திருச்சிற்றம்பலம்
தேவாரம்
காதல் ஆகிக் கசிந்து கண் நீர் மல்கி
ஓதுவார் தமை நன்னெறிக் குய்ப்பது
வேத நான்கினும் மெய்ப் பொருளாவது
நாதன் நாமம் நமச்சிவாயவே.
திருவாசகம்
சோதியே சுடரே சூழொளி விளக்கே
சுரி குழற் பணை முலை மடந்தை
பாதியே பரனே பால்கொள் வெண்ணீற்றாய்
பங்கயத் தயனும் மால்அறியா
நீதியே செல்வத் திருப்பெருந்துறையில்
நிறைமலர்க் குருந்தமேவிய சீர்
ஆதியே அடியேன் ஆதரித்தழைத்தால்
அதெந்துவே என்றருளாயே.
திருவிசைப்பா
அன்னமாய் விசும்பு பறந்தயன் தேட
அங்ஙனே பெரிய நீசிறிய
என்னையாள் விரும்பி என மனம் புகுந்த
எளிமையை என்றுநான் மறக்கேன்
முன்னமால் அறியா வொருவனாம் இருவா
முக்கணா நாற்பெருந் தடந்தோள்
கன்னலே தேனே யமுதமே கங்கை
கொண்ட சோளேச்சரத்தானே.
திருப்பல்லாண்டு
ஆரார் வந்தார் அமரர் குழாத்தில் அணியுடை ஆதிரை நாள்
நாரயணனொடு நான்முகன் அங்கி இரவியும் இந்திரரும்
தேரார் வீதியில் தேவர் குழாங்கள் திசையனைத்ததும் நிறைந்தும்
பாரார் தொல்புகழ் பாடியும் ஆடியும் பல்லாண்டு கூறுதுமே.
திருப்புராணம்
இறவாத இன்ப அன்பு வேண்டிப் பின் வேண்டுகின்றார்
பிறவாமை வேண்டும் மீண்டும் பிறப்புண்டேல் உன்னை என்றும்
மறவாமை வேண்டும் இன்னும் வேண்டும் நான் மகிழ்ந்து பாடி
அறவா நீ ஆடும் போது உன் அடியின் கீழ் இருக்க என்றார்
திருப்புகழ்
பற்றியே மாதிருப்புகழ் பாடி
முத்தனா மாறெனப் பெருவாழ்வின்
முத்தியே சேர்வதற் கருள்வாயே
உத்தமா தான சற்குணநேயா
ஒப்பிலா மாமணிக் கிரிவாசா
வித்தகா ஞான சத்திநி பாதா
வெற்றி வேலாயுதப் பெருமாளே.
திருச்சிற்றம்பலம்
0 comments:
Post a Comment