சாழலோ
திருவிசைப்பா
உருக்கி என் உள்ளத்துள்ளே ஊறலந்தோறல் மாறாந்
திருக்குறிப்பு அருளும் தில்லைச்செல்வன் பாற்செல்லும் செல்வில்
அருக்கரை அள்ளல் வாய கள்ளரை அவியாப்பாவைப்
பெருக்கரைக் காணாக் கண் வாய் பேசாது அப்பேய்களோடே
திருப்பல்லாண்டு
மிண்டு மனத்தவர் போமின்கள் மெய்யடியார்கள் விரைந்து வன்மின்
கொண்டுங் கொடுத்துங் குடிகுடி ஈசற்காட்செய்மின் குழாம் புகுந்து
அண்டங் கடந்த பொருள் அளவில் லதோர் ஆனந்த வெள்ளப்பொருள்
பண்டும் இன்றும் என்றும் உள்ள பொருள் என்றே பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
வேதநெறி தழைத் தோங்க மிகுசைவத் துறை விளங்கப்
பூத பரம்பரை பொலியப் புனிதவாய் மலர்ந்தழுத
சீதவள வயற்புகலித் திருஞான சம்பந்தன்
பாதமலர் தலைக் கொண்டு திருத்தொண்டு பரவுவாம்.
திருப்புகழ்
உம்பர் தருத் தேனு மணிக் கசிவாகி
ஒண் கடலிற் றேனமுதத் துணர்வூறி
இன்பரசத் தேபருகிப் பலகாலும்
என்றனுயிர்க் காதரவுற் றருள்வாயே
தம்பி தனக் காக வனத் தணைவோனே
தந்தை வலத் தால நள்கைக் கனியோனே
அன்பர் தமக் கான நிலைப் பொருளோனே
ஜந்து கரத் தானை முகப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
0 comments:
Post a Comment